இந்தியா முழுவதிலும் பாராளுமன்றத் தேர்தலுடன் அனைத்து மாநில சட்டமன்றத் தேர்தலையும் ஒரே சமயத்தில் நடத்துவது சாத்தியமா என்பது குறித்து அரசியல் கட்சிகளிடம் சட்ட ஆணையகம் இன்று கருத்துக்களை கேட்க உள்ளது. 2019மற்றும் 2024-ம் ஆண்டுகள் என இரண்டு கட்டங்களாக ஒரே நேரத்தில் தேர்தல் திட்டத்தை நடைமுறைப்படுத்தலாம் என்று சட்ட ஆணையகம் சிபாரிசு செய்துள்ளது.
அதாவது, 2021-ம் ஆண்டுக்குள் சட்டசபை தேர்தலை சந்திக்க உள்ள மாநிலங்களில் 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து சட்டசபை தேர்தல் நடத்தலாம் என்றும், மற்ற மாநிலங்களில் 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து சட்டசபை தேர்தல் நடத்தலாம் என்றும் சிபாரிசு செய்துள்ளது.
இதை நடைமுறைப்படுத்த சில மாநில சட்டசபைகளின் பதவிக்காலத்தை குறைக்கவும் வேறு சில மாநிலங்களின் பதவிக்காலத்தை நீட்டிக்க வேண்டியும் ஏற்படலாம இதற்காக அரசியல் சட்டத்திலும், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்திலும் திருத்தம் செய்ய சட்ட ஆணையம் சிபாரிசு செய்துள்ளது.
இந்நிலையில், ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்து கருத்தொற்றுமையை உருவாக்க அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்த சட்ட ஆணையகம் முடிவு செய்தது. அதன்படி டெல்லியில், இன்றும் நாளையும் ஆலோசனை கூட்டம் நடக்கிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க வருமாறு அங்கீகரிக்கப்பட்ட 7 தேசிய கட்சிகள் மற்றும் 59 மாநில கட்சிகளுக்கு சட்ட ஆணையகம் அழைப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது