குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
மாகாண சபைக்கு இருக்கும் சில அதிகாரங்களை கூட பறித்து மத்திக்கு கொடுப்பதற்கு சிலர் முயற்சித்து வருகின்றனர் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரும் , யாழ்.மாநகர சபை எதிர்க்கட்சி உறுப்பினருமான வி. மணிவண்ணன் தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் இன்றைய தினம் புதன்கிழமை மதியம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில், சட்டம் ஒழுங்கு வடக்கில் சீர்குழைந்து உள்ளது என கூறுபவர்கள் சட்டம் ஒழுங்கை நிறைவேற்றும் அதிகாரத்தை வடக்குக்கு கொடுக்க வேண்டும் என குரல் கொடுக்க வில்லை. வடமாகாண முதலமைச்சர் மீது குறை கண்டுபிடிப்பதையே இலக்காக கொண்டு சிலர் செயற்பட்டு வருகின்றார்கள்.
நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் யாழில் குற்ற செயல்கள் அதிகரித்து உள்ளது. இளைஞர்கள் விழிப்புக்குழு அமைத்து அவற்றை கட்டுப்படுத்த வேண்டும் என கூறியுள்ளார். ஆனால் குற்ற செயல்களை கட்டுப்படுத்தும் அதிகாரத்தை பெற்றுக்கொடுக்க வேண்டும் என முயற்சிக்க வில்லை. அதனை கவனமாக தவிர்த்து உள்ளார். நேர்மையானவர் எனில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட அதற்கான அதிகாரத்தை மாகாணத்திற்கு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதை விடுத்து மாகாண சபைக்கு இருக்கும் சில அதிகாரங்களை கூட பறித்து மத்திக்கு கொடுக்க முயல்கின்றார்கள். முதலமைச்சருக்கு அமைச்சர்களை நீக்கும் அதிகாரமில்லை என வழக்கு தாக்கல் செய்தவரும் அவருக்கு பின்னால் இருந்து நெறிப்படுத்தியவர்கள் யார் என்பது அனைவருக்கும் தெரியும். சமஸ்டி , பதின்மூன்றாம் திருத்தம் என அனைத்தையும் கைவிட்டு மாகாண சபைக்கு ஒருக்கும் ஒரு சில அதிகாரங்களையும் பறித்து மத்தியிடம் கொடுக்கின்றார்கள்.
யாழ்.மாநகர சபை மர நடுகையின் போது இராணுவத்தினரை பயன்படுத்த வேண்டாம் என சபையில் தீர்மானம் எடுத்த பின்னரும் முதல்வர் இராணுவத்தினரை பயன்டுத்தி இருந்தார். வாக்குகள் வாங்கும் போது பேசும் தேசியம் வென்ற பின்னர் நூறு வீதம் தேசியத்திற்கு எதிராக செயல்படுகின்றார்கள் என தெரிவித்தார்.