இனப்பிரச்சினைக்கான தீர்வை கேட்டால், விடுதலைப் புலிகள் தற்போது இல்லை எனக் கூறி இழுத்தடிப்பதன் மூலம் மீண்டும் ஆயுதங்களுடன் வாருங்கள் என்கிறார்கள் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரான நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
கரவனெல்ல – மாகம்மன பிரதேசத்தில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை கூறியதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இதேவேளை விடுதலைப் புலிகள் அமைப்பு சம்பந்தமாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் கூறியதில் எந்த தவறும் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகள் செயற்பட்ட காலத்தில் ஆட்சியில் இருந்த அரசாங்கங்கள் பல்வேறு வாக்குறுதிகளை கொடுத்தன. எனினும் அவற்றை நிறைவேற்றவில்லை எனவும் சுமந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
புதிய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கும் பணிகளை துரிதப்படுத்த வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே முன்னோக்கி செல்ல முடியும் என்றும் ஒரு நாடு என்ற வகையில் முன்னோக்கிச் செல்ல முடியாத நிலைமையில் நாம் இருக்கின்றோம். இதுதான் உண்மை என்றும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை நாடு முன்னோக்கிச் செல்ல வேண்டுமாயின் இனப்பிரச்சினைக்கு சரியான தீர்வை கொண்டு வர வேண்டும் எனக் கூறிய அவர் விடுதலைப் புலிகள் இருந்த காலத்தில் அனைத்து அரசாங்கங்களும் யோசனைகளை முன்வைத்தன. விடுதலைப் புலிகள் தற்போது இல்லை என்பதால், அவை தேவையில்லை எனக் கூறுவதாகவும் தெரிவித்தார்.
இப்படி கூறுவதன் செய்திதான் ‘மீண்டும் ஆயுதங்களுடன் வாருங்கள்’ என்பதாகும். அப்படி வந்ததால்தான் அரச அதிகாரங்களை நாங்கள் பகிர்ந்துக்கொள்ள முடியும் என்பதே அரசியல் தீர்வு தேவையில்லை என்று கூறுபவர்களின் கூற்றாக இருக்கின்றது என்றும் சுமந்திரன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.