164
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மருத்துவ நிலையங்கள் சேவை மனப்பான்மை மேலோங்கப் பெற்ற நிலையங்களாக செயற்பட வேண்டு மென்பது எமது எதிர்பார்ப்பு. பல்வேறு பிரத்தியேக மருத்துவ நிலையங்கள் மிகச் சிறப்பாக பணியாற்றுகின்ற போதும் அவற்றிற்கான கொடுப்பனவுகள் சாதாரண பொது மகன் ஒருவரால் தாங்கிக் கொள்ள முடியாத அளவிற்கு உயர்ந்திருப்பது வேதனையளிக்கின்றது என வடமாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
சுதந்திர சுகாதார சேவையினை வலுப்படுத்தும் நோக்கில் மாகாண குறித்தொதுக்கப்பட்ட கொடை நிதியின் கீழ் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் புதிதாக அமைக்கப்பட்ட மருத்துவ விடுதி,வைத்திய நிபுணர்களுக்கான தங்குமிட விடுதி மற்றும் அமுதம் ஆரோக்கிய உணவகம் ஆகியவற்றை இன்று வியாழக்கிழமை (5) மதியம் வைபவ ரீதியாக திறந்து வைத்த பின் உரை நிகழ்த்துகையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார்.
-அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,,,,,
வடமாகாணத்தில் சுதந்திர சுகாதார சேவையினை வலுப்படுத்தும் நோக்கில் மாகாண குறித்தொதுக்கப்பட்ட கொடை நிதியின் கீழ் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மருத்துவ விடுதி மற்றும் வைத்திய நிபுணர்களுக்கான தங்குமிட விடுதியுடன் சேர்த்து மத்திய சுகாதார அமைச்சின் நிதியத்தின் கீழ் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட அமுதம் ஆரோக்கிய உணவகத்தையும் வைபவ ரீதியாக திறந்து வைத்து உங்கள் முன் உரையாற்றுவதில் மகிழ்வடைகின்றேன்.
ஒரு பிரதேசத்தின் சுகவாழ்வுக்கு மருத்துவமனைகள் ஆற்றுகின்ற பங்களிப்புகள் அளப்பரியன. அந்த வகையில் மன்னார் மாவட்டத்தின் பொது மருத்துவமனையாகத் திகழும் மன்னார் மாவட்ட பொது மருத்துவமனை பல அத்தியாவசிய தேவைகளை உடையதாக மிகக் குறைந்த வசதிகளுடன் இயங்கி வந்துள்ளமை நாம் அனைவரும் அறிந்ததே.
மருத்துவர்களின் பற்றாக்குறை, மருத்துவ விடுதி பற்றாக்குறை போன்ற இன்னோரன்ன குறைபாடுகளுடனேயே இதுவரை காலமும் செயற்பட்டு வந்தது. எனினும் வடமாகாண சுகாதார அமைச்சின் முன்னெடுப்புகள் மூலம் இன்று மருத்துவ விடுதி, மருத்துவர்களுக்கான தங்குமிடவிடுதி ஆகியன புதிதாக அமைக்கப்பட்டு திறந்து வைக்கப்படுவதுடன் மத்திய சுகாதார அமைச்சின் நிதியத்தின் கீழ் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட அமுதம் ஆரோக்கிய உணவகத்தையும் மக்கள் பாவனைக்காக அந்த அமைச்சு வழங்கியிருப்பது மகிழ்வைத் தருகின்றது.
வடமாகாணத்தின் வைத்திய சேவைகள் பல குறைபாடுகள் இருப்பினும் இன்று மிகப் பெரிய அளவில் விரிவடைந்துள்ளன. யாழ் போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும்வைத்திய நிபுணர்களும், சத்திரசிகிச்சை நிபுணர்களும் உலகத் தரம் வாய்ந்தவர்களாக இன்று அடையாளப்படுத்தப்பட்டிருக்கின் றார்கள்.
இது எம் அனைவருக்கும் மகிழ்வைத் தருகின்றது.நேற்றைய தினம் யாழ் போதனா வைத்தியசாலைக்குச் சென்ற போது பல புதிய தாதியர்கள் வேலைகளில் ஈடுபட்டுள்ளதை அவதானித்தேன். சிறிது சிறிதாக இது காலம் வரையிருந்த குறைபாடுகள் பல நீங்குவதை அவதானித்து வருகின்றேன்.
