ஓபிஎஸ் பன்னீர்ச்செல்வம் உட்பட 11 சட்டமன்ற உறுப்பினர்களின் தகுதி நீக்க வழக்கு இன்றையதினம் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகின்றது. 2017-ம் ஆண்டு பெப்ரவரி மாதம் சட்டசபையில் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி அமைப்பதற்காக அவர் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்திய போது நம்பிக்கை வாக்கெடுப்பில் தற்போதைய துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் உட்பட 11 பேர் கொறடாவின் உத்தரவை மீறி அரசுக்கு எதிராக வாக்களித்தனர்.
எனினும் சபாநாயகர் 11 பேரையும் தகுதி நீக்கம் செய்யப்படாத நிலையில் ஆளுநரிடம் முதல்வருக்கு எதிராக கடிதம் கொடுத்த தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்திருந்தார். இந்த நிலையில் மேற்படி 11 பேரையும் தகுதி நீக்கம் செய்ய கோரி திமுக சார்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
எனினும் சபாநாயகரின் தீர்ப்பில் தலையிட முடியாது என உயர்நீதிமன்ற தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டதனையடுத்து அதற்கு எதிராக டிடிவி தினகரனும், திமுகவும் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்தநிலையில் இதற்கு எதிரான வழக்கு மீது இன்று விசாரணை நடக்கிறது. 18 உறுப்பினர்களின் வழக்கு விசாரணை நடந்து வரும் நிலையில், இந்த வழக்கு விசாரிக்கப்பட இருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.