சிறுவர் மற்றும் மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஷ்வரனை இராஜாங்க அமைச்சுப் பதவியில் இருந்து நீக்குமாறு ஜனாதிபதியிடம் பிரதமர் கோரியுள்ளார். வடக்கு கிழக்கில் விடுதலைப் புலிகளின் கை மீண்டும் ஓங்க வேண்டும் என, யாழ்ப்பாணத்தில் விஜயகலா மகேஷ்வரன் நேற்று வெளியிட்ட கருத்து நாடு முழுவதிலும் ஏற்படுத்திய அதிர்வுகள், இன்று பாராளுமன்றிலும் ஒலித்தது. இந்த நிலையில், பிரதி அமைச்சர் மீது முன்னெடுக்கப்பட உள்ள விசாரணைகள் நிறைவுபெறும் வரை அவரை பதவியில் இருந்து நீக்குமாறு பிரதமர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதேவேளை விஜயகலா மகேஷ்வரன் தெரிவித்த சர்ச்சைக்குறிய கருத்து தொடர்பில் விசாரணை நடத்தி உரிய சட்ட நடவடிக்கை எடுக்குமாறு சட்ட மா அதிபருக்கு, சபாநாயகர் அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
1 comment
யுத்தத்தின் பின்னரான தமிழ் மக்களின் வறுமை, வேலைவாய்ப்பின்மை, சமூக சீர்கேடுகள், இரணுவம் – பொலிசாரின் அத்து மீறல்கள், மக்களின் காணிகளை கையகப்படுத்தி வைத்திருக்கின்றமை, வாழ்வெட்டு கலாசாரமும் பின்னணியில் படையினர் இருப்பதும், போதைப்பொருட்களின் ஆதிக்கம், போதைப்பொருட் கடத்தல்களின் பின்னணியில் அரசியல்வாதிகள் – பாதுகாப்பு தரப்பினரின் பங்கு மற்றும் சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டுவதில் பொலிஸாரின் அசமந்தப் போக்கு போன்றவை இலங்கையின் வட மாகாணத்தில் நடந்து கொண்டு இருக்கின்றன என்று கூறிய விஜயகலா, இதை மாற்றி அமைக்க அரசாங்கம் நடவடிக்கைகளை எடுக்காததினால் தமிழீழ விடுதலை புலிகளை மீண்டும் உருவாக்க வேண்டும் என்பதே தமது முக்கிய நோக்கம் என்று யாழ்ப்பாணத்தில், இடம்பெற்ற நிகழ்வொன்றில் உண்மை நிலவரங்கள் பலவற்றை துல்லியமாக, பகிரங்க, வாக்குமூலம் போல் வெளிப்படுத்தி உள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர், இராஜாங்க அமைச்சர், விஜயகலா மகேஸ்வரன் என்று நினைக்கின்றேன்.
மேலே கூறிய குற்றங்களைச் செய்தவர்களை விசாரணைகள் நிறைவுபெறும் வரை பதவியில் இருந்து நீக்குமாறு பிரதமர் ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுக்கவில்லை. இதனால் நாடு முழுவதிலும் அதிர்வுகள் எற்படவில்லை. பாராளுமன்றிலும் ஒலிக்கவில்லை. குற்றங்களை செய்தவர்கள் தொடர்பில் விசாரணை நடத்தி உரிய சட்ட நடவடிக்கை எடுக்குமாறு சட்டமா அதிபருக்கு, ஜனாதிபதி மூலம் பிரதமர் அறிவுறுத்தவில்லை.