குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…
காணாமற்போனோரின் உறவினர்களிற்கு அரசுன் மீதோ அரசால் நியமிக்கப்படும் குழுக்கள் மற்றும் அமைப்புக்கள் மீதோ நம்பிக்கை இல்லாத நிலைமை காணப்படுவதாக யாழ் மாவட்ட சிவில் சமூகம் காணாமற்போனோர் ஆட்கள் பற்றிய அலுவலகத்திடம் தெரிவித்துள்ளனர்.
காணாமற் போனோர் ஆட்கள் பற்றிய அலுவலகத்திற்கும் யாழ் மாவட்ட சிவில் சமூகத்திற்குமிடையில் விசேட சந்திப்பொன்று இன்று நடைபெற்றது. காணாமற்போனோர் ஆட்கள் பற்றிய அலுவலகம் காணாமற்போனோரின் உறவினர்களைச் சந்தித்துக் கலந்துரையாடும் நிகழ்வொன்று யாழ் வீர சிங்கம் மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஆயினும் இந்த அலுவலகத்தில் நம்பிக்கை இல்லையென்றும் தங்களை ஏமாற்றும் செயற்பாடு என்றும் குற்றம் சாட்டி காணாமற்போனோரின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
ஆயினும் ஒரு பகுதி காணாமற்போனோரின் உறவினர்கள் இந்தச் சந்திப்பை புறக்கணித்த அதே வேளையில் இன்னொரு பகுதியினர் சந்திப்பில் கலந்து கொண்டிருந்தனர். இச் சந்திப்பு முடிவடைந்தை தொடர்ந்து யாழ் மாவட்ட சிவில் சமூகப் பிரதிநிதிகளுக்கும் மேற்படி அலுவலகத்திற்கும் இடையில் சந்திப்பு நடைபெற்றது. இதன் போது காணாமற்போனோரின் உறவினர்களுக்கு குழுக்கள் அமைப்புக்களில் நம்பிக்கையில்லை. அதனாலேயே அவர்கள் எதிர்க்கின்றனர். ஆகவே அந்த அலுவலகமாவது அவர்களுக்கான தீர்வை வழங்க வேண்டுமென்று சிவில் சமூகத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.