கேள்வியும் விக்கியின் பதிலும்…1 – 2 –
1. கேள்வி – வடமாகாணசபை கலைக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது என்று அவைத்தலைவர் கூறுகின்றாரே. அதில் உண்மையுள்ளதா?
பதில் – இல்லை. ஒரு மாகாணத்தின் ஆளுநர் தானே பிழை செய்து விட்டு தன் பிழையை வைத்தே மாகாண ஆட்சியைக் கலைக்கமுடியுமென்றால் மத்திய அரசாங்கம் அதைச் செய்தே எல்லா மாகாணசபைகளையும் கலைத்துவிடலாம். மேன்முறையீட்டுமன்றின் தீர்ப்புக்குக் காரணம் எமது ஆளுநர் அரச வர்த்தமானியில் கௌரவ டெனீஸ்வரனை நான் நீக்கியது பற்றி பிரசுரிக்காமையே. வடமாகாணசபை சார்பாக கௌரவ ஆளுநர் அவர்கள் தானே ஒரு முக்கியமான செயலைச் செய்யாதுவிட்டு அதை முன்வைத்து வடமாகாணசபையை கலைக்க சட்டம்இடம் கொடுக்காது. அவைத்தலைவர் தொடர்ந்து எமது பதவிக்காலம் வரையில் அவைத்தலைவராகவே இருக்கலாம்!
2. கேள்வி – முழுமையான அமைச்சரவையை உருவாக்கும் ஆலோசனையை ஆளுநருக்கு வழங்குங்கள் என்று உறுப்பினர்கள் நேற்று தீர்மானம் எடுத்துள்ளார்களே?
பதில் – முதலமைச்சருக்கு நியமிக்கும் அல்லது பதவி இறக்கும் உரித்தில்லை என்று மேன்முறையீட்டு நீதிமன்றம் கூறியிருக்கும் போது நான் எவ்வாறு ஆலோசனை வழங்குவது? சட்டத்திற்குப் புறம்பாக நடவடிக்கை எடுக்கப்பண்ணி என்னை மாட்டிவிடப் பார்க்கின்றார்களா எமது கௌரவ உறுப்பினர்கள்? ஆளுநர் செய்த பிழையை ஆளுநரே சரி செய்ய வேண்டும். கௌரவ டெனீஸ்வரனை நான் பதவிநீக்கம் செய்ததை அரச வர்த்தமானியில் பிரசுரிக்காத குறையை இப்பொழுதும் நீக்கலாம். அதாவது 2017 ஆகஸ்ட் 20ந் திகதி தொடக்கம் பயன்பாட்டிற்கு வரும் வகையில் இப்பொழுதும் கடந்த காலத்தை அளாவிய விதத்தில் அரச வர்த்தமானியில் பிரசுரம் இடம்பெற ஆளுநர் நடவடிக்கை எடுக்கலாம். அதன் பின் குறித்த வர்த்தமானி அறிவித்தலை உச்ச நீதிமன்றத்திற்கு எடுத்துக்காட்டி மேன்முறையீட்டுத் தீர்மானத்தைப் புறம் வைக்கலாம்.