கடவுளால் அமைக்கப்பட்டதொரு கற்கோயில்.
வான் கலந்த மாணிக்க வாசக நின் வாசகத்தை
நான் கலந்து பாடுங்கால் நற்கருப்பஞ் சாற்றினிலே
தேன் கலந்து, பால் கலந்து, செழுங்கனித் தீஞ்சுவை கலந்து – என்
ஊன் கலந்து உயிர் கலந்து உவட்டாமல் இனிப்பதுவே”
என்று திருவாசகத்தின் பெருமை பற்றிப் பாடியிருக்கிறார் வள்ளலார்.
ஆங்கில அறிஞர் G.U . போப்பின் ஆகச் சிறந்த படைப்பாகக் கருதப்படுவது அவரது திருவாசக மொழிபெயர்ப்பு. திருவாசகத்தை போப்பை மொழிபெயர்க்க ஊக்கப்படுத்திய நிகழ்வு நெகிழ்ச்சியானது.தனது முதுமைக் காலத்தில் பிரித்தனியாவுக்குத் திரும்பிச் சென்ற போப் தனது நண்பரோடு பேசிக் கொண்டிருந்தபோது திருவாசகத்தைப் பற்றியும் விவரித்திருக்கிறார்.திருவாசகத்தின் பால் கவரப்பட்ட அவரது நண்பரே திருவாசகத்தை ஆங்கிலத்தில் பதிப்பிக்க வேண்டும் என போப்பை ஊக்குவித்தவர். ஆனாலும் முதலில் போப் அதற்கு உடன்படவில்லை. “அது பாரிய பணியென்றும், நீண்ட காலமாகலாம். அதுவரை நான் உயிரோடு இருப்பேனோ! என்று எனக்குத் தெரியாது என்று கூறி” – தனது முதுமையையும், தள்ளாமையையும் காரணம் காட்டி மறுத்திருக்கிறார். ஆனால் அவரது நண்பர் விடவில்லை. “ஒருவர் தன்னை உன்னதமான பணியில் ஈடுபடுத்திக் கொண்டால் போதும். உற்சாகம் வந்துவிடும். முதுமை காணாமற் போய்விடும்.வாழ்வு நீண்டுவிடும்.இதை அற்புதமாய் செய்து முடிக்க உன்னால்தான் முடியும். அதற்குரிய பக்குவம் உன்னிடம் உண்டு.நிட்சயம் அந்தப் பணியை நிறைவேற்றுவாய்” – என்று சொல்லிக் கொடுத்த ஊக்கத்தால் போப் அவர்கள் தனது எண்பதாவது வயதில் அப் பணியை நிறைவேற்றி இருக்கிறார். இவர் 1837இல் தமிழைப் படிக்கத் தொடங்கியவர் 1900 இல் திருவாசகத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். “என்னுள் இருக்கின்ற ஆழமான உணர்ச்சிகளே இத்தகைய இலக்கியப் பணிகளை எனக்கு நெருக்கமடையச் செய்திருக்கின்றன” என்று குறிப்பிட்ட போப் அவர்கள் – தான் இவ்வுலகை விட்டுச் சென்ற 88 வயதில் 1908 இற்கு முன்னர் அவர் எழுதிய குறிப்பொன்றில் – “ எனது கல்லறையை எழுப்ப செலவாகின்ற தொகையில் ஒரு பகுதியை தமிழரிடமிருந்து வசூலிக்கப்பட வேண்டும். அத்துடன் எனது கல்லறையில் “ஒரு தமிழ் மாணவன்” என்ற குறிப்பும் இடம்பெற வேண்டும்” – என்று குறிப்பிட்டிருக்கிறார்.
இப்படி உலகறிந்த திருவாசகத்திற்கு யாழில் ஒரு அரண்மனையை அமைத்திருக்கின்றனர் சைவர்கள். “பல எலிகள் ஒன்று சேர்ந்தால் புற்றெடுக்காது” – என்ற வாசகத்தைப் பொய்ப்பிக்கின்ற வகையில் உலகளாவிய ரீதியில் வாழுகின்ற பல சைவத் தமிழ் பெருமக்கள் ஒன்றிணைந்து இக் கைங்கிரியத்தைச் செய்து முடித்திருக்கின்றனர். அதை முன்னின்று நடத்திச் சென்ற செஞ்சொற் செல்வர் ஆறு திருமுருகனை நல்லூர் துர்க்காமணி மண்டபத்தில் சந்தித்தேன்.சிவபூமி அறக்கட்டளையினூடாக இன்னொரு பணியையும் முன்னெடுத்திருக்கிறார் அவர்.திருவாசக அரண்மனை என்ற முன்னெடுப்பு ஒரு காலத்தின் கட்டாயம் என்பது பல தமிழ் இலக்கியவாதிகளுடைய கருத்தாக அமைகிறது.
வணக்கம். வழமையாக இது போன்ற கைங்கரியங்கள் “அவனருளாலே அவன் தாள் வணங்கி” என்ற திருவாசக அடிகளின் உட் கருத்தை அடியொற்றியே நடைபெறுவதா கத்தான் நான் அறிந்திருக்கிறேன்.எனவே இத் திருவாசக அரண்மனையைக் கட்ட வேண்டும் என்ற உந்து சக்திக்குப் பின்புலமாக என்ன உண்டு?என்ன நடைபெற்றது? இறை காட்சி கொடுத்துச் சொன்னதாக… ஏதாவது சம்பவம் இடம் பெற்றதா?
ஆம்.அது போன்ற ஒரு மெய் சிலிர்க்க வைக்கும் சம்பவம் ஒன்று திருவண்ணாமலையில் நடைபெற்றது.2016 இல் தமிழ் நாட்டு ஓதுவார் சங்கத்தால் நடத்தப்பட்ட திருமந்திர மாநாட்டில் சிறப்புரையாற்றச் சென்றிருந்தேன்.திருவண்ணாமலை ஆலயத்தின் வடக்கு வீதியிலே உள்ள மண்டபத்தில் இரண்டு நாட்களாக அம்மாநாடு நடைபெற்றது.இரண்டு நாட்களும் நான் உரையாற்றினேன்.இரண்டாவது நாள் நான் உரையாற்றிவிட்டு உணவுக்காக வெளியே வந்தவேளை அங்கு காணப்பட்ட படிகளில் ஒன்றில் ஒரு பெரியவர் அமர்ந்திருந்தார்.அவர் என்னைச் சைகை காட்டி அழைத்தார்.அழுக்கு வேட்டி, நீர் காணாத சரீரம் என அவர் புறத்தோற்றம் என்னை ஒரு கணம் சிந்திக்க வைத்தது.இருந்தும் என்னை மீறிய ஒரு சக்தியினால் ஆட்கொள்ளப்பட்டு அவர் அருகே சென்று உட்கார்ந்து கொண்டேன்.திருவாசகத்தைப் பற்றியும், திருமந்திரத்தைப் பற்றியும் பேசத்தொடங்கினார். நான் அன்று அங்கு பேசிய வரிகளைச் சொல்லி மீதி வரிகளையும் தான் சொல்லி, சைவத் தமிழர்களின் போற்றத் தக்க பொக்கிஷங்களில் முதன்மையானது திருவாசகம் என்றும் குறிப்பாக ஈழத் தமிழர் திருவாசகத்தை நேசிப்பது தனக்கு மிக மகிழ்சியைத் தருகிறதுஎன்றும் அத்துடன், “நான் இன்னொன்றையும் கேள்விபட்டிருக்கிறேன். அங்கோ பாடசாலைகளிலே சிவபுராணத்தைப் பாடுகின்றனராம். கோயில்களிலோ திருவாசக முற்றோதல் நிழ்கிறதாம்.எழுத்தறிவில்லாத காலத்திலேயே பாமரமக்கள் கேள்வி ஞானத்தினால் திருவாசகத்தைக் கற்றுச் சிறப்புறப்பாடி வந்திருக்கின்றனராம். ஒருவரின் மரண வீட்டிலும் திருப்பொற் சுண்ணம் எனும் திருவாசகத் தேனைப் பாடியே ஈமக்கிரியைகள் நடைபெறுகின்றனவாம்.எனவே யாழ்ப்பாணம் ஒரு புண்ணிய பூமி ” என்றும் சொன்னார்.அவற்றைக் கேட்டதும் என் மெய்சிலிர்த்தது.
