தாய்லாந்தில் குகைக்குள் சிக்கிய கால்பந்தாட்டக் குழுவினரையும் பயிற்சியாளரையும் மீட்க சில மாதங்கள் செல்லும் என அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது. தாய்லாந்தின் மா சே நகரில் குகை ஒன்றினுள் சிக்கிக் கொண்டிருந்த கால்பந்து அணியைச் சேர்ந்த 12 சிறுவர்களும், பயிற்சியாளரும் உயிருடன் இருப்பது 9 நாட்களின் பின்னர் கண்டறியப்பட்டது.
10 கி.மீ நீளம் உடைய இந்தக் குகைக்குள் 11வயது முதல் 16-வயதுவரை உடைய 12 கால்பந்து அணியினரும் பயிற்சியாளரும் சிக்கியிருந்தனர். தொடர்ந்து மீட்புப் பணி நடைபெற்று வருகின்ற போதும் வெள்ளம் சூழந்துள்ளதனால் சிறுவர்களை மீட்க சில மாதங்கள் ஆகும் என்று தாய்லாந்து ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்களுக்கு குறைந்தபட்சம் நான்கு மாதங்களுக்கு தேவையான உணவை வழங்க திட்டமிட்டிருப்பதாகவும் அங்கிருக்கும் யாருக்கும் நீச்சல் தெரியவில்லை என்பதனால் அவர்கள் நீச்சல் அடிக்க கற்க வேண்டும் அல்லது குகையிலுள்ள தண்ணீர் வற்றும்வரை காத்திருக்க வேண்டும் என அந்நாட்டு கடற்படை தளபதி தெரிவித்துள்ளார்.
சிறுவர்களை மீட்கும் முயற்சியில் 1000க்கும் மேற்பட்ட தாய்லாந்து ராணுவத்தினரும், இங்கிலாந்து, அமெரிக்கா, அவுஸ்திரேலியா உள்ளிட்ட 7 நாடுகளைச் சேர்ந்த மீட்புக் குழுக்களும் ஈடுபட்டுள்ளனர்.
அதேவேளை குகைக்குள் சிக்கியுள்ளவர்கள் தங்களைப் பற்றி அறிமுகப்படுத்திக்கொள்ளும் காணொளியை மீட்பு படையினர் வெளியிட்டுள்ளனர். சிறுவர்கள், நல்ல உடல் நிலையில் இருப்பதாகக் கூறுவதாக இந்த காணொளி எடுக்கப்பட்டுள்ளது. இச்சிறுவர்கள் வெளியே மீட்கப்படும் வரை, அவர்களுடனே தங்கியிருக்கும் முக்குளிப்பவர்களிடம் சிறுவர்கள் மகிழ்ச்சியாகப் பேசிக்கொண்டிருப்பது இந்த காணொளியில் காட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது