முன்னாள் பொருளாதாரா அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவின் மனைவி புஸ்பா ராஜபக்சவின் அமைப்பிற்கு சீனாவை சேர்ந்த துறைமுக நிறுவனமொன்று பணம் வழங்கியமை குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க இது குறித்த காசோலையொன்றை வெளியிட்டுள்ளதனை அடுத்து, இந்தத சர்ச்சை மீண்டும் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
2012 இல் புஸ்பா ராஜபக்ச மன்றத்திற்கு 19.41 மில்லியன் பெறுமதியான காசோலை ஒன்றை கொழும்பு இன்டநசனல் கொன்டய்னர் என்ற நிறுவனம் வழங்கியுள்ளது.
மே 21 2012 திகதியிடப்பட்ட குறிப்பிட்ட காசோலை கொமேர்சல் வங்கியில் உள்ள புஸ்பா ராஜபக்ச மன்றத்தின் பெயரிற்கு அனுப்பபட்டுள்ளது.
கொழும்பு இன்டநசனல் நிறுவனம் கொழும்பு துறைமுகத்தின் ஒரு பகுதியில் கூட்டு முயற்சியில் தொடர்புபட்டுள்ளதாகவும், இந்த நிறுவனத்தின் 85 வீத பங்குகள் ஹொங்ஹொங்கை தளமாக கொண்ட சிஎம் போட்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமாகவுள்ளதாகவும் கூட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த பணப்பரிமாற்றம் தொடர்பில் நிதிகுற்றங்கள் தொடர்பிலான விசேட காவற்துறைப் பிரிவினர் ஏற்கனவே விசாரணைகளை மேற்கொண்டிருந்ததாகவும், கொழும்பு நீதிமன்றமொன்று இது குறித்த ஆவணங்களை காவற்துறையினரிடம் கையளிக்குமாறு, வங்கிகளுக்கு உத்தரவிட்டிருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது தொடர்பாக காவற்துறையினர் வங்கிகள் உட்பட பலரிடம் வாக்குமூலங்களை பெற்றுள்ளதாகவும், இது குறித்து விசாரணைகள் இடம்பெறுவதாகவும் காவற்துறையினர் நீதிமன்றத்திடம் தெரிவித்துள்ளனர்.
நிதிக்குற்றங்கள் தொடர்பிலான விசேட காவற்துறைப் பிரிவினர் பி அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளதுடன் விசாரணையை அறிக்கையை இலங்கை சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.