நான் மாநகர சபையில் உறுப்பினராக முடியாதாம்..
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
கொழும்பில் நிரந்தமாக வசித்து வந்த ஒருவர் தேசிய பட்டியல் ஊடாக பாராளுமன்ற உறுப்பினர் ஆகலாம் , அதேபோல மற்றுமொருவர் வடமாகாண முதலமைச்சர் ஆகலாம் ஆனால் யாழ்,மாவட்டத்தில் நிரந்தமாக வசிக்கும் நான் யாழ்.மாநகர சபை உறுப்பினர் ஆக இருக்க முடியாது என வழக்கு தொடுத்துள்ளார்கள் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரும் , யாழ்.மாநகர சபை எதிர்க்கட்சி உறுப்பினருமான வி. மணிவண்ணன் தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் இன்றைய தினம் புதன்கிழமை மதியம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில் ,
யாழ்.மாநகர சபை எல்லைக்குள் வசிக்காதவர் , மாநகர சபை உறுப்பினராக இருக்க முடியாது அதனால் மாநகர சபை செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கு இடைக்கால தடையுத்தரவு விதிக்க வேண்டும் எனவும் , நிரந்தமாக உறுப்புரிமை நீக்கப்பட வேண்டும் எனவும் கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றில் எனக்கு எதிராக மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
யாழ்.குருநகர் பகுதியில் வசிக்கும் நபர் ஒருவரின் பெயரிலையே குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. குறித்த நபருக்கு இவ்வாறு மனு தாக்கல் செய்யலாமா என்பது தெரியுமோ என்பதே எமக்கு சந்தேகமாக உள்ளது. அந்நபர் ஒரு அம்பு அதனை எய்தவர்கள் வேறு நபர்கள் என நம்புகின்றோம். அந்த மனு தொடர்பில் நீதிமன்றினால் எமக்கு இன்னமும் அறிவிக்கப்படவில்லை. எப்போது விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும் என்பது தொடர்பில் தற்போது எதுவும் தெரியாது.
வழக்கு எப்போது விசாரணைக்கு வந்தாலும் அதனை எதிர்க்கொள்ள நாம் தயாராகவே இருக்கின்றோம். மக்களுக்கு எதிரான பல விடயங்கள் நடைபெற்று வரும் வேளையில் அவற்றுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யாது. இந்த விடயத்திற்கு வழக்கு தாக்கல் செய்துள்ளார்கள் எனில் யாழ்.மாநகர சபையில் எமது பிரசன்னத்தை விரும்பவில்லை என்பது தெளிவாகின்றது.என மேலும் தெரிவித்தார்.