குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
வடமாகாண அமைச்சர்கள் விவகாரம் குறித்து முதலமைச்சர் நினைத்தால் உடனடியாகவே தீர்வினை காணலாம் என வடமாகாண அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்தார். அமைச்சர்கள் விவகாரம் குறித்து இன்று ஊடகங்களுக்கு தகவல் தருகையிலேயே அவைத்தலைவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில்,
சட்டத்தின்படி அமைச்சர்களை நியமனம் செய்யும் அதிகாரம் ஆளுநருக்கே உள்ளது. அதேபோல் ஆளுநர் நியமனம் செய்யும் அமைச்சர்கள் தொடர்பில் ஆலோசனைகளை நடாத்தி அதனை ஆளுநருக்கு வழங்கும் அதிகாரம் முதலமைச்சருக்கு இருக்கின்றது.
இங்கே முதலமைச்சர் தனியாகவோ அல்லது ஆளுநர் தனியாகவோ செயற்பட இயலாது. இருவரும் ஒன்றாகவே செயற்படவேண்டும். அதேசமயம் அமைச்சர் டெனீஷ்வரன் விடயத்தில் அவரை முதலமைச்சர் பதவி நீக்கம் செய்த முறைமை பிழையாது எனவே கூறியிருக்கிறது தவிர டெனீஷ்வரனை பதவி நீக்கம் செய்ய முடியாது. என மேன்முறையீட்டு நீதிமன்ற தீர்ப்பில் குறிப்பிடப்படவில்லை.
ஆகவே இப்போதும் கூட அமைச்சர் டெனீஷ்வரனை பதவி நீக்கம் செய்யுங்கள் என ஆளுநருக்கு முதலமைச்சர் ஆலோசனை வழங்கினால் அமைச்சர் டெனீஷ்வரன் பதவி நீக்கப்படுவார்.
அதன் பின்னர் அமைச்சர்கள் தொடர்பான சர்ச்சைகளே இருக்காது என கூறினார்.
இதனை முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரனும், ஆளுநர் றெஜினோல் கூரேயும் புரிந்து கொள்ளவேண்டும். அவர்கள் புரிந்து கொண்டால் எல்லாம் சரியாகும். மேலும் ஆளுநர் முறையாக வர்த்தமானி பிரசுரம் வெளியிட்டிருந்தால் இவ்வளவு பிரச்சினைகள் வந்திருக்காது என முதலமைச்சர் கூறுகிறார். ஆனால் வர்த்தமானி குறித்து இங்கே பிரச்சினை இல்லை எனவும் அவை தலைவர் மேலும் கூறியுள்ளார்.
தொடர்ந்து ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு அவை தலைவர் பதிலளிக்கையில்,
தன்னை சட்ட சிக்கலில் மட்டுவதற்கு சில உறுப்பினர்கள் முயற்சிப்பதாக முதலமைச்சர் கூறியிருந்த குற்றச்சாட்டு தொடர்பாக கேட்ட போது, முதலமைச்சரை சட்ட சிக்கலில் மாட்டும் எண்ணம் எனக்கில்லை. உறுப்பினர்களுக்கும் அவ்வாறான எண்ணம் இருக்கும் என நான் கருதவில்லை.
முதலமைச்சருடைய அத்தகைய கருத்து அவருடைய தனிப்பட்ட கருத்து. மற்றபடி உறுப்பினர்கள் தங்களுடைய நிலைப்பாட்டை முதலமைச்சருக்கு கூறியிருக்கின்றார்கள்.அதன் மேல் நடவடிக்கை எடுப்பதும், எடுக்காமலிருப்பதும் முதலமைச்சரின் உரிமை எனத் தெரிவித்தார்.அமைச்சர் சபை ஒன்று முறையாக இல்லாமையினால் எழுந்திருக்கும் பிரச்சினைகள் தொடர்பா க கூறுகையில்..
அமைச்சர் சபை இயங்க இயலாத நிலையில் உள்ளமையால் நாளாந்த நிர்வாக நடவடிக்கை களுக்கு குந்தகம் இருக்காது. அவை இயல்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும். ஆனால் அமைச்சர் சபை எடுக்கவேண்டிய கொள்கைரீதியான அல்லது கோட்பாட்டுரீதியான விடயங்கள் அப்படியே கிடப்பில் போடப்படும். என தெரிவித்திருந்தார்.