இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததில் இருந்து ராஜபக்ஸ குடும்பத்தை பழிவாங்குவதுடன் முன்னாள் அமைச்சர்களையும், பழிவாங்கும் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதாக மகிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். சிறீலங்கா பொதுஜன முன்னணியின் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்ட போது இதனைத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை நாட்டின் சட்டதிட்டங்களுக்கு ஏற்ப செயற்பட வேண்டும் எனத் தெரிவித்த அவர், நாட்டின் நிர்வாகம் முற்றாக வீழ்ச்சி அடைந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.. அத்துடன் அரசாங்கத்தினரும், காவற்துறையினரும், தலைவர்களும் செயற்திறன் அற்றவர்களாக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். இன்றைய நிகழ்வில் ராஜபக்ஸ குடும்பத்தில் மும்மூர்த்திகள் என கருதப்படும் மகிந்த ராஜபக்ஸ, கோத்தாபய ராஜபக்ஸ, பசில் ராஜபக்ஸ ஆகியோர் ஒன்றாக கலந்துகொண்டதுடன், அவர்கள் முன்னிலையில் ஐக்கியமக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் மாகாண சபை உறுப்பினர்கள் 135 பேர், சிறீலங்கா பொதுஜன முன்னணியின் அங்கத்துவத்தை பெற்றுள்ளனர்.