குற்ற வழக்குகளில் தண்டனை பெற்றவர்கள் கட்சிகளுக்கு தலைமை வகிப்பது குறித்த வழக்கில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு உச்சநீதிமன்றம் ஆணை அனுப்பியுள்ளது. ஊழல் மற்றும் குற்ற வழக்குகளில் தண்டனை பெற்றவர்கள், அரசியல் கட்சிகளுக்கு தலைமை வகிக்க தடை விதிக்க வேண்டும் என பா.ஜ.க.வின் சிரேஸ்ட தலைவரும், வழக்கறிஞருமான அஸ்வனி உபாத்யாயா வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கினை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம், இதுதொடர்பாக, தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சிகளும் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளடன் வழக்கின் இறுதி விசாரணை எதிர் வரும் 13-ம் திகதி நடைபெறும் எனவும் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
இதேபோல், குற்றபின்னணி உடைய அரசியல்வாதிகள் தேர்தலில் போட்டியிடக்கூடாது என அஸ்வனி உபாத்யாயா தொடர்ந்த மற்றொரு வழக்கில், அவர்களுக்கு வாழ்நாள் தடை விதிக்கலாம் என தேர்தல் ஆணையகம் கருத்து தெரிவித்து இருந்தது. இந்த வழக்கின் மீதான விசாரணையும் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.