கிழக்குப் பல்கலைக்கழகம்…
கிழக்குப் பல்கலைக்கழக சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் மூன்றாவது சர்வதேச மாநாடு நிறுவகத்தின் பணிப்பாளர் கலாநிதி சி. ஜெயசங்கர் அவர்களின் வழிகாட்டலில் ‘உள்ளுர் அறிவு முறைமைகள் மற்றும் தொட்டுணராப் பண்பாட்டு மரபுகளைப் பிரதானப்படுத்துவதன் முக்கியத்துவம்’ என்னும் தொனிப்பொருளில் ஜூலை 15ஆம் திகதி முதல் 18ஆம் திகதி வரை நிறுவக வளாகத்தில் நடைபெற இருக்கின்றது. 2016ஆம் ஆண்டு முதல் வருடந்தோறும் நடாத்தப்பட்டு வரும் இந்த சர்வதேச மாநாடானது புலமைசார் ஆக்கங்களையும் ஆய்வுக் கட்டுரைகளையும் சமர்ப்பிப்பதற்கான ஒரு களமாக மட்டுமல்லாது விளிம்புநிலை மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் பாரம்பரியக் கலைகளையும் கலாசாரப் பாரம்பரியங்களையும்; மீளுருவாக்கம் செய்வதற்குமான ஒரு பிரயத்தனமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
பல்கலைக்கழகம் எனப்படுவது ஒரு தனியான நிலத்துண்டல்ல. அது சமூகத்தின் ஒரு அங்கமாகும். அந்தவகையில், ஒவ்வொரு பல்கலைக்கழகமும் அது சார்ந்த மக்களின் வளர்ச்சியிலும் அபிவிருத்தியிலும் பங்கெடுத்துக் கொள்வதும் சமூகத்துக்கான வழிகாட்டியாக விளங்குவதும் கட்டாய கடமையாகும். அத்தகைய பரந்துபட்ட நோக்கிலேயே கடந்த மூன்று ஆண்டுகளாக சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவக சர்வதேச மாநாட்டின் தொனிப் பொருட்கள் வடிவமைக்கப்பட்டு வந்துள்ளன. 2018ஆம் ஆண்டுக்கான, ‘உள்ளுர் அறிவு முறைமைகள் மற்றும் தொட்டுணராப் பண்பாட்டு மரபுகளைப் பிரதானப்படுத்துவதன் முக்கியத்துவம்’ என்னும் தொனிப்பொருளானது தன்னிறைவுள்ள ஒரு சமூகத்தைக் கட்டியெழுப்புவதற்கான அறிவையும் அனுபவங்களையும் பகிர்வதற்கும் பெறுவதற்குமான நோக்குடன் வடிவமைக்கப்பட்டதாகும்.
இன்றைய உலகமயமாதல் காலகட்டத்தில் நவீன தொழிநுட்பமும் அறிவியலும் எல்லோருக்கும் எங்கும் கிடைக்கக் கூடியதாக உள்ளது. அவை எல்லோருக்கும் உரியதாக உள்ளன. அந்தவகையில், நவீன தொழிநுட்பங்களையும் அறிவியலையும் பிரதான மூலதனமாகக் கொண்டு தொழிற்துறையில் எவரும் போட்டியிடவோ தமது பொருளாதாரத்தை வளப்படுத்தவோ முடியாத நிலை உள்ளது. ஏனெனில், அது எங்கும் ஒரே மாதிரியாக உள்ளன. தொழிநுட்ப அறிவை வைத்து எல்லோராலும் எல்லாமும் செய்ய முடியும். வழங்குவதற்கும் விற்பதற்குமே அங்கு ஆட்கள் இருப்பர். வாங்குவதற்கும் பெறுவதற்கும் யாரும் இருக்க மாட்டார்கள். இந்நிலையில், அந்தந்த சமூகங்கள் தத்தமக்கென உரிய உள்ளுர் அறிவுமுறையை மையமாகக் கொண்டு தமது தொழிற்துறையையும் பொருளாதாரத்தையும் வாழ்வாதாரத்தையும் வளர்த்துக் கொள்ள வேண்டியுள்ளது. பல தூர கிழக்கு நாடுகள் மற்றும் இலத்தீன் அமெரிக்க நாடுகள் அந்தவகையில்தான் இன்று தொழிற்துறையிலும் பொருளாதாரத்திலும் பாரிய வளர்ச்சியைக் கண்டு வருகின்றன.