அத்துடன் அவர் விடவில்லை. திருவாசகம் ஒரு தத்துவவியல் என்றும் மேலை நாட்டவர் தற்போது மேலை நாட்டுத் தத்துவவியல் என்றும் தென் கிழக்குத் தேசத் தத்துவவியல் என்றும் இரண்டாகப் பிரிக்கத் தொடங்கிவிட்டனர்.ஆனால் தத்துவத்திற்குக் கடவுளையும், தத்துவத்திற்கு வார்த்தைகளையும் சொன்ன ஒரு உயர்ந்த சமயம் சைவம். எனவே சைவசமயத்தில் ஏராளமான தத்துவ நூல்கள் உண்டு. அவற்றுள் திருவாசகம் ஒரு ஒப்பற்ற தத்துவ நூல். எனவே இந்தத் திருவாசகத்தை இலங்கை மண்ணிலே அழியாது காப்பாற்ற வேண்டும்.இதுவரை காலமும் அழியாது பாதுகாத்துவரும் திருவாசகத்தை அடுத்த சந்ததிக்குக் காப்பாற்றிக் கொடுக்க வேண்டிய பொறுப்பு உன்னிடம் உண்டு.எனவே அதற்காகச் சில காரியங்களை நீ செய்ய வேண்டும் என்று அந்தப் பெரியவர் சொன்னார். உடனே அதற்கு நான் என்ன செய்ய வேண்டும் என்று அவரிடம் கேட்டேன்.அழியாது அவற்றைக் பாதுகாக்க வேண்டும் என்றார்.உடனே நான் சொன்னேன் “யாழ்ப்பாணத்தில் இரண்டு பெரியவர்கள் திருவாசகத்திற்கு உரை எழுதியிருக்கிறார்கள்.பலர் அதனை அச்சில் புத்தகமாகப் பதிப்பித்திருக்கிறார்கள்- என்றேன். அதற்கு அவர் சிரித்துவிட்டுச் சொன்னார் “ நான் நூல் பதிப்பதைச் சொல்லவில்லை.மன்னர்கள் பல முயற்சிகளைச் செய்தார்கள். கருங்கல்லிலே கோயில்களைக் கட்டினார்கள்.கருங்கல்லிலே எழுத்துக்களையும் பதித்திருக்கிறார்கள்.அது போல திருவாசகத்தைக் கல்லிலே பதிக்க வேண்டும்.இயற்கை அனர்த்தத்தினாலோ பிற இன்னல்களினாலோ திருவாகசம் அழியாது அந்த மண்ணிலே நிலையாக இருக்க வழி செய் என்றார். கருங்கல்லிலே பதிக்கச் சொல்லுகிறீர்களே, யாழ்ப்பாணத்திலே கருங்கற்கள் இல்லையே.என்றேன். அதற்கு அவர் பதில் சொல்கிறபோது ,தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய ராஜராஜ சோழனுக்குத் தஞ்சையிலே கருங்கற்கள் கிடைக்கவில்லை.ஆனால் அவன் 216அடி விமானத்தை மக்கள் இன்றைக்கும் வியக்கின்றவகையில் வேறொரு இடத்திலிருந்து கற்களைக் கொண்டு வந்து கட்டினான்.ராஜராஜனின் அரண்மனை இன்று இல்லை. அவனின் சமாதி இல்லை.ஆனால் அவன் கட்டிய அந்தக் கற்கோவில் இன்றும் அழியாது காப்பாற்றப்பட்டு இருக்கிறது.எனவே திருவாசகத்தைக் கல்லில் பதிக்க முயற்சி செய்.அது காப்பாற்றப்படும்.முயற்சிக்குப் பலனுண்டு – என்றார்.அவரிடம் விடை பெற்ற அந்தக் கணத்திலேயே திருவாகச அரண்மனை என்ற விடயம் என்னுள் முளைவிடத் தொடங்கிவிட்டது.ஆனால் ஊருக்குத் திரும்பிய சமயந்தொட்டுப் பலரிடம் இந்த விடயத்தைச் சொன்னதும் எவரும் இதைக் கட்டி முடிக்கலாம் என்று சொல்லவில்லை.எதிர்மறைக் கருத்துக்களையே சொன்னார்கள். எவரும் ஆர்வம் காட்டவில்லை.“தற்போது பல வழிகளிலே திருவாசகம் இன்ர நெற்றில் பாதுகாக்கப் பட்டிருக்கிறது.எனவே இது அவசியமற்ற விடயம்” என்று காரணத்தைச் சொன்னார்கள்.இருந்தும் என்னுள் இந்த முயற்சி சுடர்விடத் தொடங்கியது.
