குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
சிறைச்சாலையில் இருக்கும் பேர்ப்பச்சுவல் ட்ரெசரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜூன் அலோசியஸின் மெத்தைக்கு கீழே இருந்து கண்டுபிடிக்கப்பட்ட தொலைபேசிகள் மூலம் யாருக்கு அழைப்பு எடுக்கப்பட்டது மற்றும் அவருக்கு மூன்று தொலைபேசிகளும் சிம் அட்டைகளும் எப்படி கிடைத்தன என்பதை அரசாங்கம் உடனடியாக வெளியிட வேண்டும் என கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தேனுக விதானகமகே தெரிவித்துள்ளார்.
பத்தரமுல்லையில் உள்ள ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
சிறைச்சாலையில் இருக்கும் அர்ஜூன் அலோசியஸின் மெத்தைக்கு கீழ் இருந்து மூன்று செல்லிடபேசிகள் மற்றும் 5 சிம் அட்டைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த உண்மையை நீதிமன்றத்தில் தெரிவித்தமை குறித்து சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு நன்றி கூறுகிறோம். சிறைச்சாலையில் இருப்பவருக்கு எப்படி செல்லிடப் பேசிகளும், சிம் அட்டைகளும் கிடைத்தன என்பதை அரசாங்கம் உடனடியாக வெளியிட வேண்டும். இந்த தொலைபேசிகள் மூலம் யாருக்கு அழைப்புகள் எடுக்கப்பட்டன என்பதையும் வெளியிட வேண்டும். சிறைச்சாலையில் அடைக்கப்படும் நபர்களுக்கு மெத்தைகளோ, தொலைபேசி வசதிகளோ கிடைக்காது எனவும் தேனுக விதானகமகே குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும் ஏற்கனவே சிறையில் அடைக்கப்பட்டிருந்த, நாமல் ராஜபக்ச, விமல் வீரவங்ச, உதய கம்மன்பில, மகிந்தானந்த அளுத்கமகே, பசில் ராஜபக்ச, யோசித்த ராஜபக்ச உட்பட கூட்டு எதிர்க்கட்சியினரும் சிறைச்சாலையில் தொலைபேசிகளை பயன்படுத்தியதாக சிறைச்சாலை தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.