Home இலங்கை “விஜய் குமாரணதுங்கவுக்கு ஒப்பாக றஞ்சனை நினைத்தது தவறு என உணர்கிறேன்”

“விஜய் குமாரணதுங்கவுக்கு ஒப்பாக றஞ்சனை நினைத்தது தவறு என உணர்கிறேன்”

by admin

 

வாரத்துக்கொரு கேள்வி – 14.07.2018

இவ்வாரம் கேள்விகள் அதிகரித்துள்ளன. அவற்றுள் என்னைப் பற்றி எழுப்பப்பட்ட சில கேள்விகளுக்குப் பதில் இறுக்கலாம் என்று எண்ணியுள்ளேன். முதற் கேள்வி பின்வருமாறு.

1)கேள்வி – வடக்கை வந்துபார்த்து மக்களின் கருத்துக்களைஅறிந்து செல்லுமாறு நீங்கள் விடுத்த கோரிக்கைக்கு நடிகர் பாராளுமன்ற உறுப்பினர் இரஞ்சன் இராமநாயக்க ஒத்துக்கொண்டுள்ளாரே.  இதுபற்றி?

பதில் – ஆம். அவர் தனிசிங்களத்தில் கடிதங்கள் அனுப்பியுள்ளார். அவற்றை மொழிபெயர்க்கக்  கொடுத்துள்ளேன். தொடக்கமே பிழைபோலத் தெரிகிறது.  மேலும் நான் அவருக்கு வடக்குக்கு வந்து செல்லுமாறு கூறியதன் பின்னரே அவர் கௌரவ விஜயகலா சம்பந்தமாக அவரிடம் சம்மதம் பெறாமல் அவருடனான கருத்துப் பரிமாற்றங்களை வலைப்பின்னல்களுக்கு வெளியிட்டுள்ளார். இது ஒருகுற்றமாகக் கணிக்கக்கூடிய விடயம். குறித்த நபரை வடக்கிற்கு வருமாறு அழைத்ததின் பின்னர் நடைபெற்ற அவர் சார்பான நிகழ்வுகளும் அவர்பற்றி என் கொழும்பு நண்பர்கள் கூறிவருவதும் அவ்வளவு ஏற்புடையதாகத் தெரியவில்லை. இவர் வடக்குவந்து உண்மையை அறிந்து தெற்கிற்கு தெரியப்படுத்தக்கூடிய ஒருவராகத் தெரியவில்லை. நான் அவரை காலஞ்சென்ற விஜய் குமாரணதுங்க போன்ற ஒருவர் என்றே முதலில் எண்ணினேன். என் எண்ணம் தவறென இப்போதுதெரிகின்றது.

2) வடக்கு மாகாணப் போக்குவரத்து நியதிச்சட்டத்தின் கீழ் வேலைவாய்ப்புக்கள் பெறக்கூடிய 63 பேரின் வேலைவாய்ப்பை முதலமைச்சர் முடக்கி வைத்துள்ளார் என்பது.

பதில் – வடக்கு மாகாண போக்குவரத்து நியதிச்சட்டத்திற்கு அமைய 63 பேருக்கு ஆளணி அங்கீகரிக்கப்பட்டது. அனுபவம் வாய்ந்தவர்கள் உள்வாங்கப்படல் வேண்டும் என்ற நோக்கில் வடமாகாண தனியார் போக்குவரத்து நிறுவனங்களில் கடமையாற்றிய 38 பேருக்கு கௌரவ பா.டெனீஸ்வரன் அவர்களால் தற்காலிகமாக நியமனம் வழங்கப்பட்டது.

