வட மாகாண சபைக்கான தேர்தலின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் தற்போதுள்ள முதலமைச்சர் விக்னேஸ்வரனையே மீண்டும் களமிறக்குவதற்கு பல முனைகளில் முயற்சிகள் இடம்பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
குறிப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து விக்னேஸ்வரன் வெளியேறினால் வட மாகாண சபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்போ அல்லது விக்னேஸ்வரனின் அணியோ பெரும்பான்மை பலத்தினை பெறமுடியாத நிலை ஏற்படுவதோடு, தமிழரின் பேரம்பேசும் பலமும் வெகுவாக குறைந்து விடும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அவ்வாறு வாக்குகளும் ஆசனங்களும் சிதறடிக்கப்படும் போது, உரிமைகளை வென்றெடுத்தல் உள்ளிட்ட அனைத்து விடயங்களும் மோசமான நிலையை அடைந்து விடும் என பலரும் கருத்து வெளியிட்டுள்ளனர்.
இவ்வாறான நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் வட மாகாண சபைக்கு மீண்டும் விக்னேஸ்வரனை களமிறக்குவதற்கு பல முனைகளில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
எனினும் முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்கவதற்கு தயாராகவுள்ளதாக அறிவித்துள்ள இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை.சேனாதிராஜா அந்த முடிவிலிருந்து பின்வாங்கி விடக்கூடாது என அவருக்கு ஆதரவாண அணியொன்றும் அழுத்தங்களை பிரயோகித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.