முகாம்கள் மற்றும் படையினரைக் குறைப்பது இராணுவத் தலைமையகம் எடுத்துள்ள முடிவே தவிர, அரசாங்கத்தால் எடுக்கப்பட்ட முடிவல்லவெனத் தெரிவித்துள்ள பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன, தேசிய பாதுகாப்பு பூச்சியத்துக்கு கொண்டு செல்லப்படமாட்டாது எனத் தெரிவித்துள்ளார்.
அத்துடன், வடக்கு, கிழக்கிலிருக்கும் படை முகாம்கள் எச்சந்தர்ப்பத்திலும் அகற்றப்படமாட்டாது எனவும் குறைவான எண்ணிக்கையைக் கொண்டிருக்கின்ற முகாம்கள் ஒன்றோடு ஒன்றாக இணைக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இராணுவ முகாம்கள் மற்றும் படைவீர்களின் எண்ணிக்கையைக் குறைப்பது தொடர்பில், ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினரான, தினேஷ் குணவர்தன எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
எது எவ்வாறாயினும் வடக்கு, கிழக்கிலுள்ள படை முகாம்கள் எச்சந்தர்ப்பத்திலும் அகற்றப்படமாட்டாது என உறுதியளித்துள்ள அவர் முகாம்களை அகற்ற வேண்டிய தேவை எமக்கில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் தேசிய பாதுகாப்புக்கு எவ்விதத்திலும் அச்சுறுத்தல் ஏற்படாது எனவும் தேசிய பாதுகாப்பு பூச்சியத்துக்குக் கொண்டு வரவோ அல்லது சர்வதேசத்துக்கு ஏற்படைய வகையிலோ இச்செயற்பாடு முன்னெடுக்கப்படவில்லை. சுருங்கக் கூறின், இது இராணுவம் அதன் நிர்வாகத்துக்காகச் செய்த செயற்பாடாகும் என குறிப்பட்டுள்ளார்.