Home இலங்கை இராணுவம் கூறுவது புளுகு, அண்டப்புளுகு, (Lies, Bloody lies and Statistics)….

இராணுவம் கூறுவது புளுகு, அண்டப்புளுகு, (Lies, Bloody lies and Statistics)….

by admin

கேள்வியும் விக்கியின் பதிலும் 3 – 5 – 

3. கேள்வி – வடக்கில் இராணுவத்தின் வசம் இருந்த 92 சதவிகிதமான காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாக இராணுவம் கூறியுள்ளதே? இது உண்மையா?

பதில் – புளுகு, அண்டப்புளுகு, புள்ளிவிபரங்கள் என்று கூறுவார்கள் (Lies, Bloody lies and Statistics).. அதுபோல்த்தான் இவ்விடயம் அமைகின்றது. நாங்கள் பதவிக்கு வந்த போது அதாவது 2013 கடைசியில் வலிகாமம் வடக்கில் சுமார் 6500 ஏக்கர் மக்கள் காணி இராணுவத்தினர் கைவசம் இருந்தது. இப்பொழுது அவற்றில் ½ வாசி மட்டில் கொஞ்சம் கொஞ்சமாக கையளித்துள்ளார்கள். அதை 92 சதவிகிதம் என்று கூறுவது தாங்கள் 2009ல் கைவசம் வைத்திருந்த காணிகளின் விகிதாசார அடிப்படையில் தற்போது 8 சதவிகிதமே மிகுதி உள்ளதென்பதையே அவர்கள் கூறுகின்றார்கள். இது யாழ் மாவட்டத்தில் வலிகாமம் வடக்கில் மட்டுமே.

நாம் பதவியேற்ற போது 65000 ஏக்கர் காணிகளை வடமாகாணம் முழுவதிலும் படையினர் கையகப்படுத்தி வைத்திருந்தார்கள். அவற்றுள் பெரும்பான்மை அரச காணிகள். அவற்றைப் பற்றி எதுவும் கூறாமல் 92 சதவிகிதம் கையளித்து விட்டதாகக் கூறுவதன் அர்த்தம் அரச காணிகளைத் தாம் தான்தோன்றித்தனமாய் ஆயிரம் வருடங்களுக்குந் தொடர்ந்து வைத்திருக்கலாம் என்ற எண்ணத்தில். சுமார் 60000 ஏக்கர் வடமாகாணக் காணிகள் இப்பொழுதும் படையினர் வசம் இருக்கின்றன என்பதே எமக்குத் தரப்பட்ட ஏற்றுக் கொள்ளக்கூடிய புள்ளி விபரங்கள்.

4. படையினர் முதலமைச்சரிடம் அனுமதி கேட்டு வைத்தியசாலைகளில் புள்ளிவிபரங்கள் கேட்க வேண்டிய அவசியமில்லை என்று இராணுவத்தினர் கூறுகின்றார்களே?

பதில் – இன்னமும் அவசரகால நிலைமை நீடிப்பதாக படையினர் நினைக்கின்றார்கள். அவசரகாலச்சட்டம் இல்லாத தற்காலத்தில் எந்த ஒரு அரச நிறுவனத்தில் சென்று விபரங்கள் சேகரிப்பதென்றாலும் அவை அந் நிறுவனங்களின் தலைமை அதிகாரியின் அனுமதியுடனேயே நடைபெற வேண்டும். தம்பாட்டுக்குப் போய் பாதுகாப்பு என்ற அடிப்படையில் எதுவும் கேட்க முடியாது. அதற்கு சட்டம் இடம்கொடுக்காது. பாதுகாப்பு என்ற போர்வையில் பலவிதமான அட்டூழியங்களைப் படையினர் இது காறும் புரிந்துள்ளார்கள். போர்க்குற்றங்கள் அவற்றுள் அடங்குகின்றன. எனவே இவ்வாறான தருணங்களில் பாதுகாப்பு படையினரின் முறையற்ற நடவடிக்கைகளை மக்களுக்கு எடுத்துரைப்பது அவசியம்.