ஒரு வீடு கட்டி முடிப்பதற்குள் பல இடர்பாடுகளை எதிர் நோக்குகின்ற இக் காலகட்டத்தில், பல லட்சங்களை அல்ல, பல கோடி பெறுமதியான பொருட் செலவில் இக் கைங்கரியம் நடைபெற்றிருக்கிறது. பலபேர் ஒத்து நின்றாலும் இதை முதலில் நீங்கள் உங்களது மனக் காட்சியிலே வடித்த பின்னரே நடைமுறைப் படுத்தப்பட்டிருப்பதாக அறிந்தோம்.இது எப்படிச் சாத்தியமாயிற்று?
2015 இல் அவுஸ்திரேலியாவுக்குச் சொற்பொழிவுக்காகச் சென்றபோது, எனது சொற்பொழிவைக் கேட்பதற்கு வருகின்ற வைத்திய கலாநிதி வயிரமுத்து மனமோகன் மற்றும் அவர் பாரியார் திருமதி.சிவகௌரி மனமோகன் ஒரு நாள் என்னைச் சந்தித்தபோது, தங்களுக்குரிய 10 பரப்புக் காணி ஒன்று நாவற்குழி A9 பாதையில் உண்டென்றும் தாம் அதைச் சிவ பூமி அறக்கட்டளைக்கு எழுதப் போவமதாகவும் அதில் தென்னந் தோட்டத்தை அமைத்தால் நலம் என்று சொல்லியிருந்தனர்.ஆம் என்று கேட்டுவிட்டு அப்படியே விட்டுவிட்டேன். பின்பு நான் திருவண்ணாமலையில் இருந்து திரும்பி வந்த வேளை அகில இலங்கை இந்துமாமன்றத் தலைவர் ப. நீலகண்டன் அவர்கள் விபுலானந்தர் விழாவுக்காக யாழ்ப்பாணம் வந்திருந்தார்.வைத்திய கலாநிதி வ. மனமோகன் கொடுக்கச் சொன்னதாக உறுதிகளைக் கொண்டு வந்து தந்தார். அவை சிவ பூமி அறக்கட்டளைக்கு மாற்றப்பட்டிருந்தது.தான் அவுஸ்திரேலியா சென்ற சமயம் அதைத் தன்னிடம் தந்து சிவபூமி அறக்கட்டளைக்கு மாற்றுவதற்கான தத்துவத்தையும் தந்ததாகச் சொன்னார். காணி கிடைத்ததும் மீண்டும் திருவாசக அரண்மனைக்கான முயற்சிகள் மனதில் சுடர்விடத் தொடங்கிவிட்டன.
சித்தர் சொன்னது தொடக்கம் ஆரம்பித்த திருவாசக அரண்மனை என்ற ஆர்வம் என்னைத் துரத்திக் கொண்டிருந்தது. எல்லோருக்கும் தெரியும் கடந்த 17 ஆண்டுகளுக்கு முன்னர் நான் ஆரம்பித்த சிவ பூமி அறக்கட்டளையின் மூலம் கோண்டாவிலில் மற்றும் கிளிநொச்சியில் இரு மனவிருத்தி குன்றிய பிள்ளைகளுக்கான பாடசாலைகள், முதியோருக்கான முதியோர் இல்லம், கீரிமலையில் ஒரு யாத்தீரிகர் மடம், குப்பிளானில் ஆச்சிரமம் இவற்றுடன் திருகோணமலையிலும் ஒரு யாத்தீரிகர் மடத்துடன் மன விருத்தி குன்றியோருக்கான பாடசாலை என்று பல தருமப் பணிகளை முன்னெடுத்து வருகிறேன். இவற்றை நிருவகிக்கச் சிரமமிருக்கின்றதொரு நிலை காணப்படுகின்றபோது திருவாசக அரண்மனை என்ற விடயம் சாத்தியமாகுமா?என்று எனக்கு நானே கேள்வி கேட்டுக் கொண்டேன். இருந்தும் எனது எண்ணங்களை வரைபடமாகக் கீறிக் கையில் வைத்துக் கொண்டேன்.அந்த நேரத்திலே மீண்டும் அவுஸ்திரேலியா விலுள்ள அபயகரம் என்ற அறக்கட்டளை என்னை உரையாற்ற அழைத்திருந்தனர். அங்கு போனபோது சிட்னி முருகன் ஆலயத்தில் மூன்று நாள் சொற்பொழிவு நிகழ்த்தச் சந்தர்பம் கிடைத்தது. அங்கே எனது பேச்கைச் கேட்க வைத்தியர் மனமோகனும் அவரது பாரியார் சகிதம் வந்திருந்தார்.வழமை போல ஒரு இராப்போசன விருந்துக்கு அழைத்தனர். போய் உணவருந்திக் கொண்டிருந்த வேளை “அந்த நாவற்குழி நிலத்தில் என்ன செய்யப் போகிறீர்கள் ?” என்று கேட்டனர். கையில் வைத்திருந்த வரைபடத்தைக் காட்டிப் பல லட்சம் செலவாகும் என்ற விடயத்தைச் சொன்னபோது, தாங்கள் அப் பணியை முன்னெடுப்பதாக மகிழ்சியோடு சொன்னார்கள்.நாடு திரும்பியதும், உள்ளூர் ஒப்பந்தக்காரர் ஊரெழுவைச் சேர்ந்த கனகரட்ணம் சண்முகநாதன் என்பவரிடம் கட்டுமானப் பணியைக் கொடுத்தேன். அவர் அதனை முழுமைபடுத்தித் தந்து இருக்கிறார்.
அங்கு காணப்படுகின்ற கருங்கற்களில் பதித்த திருவாசகம் மிகவும் அருமையாகக் காணப்படுகிறது.எழுத்துக்கள் அச்சிட்டதைப் போலவும், ஒரேமாதிரியானவையாக வும் எப்படி கைகளால் செதுக்க முடிந்தது.அதற்குப் பல சிரமங்களை எதிர் நோக்கியதாகப் பேசிக் கொண்டனர். அதைப் பற்றி உங்கள் அனுபவம்..?
