தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்த 277 அரச உத்தியோகத்தர்களை பாதுகாப்பாற்றவே துப்பாக்கிச்சூடு நடத்தியதாக சென்னை உயர் நீமிமன்றத்தில் தமிழக காவல்துறை உதவி ஆணையாளர் டி.கே ராஜேந்திரன் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னை உயர் நீதிமன்றத்தில் பதிவு செய்த வழக்கை எதிர்த்து, தமிழக காவல்துறை சார்பில் ராஜேந்திரன் இன்று பதில் மனுவை தாக்கல் செய்தார்.
அதில், துப்பாக்கிச்சூடு நடந்த அன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சுமார் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கூடினர். அவர்களை கலைக்க எடுக்க முயன்ற அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்தன. அலுவலகத்தில் இருந்த 277 ஊழியர்களை காப்பாற்றவே துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஸ்டெர்லைட் வளாக குடியிருப்பில் இருந்த 150 குடும்பங்களையும் பாதுகாக்கும் பொருட்டு துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாகவும் அவரது மனுவில் கூறப்பட்டுள்ளது. தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான விசாரணை நியாயமான முறையில் நடப்பதாகவும் அதன் காரணமாக சிபிஐ விசாரணை நடத்தும் அவசியமில்லை என்றும் அவரது பதில் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.