நான் அமைச்சைப் பொறுப்பேற்ற பின்னர் அவர்களை உள்வாங்கி நிரந்தரம் ஆக்குவதற்கும் மிகுதியினரை (25 பேரை) உரிய முறைப்படி தெரிவு செய்வதற்கும் ஆட்சேர்ப்புத்திட்டம் எமது அமைச்சினால் முகாமைத்துவ சேவைத் திணைக்களத்திற்கு அனுப்பிய போது அதற்கான அனுமதி மறுக்கப்பட்டது. அதாவது தற்காலிக நியமனம் பெற்றவர்களை உள்ளேற்க அவர்கள் அனுமதி தரவில்லை.

இந் நிலையில் 38 பேருக்கான ஆளணியை ஒதுக்கிவைத்துவிட்டு மிகுதி பேருக்கு விளம்பரம் கோரி வேலை வழங்கக்கூடியதாக இல்லை. ஏனெனில் பதிவுகளின் பிரகாரம் மொத்தமாக 63 பதவிகளும் வெற்றிடமாகவே தற்பொழுதும் உள்ளன. ஆனால் 38 பேர் தற்காலிகமாகப் பணியாற்றுகின்றார்கள். எனினும் குறித்த 38 பேரையும் நிரந்தரமாக்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நடவடிக்கை முற்றுப்பெற்றதும் பத்திரிகை மூலம் விளம்பரப்படுத்தி மிகுதி வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும். எதனையும் முடக்கி வைக்க வேண்டிய அவசியம் எமக்கில்லை. கௌரவ டெனீஸ்வரன் அவர்களால் நியமிக்கப்பட்டவர்களுக்கு நிரந்தர நியமனம் வாங்கிக் கொடுக்கவே இந்தத் தாமதம். அவர்களைக் கைவிட்டு விட்டு 63 பதவிகளுக்கும் புதிதாக விளம்பரம் கோரினால் அவற்றை உடனேயே நிரப்ப முடியும்.

3) முதலமைச்சரின் அமைச்சின் சுற்றுலா அபிவிருத்தித் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் மத்திய மாகாணத்திற்கு வடக்கு மாகாணசபையின் நிதிகளைச் செலவழித்து அண்மையில் சுற்றுலா மேற்கொண்டமை பணவிரயம் செய்வதான செயல் என்பது.

பதில் – சுற்றுலாத்துறை அபிவிருத்தி துறையின் கீழ் எமது அமைச்ச்pற்;கு ஒதுக்கபட்ட PSDG  நிதியின் கீழ் அறுபது மில்லியனுக்கான வேலைத்திட்டத்தில் இலங்கையின் பிற மாகாணங்களுடனான அனுபவ பகிர்வுக்கான கள விஐயமும் உள்ளடக்கப்பட்டு இருக்கின்றது. இதற்காக ரூபா ஒரு மில்லியன் நிதி ஆணைக்குழுவினால் அனுமதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பிரதம செயலாளரின் தலைமையிலான மாகாணத் திட்டமிடல் குழுவினாலும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

உத்தியோகத்தர்களின் துறைசார்ந்த ஆளுமை விருத்தியையும் அனுபவப் பகிர்வையும் அடிப்படையாக கொண்டு வெளிநாட்டுப் பிரயாணங்களும் உள்ளுர்ப் பயணங்களும் அனுமதிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படுவது வழமையான நடைமுறையாகும். இதற்கிணங்கவே எனது அமைச்சின் உத்தியோகத்தர்களும் வடமாகாண சுற்றுலாத் துறை தொடர்பான அனுபவ பகிர்வு களவிஐயம் ஒன்றினையும் மேற்கொண்டிருந்தனர்.

