குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
புலிகளின் உறுப்பினரான சுதாகரனை வடக்கில் உள்ள தொண்டர் அமைப்புகள் அரசியல் கைதி என்று அழைக்கின்றனர்.
ஆயுதள் தண்டனை கைதியான கிளிநொச்சியை சேர்ந்த ஆனந்த சுதாகரனை உரிய நீதிமன்ற செயற்பாடுகளுக்கு அமைய மாத்திரமே விடுதலை செய்ய முடியும் என ஜனாதிபதியின் செயலாளர், வடக்கு மாகாண கல்வியமைச்சர் கந்தையா சர்வேஸ்வரனுக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.
கொழும்பில் குண்டு வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணைகளில் ஆனந்த சுகாதாரனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
அவரது மனைவி புற்றுநோய் காரணமாக சில மாதங்களுக்கு முன்னர் உயிரிழந்தார். மனைவியில் மரண சடங்கில் கலந்துக்கொள்ள சுதாகரனுக்கு சிறைச்சாலை அனுமதி வழங்கியிருந்தது. அவர் சிறைச்சாலைக்கு திரும்பிச் செல்ல சிறைச்சாலை பேருந்தில் ஏறிய போது அவரது ஏழு வயது மகள் அவருடன் சிறைச்சாலை பேருந்தில் ஏற முயற்சித்த சம்பவம் சமூகத்தில் பரவலாக பேசப்பட்டதுடன் பெரிய அனுதாப அலை ஏற்பட்டது.
விடுதலைப் புலிகளின் உறுப்பினர் என்ற வகையில் சுதாகரனுக்கு சிறைத்தண்டனை கிடைத்துள்ள போதிலும் வடக்கில் உள்ள தொண்டர் அமைப்புகள் அவரை அரசியல் கைதி என்றே அழைத்து வருகின்றனர்.
பல தொண்டர் அமைப்புகள் இணைந்து ஆனந்த சுதாகரனை விடுதலை செய்யுமாறு கோரி ஒரு லட்சம் கையெழுத்துக்களை திரட்டி ஜனாதிபதிக்கு வழங்க அதனை, வடக்கு மாகாண கல்வியமைச்சரிடம் கையளித்திருந்தன. இதற்கு அமையவே ஆனந்த சுதாகரனை உரிய நீதிமன்ற செயற்பாடுகளின் அடிப்படையில் மாத்திரமே விடுதலை செய்ய முடியும் என ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது. இது சம்பந்தமாக அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுப்பதாகவும் செயலகம் குறிப்பிட்டுள்ளது.