குளோபல் தமிழ் செய்திகளுக்காக வினோதன்
ஒட்டுசுட்டான் பகுதியில் கடந்த மாதம் தமிழீழ விடுதலைப் புலிகளின் சீருடைகள், கொடிகளுடன் வெடிபொருட்கள் மீட்கப்பட்டதுடன் அது தொடர்பில் சில நபர்களும் கைது செய்யப்பட்டனர். இந்த நிகழ்வுமூலம் தமிழீழ விடுதலைப் புலிகள் மீண்டும் தமது ஆயுதச் செயற்பாடுகளை மேற்கொள்ளுவதாக காண்பிக்கப்பட்டது. இலங்கை அரசுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான யுத்தம் 2009ஆம் ஆண்டுடன் முடிவுக்கு வந்தது. யுத்தத்தின் முடிவில் தனிநாட்டுக்கான தமது ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்படுவதாகவும் விடுதலைப் புலிகள் அறிவித்தனர். இதற்குப் பின்னர் வடக்கு கிழக்கின் அரசியல் முனைப்புக்கள் ஜனநாயக ரீதியிலேயே முன்னெடுக்கப்படுகின்றன.
இந்த நிலையில் விடுதலைப் புலிகளின் பெயரை கூறி சில நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்று கடந்த 2014 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் மீண்டும் யுத்த நடவடிக்கை முயற்சிகளில் ஈடுபடுவதாக ஒரு நாடகம் மேற்கொள்ளப்பட்டது. அதனை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும் அவரது சகோதரர் கோத்தபாய ராஜபக்சவும் நடாத்தினர். இதன் போது விடுதலைப் புலிகளை மீண்டும் உருவாக்க முனைவதாக கோபி, அப்பன், தேவிகன் என்ற மூன்று முன்னாள் போராளிகளின் பெயர்கள் அறிவிக்கப்பட்டன. குறித்த முன்னாள் போராளிகளை ராஜபக்ச அரசாங்கம் முற்கூட்டியே கொன்றாகவும் அதன் பின்னர் அவர்களின் பெயரை பயன்படுத்தி ஒரு நாடகம் மேற்கொள்ளப்பட்டதாகவும் கூறப்பட்டது.
குறித்த முன்னாள் போராளிகளை முல்லைத்தீவு – வவுனியா வெடிவைத்தகல் காட்டிற்குள் சுட்டுக்கொன்றதாக அப்போதைய இலங்கை அரசு அறிவித்தது. 2009இல் யுத்தம் நடைபெற்ற போது நொடிக்கு நொடி போர் கட்சிகளை காட்டி வெற்றி கூச்சல் இட்ட அரசாங்கம் இதன்போது எந்த ஒரு ஆதாரங்களையும் காட்டாதது ஏன் என்பதே பெரும் சந்தேகங்களை எழுப்பியது. பின்னர் இந்த நிகழ்வுகளை சர்வதேச அரங்கில் இலங்கை அரசு தம்மை பாதுகாக்கும் கருவியாக பயன்படுத்த முயன்றது. இலங்கைக்கு தொடர்ந்தும் விடுதலைப் புலிகளின் அச்சுறுத்தல் காணப்படுவதாகவும் விடுதலைப் புலிகள் மீள் உருவாகும் வாய்ப்புக்கள் உள்ளதாகவும் இலங்கை அரசால் தெரிவிக்கப்பட்டது.
இவ்வாறே தற்போது ஒட்டுசுட்டான் நிகழ்வு இடம்பெற்றது. இதில் ஒட்டுசுட்டான் சம்பவம் தொடர்பில் கிளிநொச்சியை சேர்ந்த 24வயதான கேதீஸ்வரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இலங்கை காவல்துறை குறிப்பிட்டது. அத்துடன் அதற்குப் பிந்தைய நாட்களில் மேலும் சிலர் கைது செய்யப்பட்டார்கள். கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து இருந்து இருபது கிலோ கிளைமோர் குண்டு, கைக்குண்டு ஒன்று, றிமோட் கொன்ரோல் நான்கு, ரி56 துப்பாகி தோட்டாக்கள்- 98, விடுதலைப்புலிகளின் சீருடை – 2, சுமார் 45 வரையான விடுதலைப் புலிகளின் புலிக்கொடி என்பன மீட்கப்பட்டதாகவும் இலங்கை அரசவின் காவல்துறை தரப்பில் கூறப்பட்டது.