வடமாகாண சுற்றுலாப் பணியகமானது 07.06.2018 அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது. இதன் முகாமைத்துவ சபையானது என்னால் நியமிக்கப்பட்டு இவர்களின் முதலாவது முகாமைத்துவ சபைக்கூட்டமானது 14.06.2018 நடைபெற்றது. இக் கூட்டத்தில் சுற்றுலாத்துறையில் விருத்தி அடைந்துள்ள மற்றும் அத்துறையில் முன்னணியில் உள்ள ஏனைய மாகாணங்களில் சுற்றுலாப் பணியகம் அல்லது சுற்றுலா அதிகாரசபை என்பன எவ்வாறான கட்டமைப்புக்களைக் கொண்டு செயலாற்றுகின்றன என்பது தொடர்பிலும் அவர்களால் மேற்கொள்ளப்படும் சுற்றுலா தொடர்பான அபிவிருத்தி வேலைகள் தொடர்பாகவும் அனுபவ பகிர்வு மூலம் அறிவைப் பெற்றுக் கொள்வதற்காக கள விஜயங்கள் மேற்கொள்வதென தீர்மானிக்கப்பட்டது.

இத் தீர்மானத்திற்கமைய இம் மாதம் 6,7 மற்றும் 8ந் திகதிகளில் மத்திய மாகாணத்திற்குக் களவிஜயம் மேற்கொள்வதெனத் தீர்மானிக்கப்பட்டது.மேற்படி களவிஜயத்திற்கான மதிப்பீடானது தயாரிக்கப்பட்டு அது அனுமதிக்கப்பட்டு அம் மதிப்பீட்டின் பிரகாரமே களவிஜயமானது மேற்கொள்ளப்பட்டிருந்தது. இதற்கென ஒதுக்கப்பட்ட நிதியே களவிஜயத்திற்கான செலவுகளுக்குப் பாவிக்கப்பட்டது. மேற்படி நிதி செலவழிக்கப்படாதிருந்தால் பணம் திருப்பி அனுப்பப்படும்.

4) முதலமைச்சர் உதவியாளர் ஒருவருடன் 2014 தொடக்கம் 2018 வரையிலான காலகட்டத்தில் விமானம் மூலம் கொழும்பு சென்று வந்ததால் இருபது இலட்சம் வரையிலான பொதுமக்களின் பணம் செலவு செய்யப்பட்டுள்ளது.

பதில் – உத்தியோகபூர்வ கடமையின் நிமித்தம் வடக்கு மாகாண முதலமைச்சர் அவர்களும் பாதுகாப்பு பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரும் விமானம் மூலம் 2014ல் இருந்து இன்றுவரை கொழும்பு சென்று வந்தமைக்கான விமானக்கட்டணக் கொடுப்பனவு முதலமைச்சருக்கு ரூ.1,115,500/= பொலிஸ் உத்தியோகத்தருக்கு ரூ. 694000/= ம் ஆவன.

இந்த விபரங்களை சுவுஐ சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட போது நானே வெளியிடுமாறு பணித்தேன். முதலமைச்சர் விமானத்தில் போக வேண்டிய காரணம் துரிதமும், பாதுகாப்பும், உடல் வசதியும் ஆவன. மற்றைய மாகாண முதலமைச்சர்கள் அவ்வாறு பயணம் செய்வதில்லை என்று கூறப்பட்டது. இலங்கையில் கொழும்பில் இருந்து ஆகக் கூடிய தூரத்தில் மாகாணசபை அமைந்திருக்கும் இடம் யாழ்ப்பாணமே. பொதுவாக வாகனங்கள் கொழும்புக்குப் பயணம் செய்வதானால் ஏழு மணித்தியாலங்கள் தேவை. ஏழு மணித்தியாலங்கள் பயணம் செய்துவிட்டு அதே நாளோ மறு நாளோ உத்தியோகபூர்வ கூட்டங்களில் கலந்து கொள்வது வடமாகாண முதலமைச்சருக்கு மட்டும் ஏற்படக் கூடிய இக்கட்டாகும். மேலும் அவ்வாறான பயணத்தில் ஈடுபடும் ஒரே தமிழர் வடக்கு மாகாண முதலமைச்சர் மட்டுமே. அவரே நான்கு மணித்தியாலங்களுக்கு சிங்களப் பிரதேசங்களில் பயணிக்க வேண்டியவர். இலங்கையில் 75 வயதிற்கு மேற்பட்ட முதலமைச்சர் வடமாகாண முதலமைச்சர் மட்டுமே. பொலிசார் பாதுகாப்பு நிமித்தம் எனக்களித்த அறிவுரையின் பிரதிபலிப்பே விமான மூலப் பயணம். இதற்கான அப்போதைய ஆளுநரின் அனுமதி கிடைத்தது. அப்போதைய ஆளுநர் 15 தொடக்கம் 20 வரையிலான விசேட அதிரடிப்படையினரைத் தமது பாதுகாப்புக்கு ஈடுபடுத்தினார். வாகன எரிபொருள், அதிரடிப்படையினர் செலவுகள் என்று அவர்களின் செலவு பற்றி எவருமே மூச்சு விடவில்லை. தற்போது இளந் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட அவ்வாறான பாதுகாப்பைக் கேட்டுப் பெற்றுள்ளனர்.

