நீதிமன்ற தீர்ப்பை நடைமுறைப்படுத்தினால் வட மாகாணசபை குழப்பம் தீரும்.. – சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட அழுத்தம் கொடுப்போம்…
குளோபல் தமிழ்ச்செய்தியாளர்…
காணாமல்போனவர்கள் அலுவலகத்தின் அமர்வுகளில், அவர்களின் பெருமளவில் பங்கெடுத்திருக்கின்றார்கள். அதேபோல் சில உறவினர்கள் அதனை எதிர்த்து போராட்டங்களை நடாத்தியுள்ளதுடன், பகிஸ்கரிப்பும் செய்துள்ளார்கள். அந்த சிலருடைய மன நிலைப்பாட்டை நாங்கள் அறிந்திருக்கின்றோம். ஆனாலும் கூட தற்போதிருக்கும் நிலையில் நடைமுறைச்சாத்தியமானதும், சட்டரீதியானதுமான முறையாக காணாமல் ஆக் கப்பட்டோருக்கான அலுவலகமே இருக்கின்றது. என தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
காணாமல்போனவர்கள் அலுவலகம் குறித்து நேற்று சனிக்கிழமை சாவகச்சேரியில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவ்வாறு தெரிவித்தார்.
அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், காணாமல்போனவர்கள் தொடர்பான அலுவலகத்தினை காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சிலர் சில இடங்களில் பகிஷ்கரித்திருக்கின்றார்கள். ஆனாலும் பெருமளவு உறவுகள் அலுவலகத்தின் அமர்வுகளில் கலந்து கொண்டிருக்கின்றார்கள். பகிஷ்கரிக்கிறவர்களின் மனநிலையை நாங்கள் நன்றாகவே உணர்ந்து கொள்கிறோம். ஆனாலும் இப்போதுள்ள நிலையில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விவகாரத்தை கையாளுவதற்கு இந்த அலுவலகமே நடைமுறைச்சாத்தியமானது.
காணமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கேட்பது போல் பட்டியல் கொடுப்பதோ? சில இடங்களை காண்பிப்பதோ சாத்தியமற்றது. அதனை நாங்கள் கேட்டாலும் கூட உண்மையை தருவார்கள் என்றோ, உண்மையான இடங்களை காண்பிப்பார்கள் என்றோ எந்த உத்தரவாதமும் இல்லை. ஆகவே நடைமுறைச்சாத்தியமானதும், சட்டபூர்வமானதுமான இந்த அலுவலகமே சிறந்தது. என தெரிவித்தார்.
அதேவேளை வடமாகாண அமைச்சர் சபை தொடர்பான தற்போதைய நிலைப்பாடுகள் குறித்து கேட்ட போது ,
வடமாகாண அமைச்சர் சபை குறித்து மேன்முறையீட்டு நீதிமன்றம் மிக தெளிவாக விடயங்க ளை கூறியுள்ளது. அதில் யாருக்கு அமைச்சர்களை நியமிக்கும் அதிகாரம் உள்ளது? யாருக் கு அமைச்சர்களை நீக்கும் அதிகாரம் உள்ளது? என்பது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
அதன் பிரகாரம் முதலமைச்சருக்கே அந்த அதிகாரங்கள் உள்ளது. இது முதலமைச்சருக்கு தெரியாமல் இல்லை. ஆனால் தமக்கு தெரியாததுபோல் பாசாங்கு செய்வதாலேயே இவ்வளவு பிரச்சினைகள் உருவாகியிருக்கின்றன.
எனவே மேன்முறையீட்டு நீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியிருக்கும் விடயங்களை அவ்வாறே நடைமுறைப்படுத்தினால் சகல பிரச்சினைகளும் தீர்க்கப்படும். என்றார்.
யாழ்.குடாநாட்டில் தற்போது ஏற்பட்டு உள்ள சட்டம் ஒழுங்கு சீர்குலைவு தொடர்பாக கேட்ட போது ,
இவ்வாறான சம்பவங்களை கட்டுப்படுத்த மாகாணசபைக்கு சட்டம் ஒழுங்கு அதிகாரங்கள் பூரணமாக பகிரப்படவேண்டும். மேலும் இந்த பிரதேசத்தில் பேசப்படும் மொழியை தமது சொந்த மொழியாக கொண்டவர்கள் காவற்துறைச் சேவையில் ஈடுபடவேண்டும்.
அவ்வாறு இருந்தால் மட்டுமே குற்றங்களை குறைக்க இயலும். இல்லையேல் குற்றங்களை குறைப்பது கஸ்டமானதொரு விடயமாகும். ஆனால் அவ்வாறு எல்லாம் நடப்பதற்காக பார்த்துக் கொண்டிருக்க இயலாது.
சட்டம் ஒழுங்கு மத்திய அரசாங்கத்தின் கைகளில் இருக்கும் நிலையில் அவர்கள் அதனை சரியாக நடைமுறைப்படுத்தவேண்டும். இந்த விடயம் தொடர்பாக நாங்கள் தொடர்ச்சியா க அழுத்தங்களை கொடுத்துக் கொண்டிருக்கிறோம்.
அதனாலேயே சட்டம் ஒழுங்கு அமைச்சர் மற்றும் காவற்துறைமா அதிபர் ஆகியோர் இங்கே வந்தார்கள். ஆனாலும் ஒன்றும் முடிந்தபாடில்லை. ஆகவே இந்த விடயம் தொடர்பாக தொடர்ந்தும் அழுத்தங்களை கொடுப்போம். என தெரிவித்தார்.