தமிழகத்தின் 18 சட்டமன்ற உறுப்பினர்கள் மீதான தகுதிநீக்க வழக்கில், மூன்றாவது நீதிபதி சத்யநாராயணன் வரும் 23ஆம் திகதி முதல் 5 நாட்களுக்கு தொடர்ந்து விசாரணை நடத்தவுள்ளார். இந்த வழக்கில் இரண்டு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு கூறியமையால் 3ஆவது நீதிபதியாக விமலா நியமிக்கப்பட்டிருந்தார். எனினும் அவரை உச்ச நீதிமன்றம் நீக்கிய நிலையில் சத்யநாராயணனை 3ஆவது நீதிபதியாக நியமித்துள்ளது.
புதிய நீதிபதி வழக்கை பெறுப்பேற்ற சத்ய நாராயணன் இன்று மாலை 4 மணிக்கு தனது விசாரணையை ஆரம்பித்துள்ள நிலையில் முதலில் இரு தரப்பு வழக்குரைஞர்களையும் அழைத்து விசாரணையை நடத்துவது பற்றி ஆலோசித்தார். இந்த வழக்கை எப்போது தொடங்கி நடத்துவது என்பது குறித்தும் இதன்போது விவாதிக்கப்பட்டது.
அதன்பின்னர் வழக்கு விசாரணையை வரும் 23ஆம் திகதி காலை 10.30 மணிக்கு ஒத்திவைப்பதாக நீதிபதி அறிவித்தார். அத்துடன். 23-ம் திகதி முதல் 27-ம்திகதி வரை 5 நாட்கள் தொடர்ந்து விசாரணை நடத்தப்படும் என்றும் நீதிபதி சத்தியநாராயணன் குறிப்பிட்டார். நீதிபதி சத்யநாராயணன் தனது விசாரணையை ஒரு வாரத்திற்குள் முடிப்பராக இருந்தால் குறித்த நாளிலிருந்து ஒரு மாதத்திற்குள் இவ் வழக்கு தொடர்பான தீர்ப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.