இதற்காகப் பல பேரைச் சென்று சந்திக்க வேண்டி இருந்தது. பலர் மறுத்துவிட்டார்கள். ஒருவர் தான் கணனி மூலம் செய்து தருவதாகச் சொல்லி 3X2 அடிக்கு ரூபா.50 ஆயிரம் செலவாகுமென்று ஒரு கல்லைப் பதித்துத் தந்தார். அது எனக்குத் திருப்தியாக இல்லை.இன்னொருவர் ஒரு கல்லைப் பதித்துத் தருவதாகச் சொல்லிச் செய்த கல்லில் முதல் நாலு அடிகளில் மூன்று பிழைகள் காணப்பட்டன.ஆனால் நான் முயற்சியை விடவில்லை. ஒரு நாள் மட்டக்களப்பு மயிலம்பாவையிலுள்ள காமாட்சி கோயிலுக்குத் தரிசனத்திற்காகச் சென்றபோது அங்குள்ளவர்களிடம் இது பற்றி விசாரித்தேன். அங்கு நின்ற அன்பர் முகுந்தன் என்னிடம் ஒரு தொலைபேசி இலக்கத்தைத் தந்து ஆனந்தன் வினோத் என்ற இளைஞன் கிளிநொச்சி விவேகானந்த நகரில் இருப்பதாகச் சொல்லி அவர் தான் மாவீரர் மயானத்திலிருந்த கற்கள் அத்தனைக்கும் பெயர்களையும்வெட்டிக் கொடுத்தவர் , அவரைச் சென்று பாக்குமாறு சொன்னார். அவரை அழைத்தேன்.மாதிரிக்கு ஒன்றை வெட்டிக் கொடுத்தார். ககைவிரல்களினால் உளி கொண்டு எந்த வித அச்சுப் பிழைகளின்றிச் செதுக்கியவை. மிகவும் அச்சிட்டதைப்போன்றிருந்தது.அவரை ஒப்பம் செய்தேன்.கொழும்பிலும் நாவலப்பிட்டியிலும் இருந்து கொண்டுவரப்பட்ட ஒரு அங்குலத் தடிப்பான கருங்கற்களில் பாடல்கள் பதிவு பெற்றிருக்கிறது.மொத்தம் 22 இளைஞர்கள் பல மாதம் தங்கியிருந்து திருவாசகத்திலுள்ள மொத்தம் 658 பாடல்களையும் செதுக்கி உதவியிருக்கிறார்கள். இதைவிட திருவாசகத்தின் பதினொரு மொழிபெயர்ப்புக்கள் டிஜிரல் மூலம் அச்சிட்டு அங்கே தொங்கவிடப் பட்டிருக்கின்றன.ஆனால் இதுவரை மொத்தம் இருபத்தியொரு மொழிகளிலே திருவாசகம் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறதாம். அதுவும் சீன மொழியில் இற்றைக்கு 85 ஆண்டுகளுக்கு முன்னர் மொழி பெயர்க்கப்பட்டு விட்டது.அதற்கு முன்னர் தங்கோல் என்ற தாய்லாந்து மொழியில் மொழிபெயர்ப்பாகிவிட்டதாம்.இதைவிட இறைவன் குருவடிவிலே மாணிக்க வாசகரை ஆட்கொண்டதனால் குருவுக்கு அங்கே கோயில் அமைத்திருக்கின்நோம். இதைவிட இருபத்தியொரு அடியிலான கருங்கல்லாலான ரதம் ஒன்றையும் அமைத்து அதில் பஞ்சலோகத்திலான சிவலிங்கம் ஒன்றையும், மணிவாசகரையும் பிரதிஷ்டை செய்திருக்கின்நோம்.இதை திருமதி. அபிராமி கைலாசபிள்ளை அவர்கள் அமைத்துக் தந்திருக்கிறார். அரண்மனை வளாகத்தில் 108 சிவலிங்கங்களும் அவை ஒவ்வொன்றிற்கு மேலாக ஒவ்வொரு மணி என்று 108 மணிகளையும் அமைத்திருக்கிறோம்.இதைவிட கல்வி சார்ந்த நடவடிக்கையாக திருவாசகம் சார்ந்த அனைத்து விடயங்களும் அடங்கிய ஒரு ஆராய்ச்சி நூல் நிலையத்தை அமைத்திருக்கிறோம். திருவாசகத்தை, திருமுறைகளை மற்றும் சைவ சித்தாந்த நடவடிக்கைகளை ஆய்வுக்குட்படுத்துபவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதமாக இருக்கும் என்றது எனது கருத்து. அத்துடன் கருங்கல் எழுத்து வடிவங்கள், சிற்பங்கள், இரதம் என்பன பற்றிய ஆய்வாளர்களுக்கும் இது ஒரு பொருத்தமான களமாகலாம் – என்கிறார் ஆறு திருமுருகன்.சைவ அடையாளங்கள் மறைக்கப்படுகின்ற காலகட்டத்தில் காலத்தின் தேவை கருதி கடவுளால் அமைக்கபட்ட அரண்மனை இது என்றும் கருதலாமோ?