இது இவ்வளவுக்கும் என்னுடன் இரண்டு அல்லது மூன்று பொலிசாரே உள்ளூரில் பாதுகாப்புக்கு வருகின்றார்கள். ஒருவரையே விமானப் பயணத்தின் போது கொண்டு செல்கின்றேன். விமானப்படையினரின் விமானப் பயணங்களின் போது பொலிசாருக்குக் கட்டணம் அறவிடப்படுவதில்லை.

மேலும் தமது பாதுகாப்புப் பற்றிய இவ்வாறான விபரங்களை எவரும் வெளியிடுவதில்லை. காரணம், முதலமைச்சரை வேண்டாதவர்கள் இத்தரவுகளை தமக்கு அனுசரணையாகப் பாவிக்கலாம். ஆனால் மக்கள் சந்தேகங்களை நிவர்த்தி செய்யவும் முதலமைச்சருக்கு எதிராகத் திட்டமிட்டுப் பரப்பப்படும் சந்தேகத்தை ஏற்படுத்தும் கேள்விகளுக்குப் பதில் இறுக்கவும் உண்மையானது வெளிப்படுத்தப்படுகின்றது.

5) மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பு இன்னமும் நடைமுறைப்படுத்தப்படவில்லைஎன்று கூறப்படுகின்றதே?

பதில் – சில தீர்மானங்கள் நடைமுறைப்படுத்த முடியாதவை. முன்னைய பிரதம நீதியரசர் ஒருவருடன் அவரின் தலைமையின் கீழ் நான் அமர்வில் இருந்த போது அவர் தீர்மானம் ஒன்றை அமர்வில் இருந்து கொண்டே விடுக்க (டீநnஉh ழுசனநச) எத்தனித்தார். உடனே நான் இவ்வாறு தீர்மானம் அளித்தீர்களானால் நடைமுறைப்படுத்த முடியாது போய்விடும் என்றேன். அதன் பின் அத் தீர்மானம் திருத்தி வழங்கப்பட்டது. ஆகவே சில தீர்மானங்கள் நடைமுறைப்படுத்த முடியாதவை. அதனால்த்தான் உச்ச நீதிமன்றத்தின் உதவியை நாடியுள்ளோம். உச்ச நீதிமன்றத்தின் முன் வழக்கு இருக்கும் போது எந்தளவுக்கு அதன் உள்ளடக்கப்பொருள் பற்றி விமர்சிக்கலாம் என்பது ளுரடி துரனiஉந என்ற ‘மன்றாய்வில்’ கோட்பாட்டின் பால்ப்பட்டது. இது சம்பந்தமாக ஏற்கனவே நான் மாகாணசபையின் கடைசி அமர்வின் போது எனது கருத்தை வெளியிட்டுள்ளேன். அதைத் திரும்பவும் இங்கு ஒப்புவிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று நம்புகின்றேன்.

நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன்
முதலமைச்சர்
வடமாகாணம்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More