மட்டக்களப்பு மாவட்டத்தில் கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் மாங்கன்று நடுவதற்காக ஊர்காவல் துறையினர் 25 ஏக்கர் காணி கோரி விண்ணப்பித்துள்ளதாகவும் இதனை தடுத்து நிறுத்துமாறும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீ. யோகேஸ்வரன் கோரியுள்ளார்.
இது தொடர்பில் பிரதேச செயலாளருக்கு கடிதம் ஒன்றை அவர் எழுதியுள்ளார்.
இச்செயற்பாடுகள் மாகாண காணி ஆணையாளரின் ஆலோசனையில் இடம்பெறுகிறன என்றும் ஊர்காவல் துறையினருக்கு காணி இங்கு வழங்க வேண்டிய அவசியம் இல்லை. தேவையெனில் அவர்கள் பொலனறுவை மாவட்டத்தில் பெற்றுக்கொள்ளுமாறும் அவர் கூறியுள்ளார்.
அத்துடன் ஏன் ஊர்காவற்படைக்கு காணி கோர வேண்டும் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். உண்மையில் இதில் ஏதோ ஓர் இன ரீதியான திட்டம் அமைந்துள்ளதாக சந்தேகிப்பதாகவும் மட்டக்களப்பு மாவட்ட மக்கள் பலர் காணி இன்றி கஷ்ரப்படும் நிலையில், இவர்களுக்கு காணி வழங்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.
பிரதேச செயலகம் இதற்கு காணி வழங்கும் செயற்பாட்டை நிறுத்த வேண்டுமெனக் கோருவதாக குறிப்பிட்டுள்ள அவர் இது தொடர்பில் உரிய பதிலை எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
இக் கடித்தின் பிரதிகள் கிழக்கு மாகாண ஆளுநர், கிழக்கு மாகாண காணி ஆணையாளர், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.