குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
தமிழ் அரசியல் கைதிகளை குற்றவாளிகளாக்கும் நோக்குடன் சட்டமா அதிபர் திணைக்களம் செயற்பட்டு வருவதாகவும், குறித்த செயற்பாடு தொடர்ந்தால் போராட்டங்களை முன்னெடுப்போம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
யாழ்.ஊடக அமையத்தில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில் ,
தமிழ் அரசியல் கைதிகளான மதியரசன் சுலக்சன் , கணேசன் தர்சன் , இராசதுரை திருவருள் ஆகியோரின் வழக்குகள் இழுத்தடிப்பு செய்யப்பட்டு வருகின்றது. குறித்த மூன்று அரசியல் கைதிகளையும் கடுமையாக சித்திரவதை செய்து விசாரணைகளின் பின்னர் வவுனியா மேல் நீதிமன்றில் அவர்களுக்கு எதிரான குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
அதன் பின்னர் வழக்கு விசாரணைகள் இழுத்தடிப்பு செய்யப்பட்டு வந்த நிலையில் கடந்த ஆண்டு செப்டெம்பர் மாதம் வவுனியா மேல் நீதிமன்றில் இருந்து அனுராதபுரம் மேல் நீதிமன்றுக்கு வழக்கு விசாரணைக்காக மாற்றப்பட்டது. அனுராதபுர மேல் நீதிமன்றுக்கு வழக்கினை மாற்றியதன் நோக்கம் அவர்கள் மூவரையும் குற்றவாளிகள் ஆக்கவே. அதற்கு தமிழர் தரப்பினர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களை முன்னெடுத்தோம்.
அதனால் மீள வழக்கு வவுனியா மேல் நீதிமன்றுக்கு மாற்றப்பட்டது. கடந்த மே மாதம் வவுனியா மேல் நீதிமன்றில் வழக்கு விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்ட போது , சட்டமா அதிபர் திணைக்களம் சார்பில் முன்னிளையாகும் அரச சட்டவாதிகள் தாம் விசாரணைக்கு தயார் இல்லை என கூறி வழக்கினை ஒத்திவைக்க கோரினார்கள். அதனால் வழக்கு விசாரணை எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் முதலாம் திகதிக்கு மேல் நீதிமன்ற நீதிபதி ஒத்திவைத்தார்.
இந்நிலையில் நேற்று திடீரென மூன்று அரசியல் கைதிகளும் , சிறைச்சாலை உத்தியோகஸ்தர்களால் வவுனியா மேல் நீதிமன்றுக்கு அழைத்து செல்லப்பட்டனர். அவர்கள் தமது சட்டத்தரணிகளை தொடர்பு கொள்ள கூட அனுமதிக்கப்படவில்லை.
மூன்று அரசியல் கைதிகளையும் நீதிமன்றில் முற்படுத்தி அவர்களின் வழக்கு விசாரணையை எதிர்வரும் ஒக்டோபர் மாதத்திற்கு ஒத்திவைக்குமாறு நேற்றைய தினம் மன்றில் முன்னிலையான அரச சட்டவாதிகள் விண்ணப்பம் செய்ததை அடுத்து நீதிபதி ஒகஸ்ட் மாத வழக்கு விசாரணையை ஒக்டோபர் மாதத்திற்கு ஒத்தி வைத்துள்ளார்.
குறித்த வழக்கு விசாரணையை அனுராதபுர மேல் நீதிமன்றுக்கு மாற்றிய போது அந்த நீதிமன்றில் வழக்கு விசாரணையை நடத்த தாம் தயார் என கூறி வந்த அரச சட்டவாதிகள் , வவுனியா மேல் நீதிமன்றில் வழக்கு விசாரணை நடக்கும் போது தாம் தயார் இல்லை என கால நீடிப்பு கேட்கின்றார்கள்.
இந்த செயற்பாடுகள் குறித்த மூன்று அரசியல் கைதிகளையும் மனவுளைச்சலுக்கு உள்ளாக்கி அவர்களை பழிவாங்கி குற்றவாளிகள் ஆக்கும் செயற்பாட்டையே சட்டமா அதிபர் திணைகளம் மேற்கொண்டு வருகின்றது. என சந்தேகிக்கின்றோம். இந்நிலை தொடருமானால் நாம் போராட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்தார்.