மருத்துவ நிலையங்கள் சேவை மனப்பான்மை மேலோங்கப் பெற்ற நிலையங்களாக செயற்பட வேண்டு மென்பது எமது எதிர்பார்ப்பு. பல்வேறு பிரத்தியேக மருத்துவ நிலையங்கள் மிகச் சிறப்பாக பணியாற்றுகின்ற போதும் அவற்றிற்கான கொடுப்பனவுகள் சாதாரண பொது மகன் ஒருவரால் தாங்கிக் கொள்ள முடியாத அளவிற்கு உயர்ந்திருப்பது வேதனையளிக்கின்றது.
பணம் படைத்தவர்களும்,வசதி மிக்கவர்களும்,உயர்ந்த வேதனங்களில் கடமைகளில் ஈடுபடுபவர்களும் இவ்வாறான மருத்துவ வசதிகளை உயரிய சௌகரியங்களுடன் பெற்றுக் கொள்வதற்கு இப் பிரத்தியேக மருத்துவ நிலையங்கள் வாய்ப்பாக இருக்கின்றபோதும் பண வலிமை குன்றியவர்கள் அவ்வாறான தகுந்தமருத்துவ சேவைகளைப்பெற்றுக்கொள்ளல் என்பது அவர்களுக்கு எட்டாக் கனியாகவே காணப்படுகின்றது.
இதன் காரணத்தினால் தான் அரச மருத்துவமனைகள் இவ்வாறான மக்களுக்கு தமது சிறந்த சேவைகளை வழங்குவதற்கு தயார் நிலையில் இருத்தல் வேண்டும் என்று அபிப்பிராயப்படுகின்றோம்.
வடமாகாணத்தை பொறுத்த வரையில் மருத்துவ சேவை முழுமையாகவர்த்தக மயமாக்கப்படாத போதும் இவ்வாறான நிலை பிற்காலத்தில் கூட ஏற்பட்டுவிடக்கூடாது என்ற நல்ல சிந்தனையுடன் எமது மருத்துவர்கள் தமது சேவைகளை முன்னெடுப்பார்கள் என எண்ணுகின்றேன்.
இலங்கை மருத்துவப் பல்கலைக்கழகங்களில் இருந்து நூற்றுக்கணக்கான மாணவர்கள் தமது மருத்துவக் கல்வியை திறம்பட நிறைவு செய்துகொண்டு வெளியேறுகின்ற போதும் அவர்கள் தாம் பிறந்த மண்ணில் தமது உறவுகளுக்கு சேவையாற்ற விரும்பாது அதிக பணம் சம்பாதிப்பதையும் தமது சுக வாழ்க்கையையும் மட்டும் மனதில் கொண்டு மேலைத்தேயங்களுக்கு வேலைவாய்ப்புக்களைத் தேடி செல்வது வருத்தத்திற்குரியது.
எமது மண்ணில் ஆண்டு 1 தொடக்கம் மருத்துவக் கல்லூரியின் இறுதி ஆண்டுவரை முழுமையான இலவசக் கல்வியைப்பெற்றது மட்டுமன்றி தமது பல்கலைக்கழக காலத்தில் பல்கலைக்கழக மானியங்கள்,மகாப்பொல போன்ற மானியங்களையும் பெற்று தமது கல்வி அறிவுகளை மேம்படுத்திய பின்னர் எமது தமிழ்ப் பேசும் மருத்துவர்கள்வெளிநாடுகளுக்கு உடனடியாக ஓடிச் செல்வது சிறப்பானது அல்ல.
. அவ்வாறு செய்வதால் இங்கு வாழ் தமிழ் மக்களின் பலமும் வலுவும் வளமும் குன்றுவதை அவர்கள் உணர்கின்றார்கள் இல்லை.
எனினும் பல மருத்துவர்கள் அவர்கள் பொருளாதார நிலையில் மிகப் பெரிய அளவில் பொருள்களை ஈட்டாத நிலையிலும் தமது மருத்துவச் சேவையை இறைவனுக்கு அர்ப்பணஞ் செய்தவர்கள் போல எதுவித மேலதிக கட்டணங்களோ அல்லது ஊக்குவிப்புக்களையோ எதிர்பாராது இரவு பகலாக தமது சேவைகளை ஆற்றிவருவது நன்றியுடன் நோக்கற்பாலது.
எமது வாழ்க்கை முறைகளும், நாகரீகங்களும், புதிய உணவுப் பழக்க வழக்கங்களும் வளர்ச்சி அடைய அடையஎமது உடல்களைத் தாக்குவதற்கென்றே சுற்றித்திரிகின்ற நுண்கிருமிகளும் நோய் நச்சுக்களும்தம் பங்கிற்கு வளர்ச்சி பெறுகின்றன.
