குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
புங்குடுதீவு மாணவி கொலை வழக்கில் முதலாவது சந்தேகநபராக இருந்து ரயலட்பார் நீதிமன்றால் நிரபராதி என விடுவிக்கப்பட்ட பூபாலசிங்கம் இந்திரகுமாரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றில் நேற்றைய தினம் புதன்கிழமை நீதிவான் அ.ஜூட்சன் முன்னிலையில் குறித்த வழக்கு எடுத்து கொள்ளப்பட்டது. அதன் போதே சந்தேகநபரை எதிர்வரும் 01ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் தடுத்து வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.
குறித்த நபர் , மாணவி படுகொலை வழக்கில் சந்தேக நபராக தடுத்து வைக்கப்பட்டிருந்த கால பகுதியில் , காவற்துறை உத்தியோகஸ்தர் ஒருவரின் பெயரை குறிப்பிட்டு கொலை மிரட்டல் விடுத்தார் என காவற்துறையினரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கிலையே குறித்த நபர் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சாட்சியங்களை அச்சுறுத்தியமை தொடர்பிலான வழக்கில் சந்தேக நபரை பிணையில் விடுவிப்பதற்கான நியாயாதிக்கம் நீதவான் நீதிமன்றுக்கு இல்லமையால் , அது தொடர்பில் பிணை கோரி மேன்முறையீட்டு நீதிமன்றிலே விண்ணப்பம் செய்ய வேண்டும். அதற்கான நடவடிக்கைகள் இல்லாத காரணத்தால் குறித்த நபர் தொடர்ந்து விளக்கமறியலில் தடுத்து வைக்கபட்டு உள்ளார்.
அது தொடர்பில் முன்னர் ஊர்காவற்துறை நீதிமன்ற நீதிவானாக இருந்த ஏ.எம்.எம். றியாழ் குறித்த நபர் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்க கோரி சட்டமா அதிபர் திணைகளத்திற்கு கடிதம் அனுப்பி இருந்ததுடன் பின்னர் நினைவூட்டல் கடிதம் கூட அனுப்பி இருந்தார். என்பது குறிப்பிடத்தக்கது.