குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகை சுமத்தியுள்ள குற்றச்சாட்டு சம்பந்தமாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நாடாளுமன்றத்திற்கு தெளிவுப்படுத்த வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற குழு தலைவர் தினேஷ் குணவர்தன எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே பிரதமர் இதனை கூறியுள்ளார்.
தனியார் வானொலி ஒன்றுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு வருவதாக தினேஷ் குணவர்தன குறிப்பிட்டுள்ளார். அப்போது பதிலளித்த பிரதமர், அரசாங்கம் ஊடக சுதந்திரத்தை ஏற்படுத்தியது போல் அதனை பாதுகாக்கும். நெத் எப்.எம்மில் வெளியிடப்பட்ட செய்தி தொடர்பான முறைப்பாடு தொடர்பாக பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். கடந்த 19 ஆம் திகதி ஒலிப்பரப்பான செய்தி ஒன்று தொடர்பாக பிரதியமைச்சர் எழுத்து மூலமான முறைப்பாடு ஒன்றை செய்துள்ளார். செய்தியை வழங்கிய இரண்டு ஒலிப்பரப்பாளர்களிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. மேலும் மூன்று பேரிடம் வாக்குமூலம் பெற அனுமதி கோரப்பட்டுள்ளது. நெத் எப்.எம். விவகாரத்தில் அரசாங்கம் தலையிடவில்லை. ஊடகவியலாளர்களை அச்சுறுத்தும் நபர்களுக்கு நாங்கள் எதிரானவர்கள். நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகையின் ஆசிரியருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. என பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.