குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…
இலங்கை மத்திய வங்கியின் பிணை முறி மோசடி விவகாரம், ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தில் நடந்த ஊழல், மோசடிகளை விசாரிக்க ஜனாதிபதி ஆணைக்குழுக்களை நியமித்ததை போல, சீன நிறுவனத்தின் 7.6 மில்லியன் டொலர் பணம் முன்னாள் ஜனாதிபதியின் தேர்தல் பிரசாரத்திற்கு வழங்கப்பட்டுள்ளமை குறித்து விசாரிக்க ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்றை நியமிக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுப்பதாக ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்துள்ளார்.
ஹிட்லரை ஆட்சிக்கு கொண்டு வர முயற்சிப்போர் தேசிய பாதுகாப்பு தொடர்பில் பூச்சாண்டிகளை உருவகித்து காட்டுகின்றனர். அவர்கள் கூறுவது போல் தேசிய பாதுகாப்புக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை.நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணாக செயற்பட்டிருந்தால், சட்டமா அதிபரின் ஆலோசனையை பெற்று அவரது நாடாளுமன்ற உறுப்பினர் பதவி தொடர்பில் தீர்மானம் ஒன்றை எடுக்க வேண்டும்.
தென் பகுதி தலைவர்கள் எப்போதும் வடக்கு மக்களை ஏமாற்றி வந்துள்ளனர். அதேபோல் வடக்கின் அரசியல் தலைவர்கள் கருவேப்பிலையாக இருக்காமல், தமது பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ள வேண்டும்.எமது அரசாங்கத்தின் கீழ் மட்டுமே நாடாளுமன்ற உறுப்பினர்கள் இவ்வாறு நெஞ்சை நிமிர்த்தி பேச முடியும். எதிர்க்கட்சியை சேர்ந்த சிலர் இதனை பயன்படுத்தி மகிழ்ச்சியில் ஆட்டம் போட பார்க்கின்றனர்.
அரந்தலாவையில் பிக்குனளை கொன்ற கருணாவை அழைத்து வந்து கட்சியில் உப தலைவர் பதவியை கொடுத்து, அமைச்சு பதவிகளை வழங்கிய போது பூனைக்குட்டிகளை போல் வேடிக்கை பார்த்தனர்.பிள்ளையானை கிழக்கு மாகாண முதலமைச்சராக நியமிக்கும் போது இவர்கள் பூனைக்குட்டிகளை போல் வேடிக்கை பார்த்தனர். எனினும் நாட்டுக்கு துரோகம் இழைக்கும் எதுவாக இருந்தாலும் எதிர்க்கும் உரிமை எமது அரசாங்கத்தின் கீழ் கிடைத்துள்ளது. இதனால், சீன நிறுவனம் வழங்கியதாக கூறப்படும் 7.6 மில்லியன் டொலர் பணம் தொடர்பான பிரச்சினைகளை வெறுமனே விட்டு விட முடியாது. அப்படி செய்ய நாங்கள் இடமளிக்க மாட்டோம்.
தமிழ் மக்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்பதை நாங்கள் நம்புகிறோம். எனினும் மீண்டும் ஆயுதங்களை கையில் எடுக்கும் குழுக்கள் உருவாக வேண்டும் என்பது பிரச்சினை தீர்வுகாணும் முறையல்ல. முழு நாட்டில் உள்ள பிரச்சினைகளை மறந்து விட்டு வடக்கிற்கு மட்டும் அபிவிருத்தியையும் தொழில் வாய்ப்புகளையும் வழங்க முடியாது எனவும் எஸ்.எம். மரிக்கார் குறிப்பிட்டுள்ளார்.