இந்த செய்திகள் வடக்கு கிழக்கு மக்கள் மத்தியில் பெரும் கவனத்தையோ, அதிர்ச்சியையோ ஏற்படுத்தவில்லை. ஒட்டுசுட்டானில் புலிகளின் கொடி, சீருடையுடன் ஒருவர் கைது என்ற செய்தி வந்தபோதே அதனை எவரும் பெரிதாக எடுக்கவில்லை. இந்த மனநிலை பல்வேறு செய்திகளை சொல்லுகின்றன மனநிலை. மாவீரர் துயிலும் இல்லங்களில் ஒன்று திரள்கின்ற மக்களுக்கு இந்த செய்தியோ ஏன் கவனத்தையும் ஏற்படுத்தவில்லை? என்பதை கூர்ந்து கவனிக்க வேண்டும். தமிழ் மக்களுக்கு எப்படியான விடுதலைப் புலிகள் தேவை என்பதையும் இலங்கை அரசுக்கும் உலகிற்கும் எப்படியான விடுதலைப் புலிகள் தேவை என்பதையுமே இங்கு உணர முடிகின்றது.
இந்த நிகழ்வு குறித்து தற்போதைய அரசாங்கம் எதையும் கூறவில்லை, தற்போதைய அரசாங்க அமைச்சரவைப் பேச்சாளர் ராஜிதவும் இதுவரையில் எதையும் கூறவில்லை. இந்த சம்பவத்தில் திறரமையுடன் செயற்பட்ட காவல்துறைக்கு கொழும்பில் விருது வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றுள்ளது. இதைப்போலவே அப்போது தேவிகன், அப்பன், கோபியை கொல்வதில் திறமையாக செயற்பட்டதாக கூறி இராணுவத்திற்கு கொழும்பில் விருது வழங்கப்பட்டதும் நினைவுகூரத்தக்கது. எல்லாம் சரி. இப்போது முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபாய ராஜபக்சவின் வலதுகரங்களின் ஒன்றான ரியர் அட்மிரல் சரத்வீரசேகர கூறியுள்ள விடயங்கள் தான் எல்லாச் சந்தேகங்களுக்கும் பகீர் விடையை அளித்துள்ளது.
ஒட்டுசுட்டான் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபர் முன்னர் பொட்டம்மானின் உளவுப்பிரிவில் பணியாற்றியவர் என்றும் அவர் உண்மையில் சிறிலங்கா இராணுவ உளவாளி எனவும் முன்னர் புலிகள் வைத்திருந்த தாக்குதல் திட்டங்களை அறிந்து கொள்வதற்காக இராணுவம் இவருக்கு அதிக பணத்தைவழங்கி உத்தியோகம் அளித்து உளவுத்தகவல்களை பெற்றதாகவும் இவ்வாறான உளவாளிகள் இன்னமும் முன்னாள் போராளிகளிடையே கலந்திருப்பதால் அவசரப்பட்டு அவ்வாறான ஒருவரை கைது செய்தமை அரசியல் தலையீட்டுடன் சிறிலங்கா புலனாய்வுத்துறைக்கு செய்யபட்ட ஒரு பெரிய துரோகம் எனவும், அட்மிரல் சரத் வீரசேகர கூறியுள்ளார்.
ஆக. இந்த நாடகம் இலங்கை இராணுவ புலனாய்வுத் துறையாலேயே முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஆனால் புலனாய்வுத்துறையை வைத்து இந்த நாடகத்தை ஏற்பாடு செய்தது யார் ? என்பதே இங்கெழும் முக்கிய கேள்வி. மகிந்த ராஜபக்ச – கோத்தபாய ராஜபக்சவின் வலது கையான ரியர் அட்மிரல் சரத்வீரசேகர கூறுகின்ற தகவலின் பிரகாரம், மீண்டும் விடுதலைப் புலிகள் என்ற நாடகத்தை ஒன்றில் அரசாங்கம் ஏற்பாடு செய்திருக்க வேண்டும். அல்லது அல்லது மகிந்த அணி ஏற்பாடு செய்திருக்க வேண்டும். ஆனால் ஒன்று மாத்திரம் உண்மையும் உறுதியுமாகும். மீண்டும் தமிழீழ விடுதலைப் புலிகள் மீளுருவாக்கம் என்பது பொய்யானது. அத்துடன் இந்த நாடகத்தின் பின்னால் தமிழ் மக்களின் உரிமையை மறுத்து தமது அரசியல் நலன்களுக்காக விளையாட்டு செய்யும் சூத்திரதாரிகளே உள்ளனர்.
குளோபல் தமிழ் செய்திகளுக்காக வினோதன்