கூட்டு எதிரணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ச மற்றும் பிரசன்ன ரணவீர ஆகியோரை இன்று (16), நாடாளுமன்றச் சிறப்புரிமைகள் குழு முன்னிலையில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின், மீண்டும் விடுதலைப்புலிகள் எழுச்சி பெற வேண்டும் என்ற உரை தொடர்பில் இறுதியாக நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வின் போது குழப்பம் விளைவித்தமை தொடர்பில் விசாரணை நடத்துவதற்காகவே, இவ்வாறு முன்னலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த நாடாளுமன்ற அமர்வின் போது, விமல் வீரவன்ச, பிரசன்ன ரணவீர மற்றும் தயாசிறி ஜயசேகர உள்ளிட்டோர் அகிலவிராஜ் காரியவசத்தின் உரைக்கு இடையூறு ஏற்படுத்தியதோடு, சபைக்கு நடுவே சென்று, செங்கோலுக்கு முன்பாகவிருந்து எதிர்ப்பு நடவடிக்கையிலும் ஈடுபட்டனர்.
இதன்போது, கடுந்தொனியில் எச்சரித்த சபாநாயகர் விமல்வீரவன்ஸவின் செயற்பாடுகள் குறித்து வெட்கமடைவதாகவும் அவரது வாயிலிருந்து வெளிப்படும் சொற்கள், கடுமையானவை எனவும் எச்சரிக்கை விடுத்திருந்ததுடன் ஒழுக்கத்தினை பின்பற்றுமாறு கூறியிருந்தமையும் என்பது குறிப்பிடத்தக்கது.