உத்தியோகபூர்வ பயணமாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பிரித்தானியா வந்துள்ள நிலையில் அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரித்தானிய பாராளுமன்றம் அருகே இன்று ‘டிரம்ப் பேபி’ பலூன் பறக்க விடப்பட்டுள்ளது. லண்டனில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலின்போது பிரித்தானிய பிரதமர் தெரசா மேயை கடுமையாக விமர்சித்திருந்த டிரம்ப்பின் பிரித்தானிய வருகைக்கு சில மாதங்களாகவே எதிர்ப்புக்கள் தொடர்கின்றன.
வெளிநாட்டினருக்கு விசா அளிப்பதில் கட்டுப்பாடு, வெளிநாட்டு பொருட்கள் மீதான இறக்குமதி மீது அதிகரிப்பு உள்ளிட்ட டிரம்ப் அரசின் கொள்கைகளால் பிரித்தானியாவில் வாழும் ஒருபிரிவினரிடம் அவருக்கு எதிரான மனப்போக்கு காணப்படுகின்றது.
நேற்று பிரதமர் தெரசா மே அளித்த விருந்தில் பங்கேற்க டிரம்ப் வந்தபோது அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான எதிர்ப்பாளர்கள் அவருக்கு எதிரான கண்டன பதாகைகளை ஏந்தியும், முழக்கமிட்டும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இதேபோல், டிரபல்கர் சதுக்கத்தில் திரண்டுள்ள பலர் டிரம்ப்புக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
லண்டன் நகரில் இதுபோன்ற ஆர்ப்பாட்டங்கள் நடைபெறலாம் என்பதால் வழக்கமாக பிரதமர் அலுவலகத்தில் நடைபெறும் விருந்து நிகழ்ச்சி லண்டன் புறநகர் பகுதியில் உள்ள தெரசா மே இல்லத்தில் நடைபெற்றது. இன்று விண்ட்ஸர் கெஸ்ட் அரண்மனையில் எலிசபத் ராணியை சந்தித்து பேசவுள்ள டிரம்ப் ராணி அளிக்கும் விருந்திலும் கலந்துகொள்கிறார்.
இந்நிலையில், பிரித்தானியாவின் பல பகுதிகளில் இருந்து வந்த டிரம்ப் எதிர்ப்பாளர்கள் இன்று லண்டன் நகரில் குவிந்துள்ள அதேவேளை டிரம்ப்பை கிண்டல் செய்யும் வகையில்; பாராளுமன்ற சதுக்கத்தில் ‘டிரம்ப் பேபி’ பலூன் ஒன்றையும் ; பறக்க விட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.