குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
2009 இல் அருட்தந்தையுடன் சரணடைந்த எனது அப்பாவை தேடித்தாருங்கள் என ஒன்பது வயது சிறுமி உருக்கமாக கோரிய போது சபையில் இருந்த அனைவரும் கண்ணீர் விட்டு அழுதனர்.
இன்று(15) கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் காணாமல் ஆக்கப்பட்ட ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் தலைவர் மற்றும் ஆணையாளர்களுடனான ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கலந்துரையாடலில் 2009 இல் அருட்தந்தையுடன் சரணடைந்த தனது அப்பாவை தேடித்தாருங்கள் என சிறுமி ஒருவர் உருக்கமாக கோரிய போது மண்டபத்தில் இருந்த கிராம அலுவலர்கள் உட்பட பலர் கண்ணீர் விட்டு அழுத சம்பவம் இடம்பெற்றுள்ளது.
2009 மே மாதம் அருட்தந்தை பிரான்சிஸ் ஜோசப் அவர்களுடன் நூற்றுக்கணக்கான போராளிகள் உட்பட பலர் சரணடைந்திருனர் இவர்களை இராணுவத்தினர் இலங்கை போக்கு வரத்து சபைக்கு சொந்தமான பேரூந்தில் ஏற்றிச் சென்றிருந்தனர் இதற்கு ஆயிரக்கணக்கான பொது மக்கள் சாட்சியாக இருக்கின்றனர்.
இதன் போது விடுதலைப்புலிகளின் திரைப்பட பிரிவில் கடமையாற்றிய திலக் என்பவரும் சரணடைந்திருந்தார். அவரது ஒன்பது மகளே இன்று மிக உருக்கமாக தனது அப்பாவை தேடித்தாருமாறும் தான் இதுவரை அப்பாவின் முகத்தை பார்க்கவில்லை என்றும் கோரியிருந்தார். இதன் போது மண்டபத்தில் இருந்த கிராம அலுவலர்கள் உட்பட பலர் கண்ணீர்விட்டு அழுதனர். குறித்த சிறுமி 2009 ஆம் ஆண்டு பதுங்குழிக்குள் பிறந்த குழந்தை என்றும் தனது அப்பாவின் முகத்தை காணாதவர் என்றும் இவரது அம்மம்மா குறிப்பிட்டார்.