இறுதி யுத்தத்தின்போது சரணடைந்த நிலையில் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் இலங்கை இராணுவத்தின் உயர் அதிகாரிகளிடம் விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதாக காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இராணுவத்தினரால் கைது செய்யயப்பட்டு பின்னர் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில், அவர்களது உறவினர்களால் வழங்கப்படும் தகவல்களுக்கமைய குறித்த விசாரணைகள் முன்னெடுக்கப்படுவது குறித்து ஆராய்ந்து வருவதாக காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தின் தவிசாளர் சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போது இதனைத் தெரிவித்துள்ள அவர் எனினும் உடனடியாக இராணுவ அதிகாரிகளை அழைத்து விசாரணைகளை மேற்கொள்ள முடியாது எனவும் அதற்கு முறையான திட்டமொன்று அவசியமெனவும் குறிப்பிட்டுள்ளார்.
வன்னி கட்டளைத்தளபதி ஜெனரல் ஜகத் ஜயமசூரிய மற்றும் 58ஆவது படைப்பிரிவின் கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா ஆகியோரிடம் இறுதி யுத்தத்தின்போது சரணடைந்து பின்னர் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டுமென உண்மை மற்றும் நீதிக்கான செயற்றிட்டம் ஏற்கனவே வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.