உள்ளுர் அறிவுமுறை என்பது, ஒரு சமூகம் தனது வரலாற்றின் ஊடாகவும் சூழலுடனான அனுபவங்கள் ஊடாகவும் பெற்றுக்கொண்ட அறிவுத் தொகுதியாகும். இந்த அறிவுமுறையானது கிராமங்கள் அல்லது பழங்குடியினருக்கு மட்டுமானது அல்ல. கிராமங்கள், நகரங்கள், நிலையான – நிலையற்ற சமூகங்கள் என அனைத்துச் சமூகங்களிடமும் இந்த உள்ளுர் அறிவுமுறை காணப்படுகின்றது. உதாரணமாகப் போர்க்காலகட்டங்களில் இடப்பெயர்வுக்கு ஆளான மக்கள் தங்கள் அனுபவங்கள் ஊடாகப் பெற்றுக்கொண்ட அறிவு கூட இந்த வகை உள்ளுர் அறிவுமுறையைச் சேர்ந்தவையே. உள்ளுர் அறிவுமுறையை மூன்று வகையாகப் பிரிக்கலாம்,
1. பொதுவான அறிவு: இது ஒரு சமூகத்தின் அனைத்துத் தரப்பினருக்கும் தெரிந்த அறிவு. உதராணமாக, கிழக்கு மாகாணத்தில் அனைவருக்கும் எப்படி சொதி செய்வது எனத் தெரியும்.
2. பகிரப்பட்ட அறிவு: இது பலருக்குத் தெரிந்த அறிவு. ஆனால், சமூகத்தில் உள்ள அனைவருக்கும் தெரிந்த அறிவல்ல. உதாரணமாக, கிராமங்களில் மாடு வளர்க்கப் பலருக்கத் தெரியும். அதற்காக அது எல்லோருக்கும் தெரியும் என்பதல்ல.
3. சிறப்பு அறிவு: இது ஒரு சிலருக்கு மட்டும் தெரிந்த அறிவாகும். உதாரணமாக, ஒரு கிராமத்தில் ஒரு சிலரால் மட்டுமே விசகடி வைத்தியர்களாகவோ, பிள்ளைப்பேறு பார்க்கிற மருத்துவிச்சிகளாகவோ, பன்னவேலைக் கலைஞர்களாகவோ வர முடியும்.
ஆனால், இந்த அறிவுகள் அனைத்தும் ஒவ்வொரு சமூகத்துக்கு மட்டும் உரியதாக அல்லது அதற்குரிய தனித்தன்மை கொண்டதாக இருக்கும்.
இத்தகையை அறிவுமுறைகள் இன்று வெறும் மாற்று வழிகளாக அல்லது மட்டுப்படுத்தப்பட்ட வழிகளாக மட்டுமே அந்தந்த சமூகங்களில் நடைமுறையில் இருந்து வருகின்றன. இந்த அறிமுறையைப் பிரதானமாக்குதல் மூலம் தனித்துவமான சேவையை அல்லது உற்பத்திப் பொருட்களைப் பரந்துபட்ட நுகர்வோருக்கு வழங்க முடியும். இதன் ஊடாக ஒவ்வொரு சமூகமும் தத்தமக்கான ஒரு இடத்தை தொழிற்துறையிலும் வர்த்தகத்திலும் வளர்த்தெடுக்கவும் தக்க வைத்துக் கொள்ளவும் முடியும்.
அதேபோன்று இன்றைய நவீன தொழிநுட்ப யுகத்தில் ஒரு சமூகம் தனது தனித்துவங்கள் ஊடாகத் தன்னை வளர்த்துக் கொள்ளவும், காப்பாற்றிக் கொள்ளவும் கைகொடுக்கக் கூடியதாகவும் அச் சமூகத்தின் தொட்டுணராப் பண்பாட்டு மரபுகள் உள்ளன. மொழி, ஆற்றுகைக் கலைகள், சமூக நடைமுறைகள், சடங்குகள், விழாக்கள், இயற்கை மற்றும் உலகம்சார் அறிவு மற்றும் நடைமுறைகள், பாரம்பரிய கைவினைக் கலைகள் போன்றவை அத்தகைய தொட்டுணராப் பண்பாட்டு மரபுகளாக விளங்குகின்றன. வளர்ச்சியடைந்த பல நாடுகளின் வளர்ச்சியில் இத்தகைய தொட்டுணராப் பண்பாட்டு மரபுகள் பெரும் பங்காற்றியுள்ளன. சீனா, ஜப்பான், கொரியா போன்ற நாடுகளைத் தொடர்ந்து இன்று இந்தியாவும் இத்தகைய தொட்டுணராப் பண்பாட்டு மரபுகளைப் பிரதானமாக்குவதில் அதிகம் கவனம் செலுத்தி வருவதை அவதானிக்க முடியும்.
