காணாமல் ஆக்கப்பட்டவர்களான லலித் மற்றும் குகன் ஆகியோரின் ஆள்கொணர்வு மனு இன்று யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் விசாரணைக்கு வந்த போதும், மூத்த அரச சட்டவாதி மன்றில் முன்னிலையாக காரணத்தால், வழக்கு வரும் ஒக்டோபர் 12ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டது.
கடந்த 2011ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் யாழ்ப்பாண நகரில் நடைபெறவிருந்த காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் போராட்டத்தை ஒழுங்கமைப்பதில் ஈடுபட்டிருந்த லலித்குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோர் ஆவரங்காலில் வைத்து கடத்தப்பட்டு பின்னர் காணாமல் ஆக்கப்பட்டனர். இதுதொடர்பாக அவர்களின் உறவினர்களால் ஆள்கொணர்வு மனு 2012ஆம் ஆண்டு கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு மீதான விசாணையின் போது, இந்தக் கடத்தல் சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட சாட்சிகளை விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றுக்கு கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் கடந்த 2012ஆம் ஆண்டு செப்ரெம்பர் 19ஆம் திகதி விசாரணைகள் ஆரம்பமாகின.
ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித்குமார, குகன் முருகானந்தனின் மனைவி, லலித்குமார் வீரராஜின் தந்தையார் ஆகியோர் சாட்சியமளித்தனர். தொடர்ந்து முன்னாள் அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல உள்ளிட்ட சிலர் சாட்சியமளித்தனர்.
அத்துடன், கடந்த தவணையின் போது, லலித், குகன் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான முறைப்பாட்டை எடுத்த அச்சுவேலி பொலிஸ் நிலைய முன்னாள் பொறுப்பதிகாரி சாட்சியமளித்தார். இந்த நிலையில் இந்த வழக்கு யாழ்ப்பாணம் நீதிமன்றில் நீதிவான் சி.சதீஸ்தரன் முன்னிலையில் இன்று (13) வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.
மனு தாரர்களின் சட்டத்தரணிகள் மன்றில் தோன்றினர். எதிர் மனு தாரரான யாழ்ப்பாணம் இராணுவத் தளபதி சார்பில் முன்னிலையாகும் சட்டத்தரணியும் மன்றில் முன்னிலையானார்.
லலித் வீரராஜின் அலைபேசி இணைப்பின் 2011ஆம் ஆண்டு டிசெம்பர் 31ஆம் திகதி முதல் டிசெம்பர் 31ஆம் திகதிவரையான விவரங்களை சமர்பிக்குமாறு தனியார் தொலைத்தொடர்பு வலையமைப்பு நிறுவனத்துக்கு நீதிமன்று உத்தரவிட்டிருந்தது. அதனை சமர்பிக்க அந்த நிறுவனத்துக்கு நீதிமன்று அழைப்புக் கட்டளை வழங்கியிருந்தது. அதனடிப்படையில் குறித்த நிறுவன அதிகாரி ஒருவர் இன்று நீதிமன்றில் தோன்றினார்.
எனினும் எதிர் மனுதார்களில் ஒருவரான சட்ட மா அதிபர் சார்பில் முன்னிலையாகும் மூத்த அரச சட்டவாதி மன்றில் முன்னிலையாக காரணத்தால் வழக்கை நடத்த முடியாமல் போனது. அதனால் வழக்கு விசாரணையை வரும் ஒக்டோபர் 12ஆம் திகதிவரை ஒத்திவைத்து யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் சின்னத்துரை சதீஸ்தரன் உத்தரவிட்டார்.