ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம், தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணாது, இனங்களுக்கிடையில் மோதல்களைத் தோற்றுவித்து, நாட்டில் விடுதலைப் புலிகளை மீண்டும் உருவாக்குவதற்குத் திட்டமிடுகின்றதென, ஒன்றிணைந்த எதிரணி குற்றஞ்சாட்டியுள்ளது. பொரளையில் உள்ள என்.எம்.பெரேரா மத்திய நிலையத்தில் ஒன்றிணைந்த எதிரணியினரின் கட்சித் தலைவர்களின் ஊடகவியலாளர் சந்திப்பு, நேற்று (18) இடம்பெற்றது. அதில் கலந்துகொண்டிருந்த லங்கா சமசமாஜக் கட்சியின் தலைவர், பேராசிரியர் திஸ்ஸ விதாரண நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிப்பீடமேறிய பின்பு நாட்டில் ஏற்பட்ட இன மோதல்களே அரசாங்கத்தின் இத்திட்டத்தை அம்பலப்படுத்துவதாகவும் குறிப்பிட்டார்.
அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், “முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தன தலைமையில் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம், 1983ஆம் ஆண்டு இனக்கலவரத்தை உருவாக்கி, அப்பாவித் தமிழ் மக்களைப் படுகொலை செய்து, அவர்களின் சொத்துகளை எரித்துச்சாம்பலாக்கியது. இதனைத் தொடர்ந்தே வடக்கில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு உருவாகியது” எனக் குறிப்பிட்டார்.
இதேவேளை “இலங்கையே ஏனைய நாடுகளுக்கு போதைப்பொருளை வழங்கும் மத்திய நிலையமாக மாறியுள்ளது. எனினும், போதைப்பொருளைக் கட்டுப்படுத்த மரணதண்டனை ஒரு தீர்வாக அமையாது” எனத் தெரிவித்த பேராசிரியர் திஸ்ஸ விதாரண, “உலக நாடுகளில் 104 நாடுகள், மரணதண்டனை வழங்குவதை முழுமையாக கைவிட்டுள்ளன. 54 நாடுகளில் மரணதண்டனை அமுலில் இருந்தாலும், 30 நாடுகள் மாத்திரமே அதனை நடைமுறைப்படுத்துகின்றன. அவ்வாறான நாடுகளில் ஒன்றான பிலிப்பைன்ஸில் போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு மரணதண்டனை வழங்கப்படுகின்றபோதிலும், போதைப்பொருள் கடத்தல் குறைவடையவில்லையெனத் தெரியவந்துள்ளது. “உலக நாடுகள் பல, மரணதண்டனை வழங்குவதனூடாக குற்றங்கள் குறைவடையாது என்பதை ஏற்றுக்கொண்டுள்ளன. ஆகவே, மரணதண்டனையை அமுல்படுத்த அரசாங்கம் முயற்சிப்பது ஏற்புடையதல்ல” எனவும் அவர் தெரிவித்தார்.