அந்தவகையில், சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவக 3வது சர்வதேச மாநாடானது, ‘உள்ளுர் அறிவு முறைமைகள் மற்றும் தொட்டுணராப் பண்பாட்டு மரபுகளைப் பிரதானப்படுத்துவதன் முக்கியத்துவம்’ சார்ந்த அறிவையும் அனுபவங்களையும் உள்ளுர் மற்றும் சர்வதேச வல்லுனர்கள், புலமைவாதிகள், கலைஞர்கள், சமூகச் செயற்பாட்டாளர்களிடம் இருந்து பெற்று நிறுவகத்தின் பாடவிதானத்தையும் சமூக மேம்பாட்டையும் சுய வேலைவாய்ப்பையும் ஊக்குவிக்கும் அல்லது வளர்க்கும் விதத்தில் உருமாற்றம் செய்தல் என்னும் நோக்குடனும் அதேநேரம், இந்த அறிவையும் அனுபவத்தையும் சமூக அங்கத்தவர்கள் நேரடியாகப் பெற்றுக்கொள்ளும் வகையிலும் ஏற்பாடு செய்யப்படுகின்றது. பல்கலைக்கழக சர்வதேச மாநாடு என்பது வெறுமனே புலமைவாதிகள் கட்டுரைகளையும் அளிக்கைகளையும் சமர்ப்பித்து சான்றிதழ்களை வாங்கிச் செல்லும் படலமாக அல்லாமல் சமூக அங்கத்தவர்களுக்கும் மாணவர்களுக்கும் நேரடியாகப் பயன்பெறக் கூடிய வகையிலும் ஒரு நிலைபேற்றுத் தகைமை கொண்ட வளர்ச்சியினை மேற்கொள்ளக் கூடிய அறிவையும் தூண்டுதலையும் பெறக்கூடிய வகையில் ஏற்பாடு செய்யப்படுகின்றது.
ஆர்வத்தையும் தேடலையும் தூண்டும் திறவுரைகளுடன் ஆரம்பிக்கப்படும் இவ் ஆய்வு மாநாடானது, பாரம்பரியக் கல்வி முறைமைகள், கூத்து மீளுருவாக்கம் மற்றும் உள்ளுர் உணவு போன்ற கருப்பொருள்களைக் கொண்ட பல்வேறு அமர்வுகளைக் கொண்டதாக இருக்கும். அத்துடன், பாரம்பரிய உணவுகளுக்கான கூட்டுக் குசினி, தமிழர் இசை மரபு, தமிழர் நடன மரபு மற்றும் தமிழர் தத்துவ மரபுகளும் அழகியலும் கலைகளும் உளவியலும் என்பன இம் மாநாட்டை மேலும் சிறப்பாக்கும் கூறுகளாக இருக்கும்.
அந்தவகையில், இந்த மாநாடானது உள்ளுர் அறிவுமுறைமைகள் மற்றும் தொட்டுணராப் பண்பாட்டு மரபுகளைப் புரிந்துகொள்வதற்கும் அவற்றைப் பிரதானமயமாக்குவதன் முக்கியத்துவம் அல்லது அவசியத்தைப் புரிந்துகொள்ளும் இடமாகவும் மட்டுமல்லாது ஒருபுறம் உள்ளுர் அறிவுமுறைமை மற்றும் தொட்டுணராப் பண்பாட்டு மரபுகளை வெளிப்படுத்தும் களமாகவும் அதேநேரம், அந்த உள்ளுர் அறிவுமுறைமைகள் மற்றும் தொட்டுணராப் பண்பாட்டு மரபுகளைப் பிரதானமாக்குதலுக்கான அறிவையும் அனுபவத்தையும் பெறும் களமாகவும் செயற்படுகின்றது. அதாவது, வெளிப்படுத்தலும் – பெறுதலும் ஒரே நேரத்தில் நிகழும் ஒரு கொண்டாட்டமாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்தக் கொண்டாட்டத்துக்கு சமூகத்தின் அனைத்துத் தரப்பினரையும் வரவேற்பதில் சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவகம் பெருமை கொள்கின்றது.
வாரீர் பங்குகொள்வீர் பயன் பெறுவீர்!
கலாநிதி. ஜெயரஞ்சினி ஞானதாஸ்