இதனால் தற்போது பல புதிய புதிய நோய்கள் உருவாகின்றன. இவ்வாறு உருவாகின்ற நோய்களின் தன்மை,அந்த நோய்த்தாக்கத்தை உண்டாக்கக்கூடிய கிருமிகளை அழிக்கும் முறைமை போன்றவை பற்றி எமது மருத்துவ ஆராய்ச்சி நிலையங்கள் தொடர்ந்து ஆராய்ந்து வருகின்றன.
ஒவ்வொரு வகையான புதிய நோய்த்தாக்கங்களுக்கும் அதற்குரிய மருந்து வகைகளை குறுகிய காலத்தில் அடையாளம் கண்டு அவற்றைப் பயன்படுத்துவதன் மூலம் நோய்த் தாக்கங்களில் இருந்து விடுபடலாம்சில தருணங்களில் நோய்க்கிருமிகள் எமது நவீனமருத்துவ முறைமைகளுக்கு சவாலாக அமைந்துவிடுவதால் இருந்திருந்து விட்டு உயிரிழப்புக்கள் ஏற்படுவது தவிர்க்க முடியாததாகிவிடுகின்றது.
மருத்துவ சேவை என்பது இறை பணிக்கு ஒப்பானது. சேவை மனப்பான்மையுடன் சிறப்பாக கடமையாற்றும் மருத்துவர்கள் மக்களிடையே இறை அந்தஸ்தையே பெற்று விடுகின்றார்கள். பழைய காலங்களில் ஒரு கிராமத்திற்கு ஒரு மருத்துவர் மட்டும் நியமிக்கப்பட்டிருப்பார்.
அந்தக் கிராமத்தில் இரண்டொரு டிஸ்பென்சரிகளில் அவர் பகல் நேரத்தில் தமது மருத்துவ சேவைகளை வழங்குவார்.இரவு நேரத்தில் நடுநிசியில் கூட யாருக்காவது வருத்தம்என அவரின் இருப்பிடத்திற்கு சென்று தெரியப்படுத்தினால் உடனேயே உடையை அணிந்துகொண்டு ஒரு சிறிய மருந்துப் பெட்டியையும் எடுத்துக் கொண்டு அவர்களின் வீட்டை நோக்கி சென்றுவிடுவார்.
அங்கு நோயாளரைப் பரிசோதித்து அவருக்கு தேவையான மருந்துகளை தமது மருந்துப் பெட்டியில் இருந்து சேகரித்து கொடுத்துவிட்டு மகிழ்ச்சியுடன் வீட்டிற்குத் திரும்புவார். இதற்கென எதுவித கட்டணமும் அந்த நாட்களில் அறவிடப்படுவதில்லை.
இவ்வாறான மருத்துவர்கள் உண்மையிலேயே போற்றி வணங்கப்பட வேண்டியவர்கள். இவர்களின் முன்னுதாரணத்தைப் பின்பற்றிஎமது தற்கால வைத்தியர்களும் செயற்பட எத்தனிக்க வேண்டும் என இத் தருணத்தில் வினயமாக வேண்டி நிற்கின்றேன். எமது மருத்துவ அறிவு மக்கள் சேவைக்கே என்ற எண்ணம் மேலோங்கிவிட்டதென்றால் பணம் ஒரு பொருட்டாக மாட்டாது.
இங்கு திறந்து வைக்கப்பட்ட மருத்துவர்களுக்கான தங்குமிட விடுதிகள்அவர்களுக்குப் பல சௌகரியங்களை வழங்குவன.இரவில் கூட அவர்கள் இங்கு தங்கியிருந்து தமது மருத்துவ சேவைகளை முன்னெடுப்பதற்கு இவை உறுதுணையாக அமைவன.
அதே போன்று புதிதாக அமைக்கப்பட்ட மருத்துவ விடுதிகள் கூடுதலான நோயாளர்களை விடுதிகளில் தங்க வைத்து மருத்துவ வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு இலகுவாக அமையும். மேலும் மருத்துவமனையில் உருவாக்கப்பட்ட அமுதம் ஆரோக்கிய உணவகம் மருத்துவமனைகளில் தங்கியிருந்து சிகிச்சை பெறுபவர்கள், மருத்துவர்கள், மருத்துவ உதவியாளர்கள் மற்றும் இங்குவரும் பொது மக்கள் தமக்குத் தேவையான உணவுப் பொருட்களையும் மற்றும் பொதி செய்யப்பட்ட உணவு வகைகளையும் பெற்றுக் கொள்வதற்கு இலகுவாக அமையும் என மேலும் தெரிவித்தார்.
Spread the love