அத்துடன் போர்முடிந்து 9 வருடங்கள் நிறைவடைந்த பின் பாதுகாப்பு, பாதுகாப்பு என்று பயமுறுத்தும் படையினர் அந்தப் பாதுகாப்புக்கான காரணங்கள் என்ன என்பதை எங்களுடன் பேசி முடிவுக்கு வர வேண்டும். வெளிநாடுகளிடமிருந்து எமக்கு பாதுகாப்புத் தேவைப்படுகிறதா உள்நாட்டில் தேவைப்படுகின்றதா என்பதை அவர்கள் கூற வேண்டும். வெளிநாடுகளைக் குறிப்பிட்டு தேசிய பாதுகாப்பைப் பற்றிக் கூறுவது ஒன்று. தேசிய பாதுகாப்பு வேண்டுமெனில் அதை ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் சும்மா பாதுகாப்பு பாதுகாப்பென்று மக்களின் காணிகளைப் பிடித்துக் கொண்டும் வருவாயை எடுத்துக்கொண்டிருப்பதை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம். அத்துடன் இவர்கள் தாம் நினைத்தவாறு வைத்தியசாலையினுள் நுழைந்து தரவுகள் சேகரித்தால் பொலிசாரின் அதிகாரங்களை படையினர் கைவசப்படுத்தியதாக அமையும். உண்மையில் இராணுவத்தினர் இவ்வாறான புள்ளி விபரங்களை வைத்தியசாலைகளில் இருந்து சேகரிக்க வேண்டுமென்றால் பொலிசாரை நாடி அவர்கள் ஊடாகவே இதைச் செய்ய வேண்டும். இராணுவத்தினருக்குப் போர்க்காலம் போல் இப்பொழுதும் அதிகாரங்கள் இருப்பதாக நினைப்பது தவறு.உண்மையில் வடமாகாணத்தில் படையினர் தொடர்ந்திருக்க வேண்டிய எந்த அவசியமும் இல்லை. அரசியல் காரணங்களே அவர்களை இங்கு நிலை நிறுத்தியுள்ளன.

5. வடக்கில் சாதாரண மக்களையும் இராணுவத்தினரையும் பிரிக்க நீங்கள் எத்தனிப்பதாக இராணுவத் தளபதி மகேஷ; சேனநாயக கூறியுள்ளாரே? அது பற்றி?

பதில் – மகேஷ் எனது நண்பர். அவர் கூறுவது அந்த வரையில் உண்மை. எமது மக்களும் இராணுவத்தினரும் நெருக்கமாக இருப்பதை நான் விரும்பவில்லை. காரணம் அந்த நெருக்கத்தைக் காட்டி இராணுவம் இன்னும் 1000 வருடங்களுக்கு எமது பிரதேசங்களில் இருந்து வர எத்தனிக்கும். அதனால் பாதிப்படையப்போவது எமது இனமே. இராணுவத்தின் வேலை வடமாகாணத்தில் முடிவடைந்தபடியால் அவர்கள் திரும்ப கொழும்பு செல்வதே முறையானது. அப்படி இராணுவம் தரித்து நிற்க வேண்டுமென்றால் நான் ஏற்கனவே கூறியுள்ளேன் ‘இராணுவத்தை ஒன்பதாகப் பிரியுங்கள்! ஒன்பதில் ஒரு பங்கை வேண்டுமெனில் ஒவ்வொரு மாகாணத்திலும் நிறுத்துங்கள்’ என்று. சலுகைகளையும் சல்லியையும் தந்து இராணுவம் இங்கு நிலைபெற நினைப்பது அவர்கள் எம்மைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்காகவே! எங்கள் மீது கரிசனை இருப்பதால் அல்ல. இவற்றை எம் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். பெரும்பான்மையினரின் அரசியலுக்கு எமது சாதாரண மக்களின் வறுமையைப் பாவித்து இராணுவத்தினர் உதவ வருவது சரிபோல் தெரியும். வருங்காலத்தில் பாதிக்கப்படப் போவது எமது இன மக்களே. படைகளில் சிலருக்கு தெற்கில் ஒரு குடும்பம் வடக்கில் ஒரு குடும்பம் இருப்பது நாடறிந்த உண்மை.

அடுத்து அரசாங்க திணைக்களங்கள் தகவல்கள் இராணுவத்தினருக்கு வழங்குவது பற்றியும் நண்பர் கூறியிருந்தார். அது பற்றி ஏற்கனவே பதில் கூறியுள்ளேன். இராணுவத்தினர் தமது பணிகளை நிறுத்தப்போவதில்லை என்றும் கூறியுள்ளார் இராணுவத் தளபதி. அதை நாம் எதிர்பார்ப்பது தான். தருணம் வரும் வரையில்த்தான் இவ்வாறான கருத்துக்கள் தங்கி வாழ முடியும். தருணம் வந்ததும் விட்டு ஏக வேண்டியிருக்கும். உதாரணத்திற்கு IPKF ஐ வாபஸ் பெற வேண்டியிருந்தது கௌரவ VP சிங் டெல்கியில் பிரதமர் ஆகியதால்! இங்கிருந்து நாம் எப்பொழுதும் திரும்ப மாட்டோம் என்ற கூற்றுடன்தான் ஐPமுகுபடையினர் வந்தார்கள். ஆகவே தருணங்கள் எப்போது வருவன என்று எம்மால் கூறமுடியாது. மக்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் எதனையும் நாம் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More