குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…
பலாலி விமான நிலையத்திலிருந்து இந்தியாவுக்கு உடனடியாக விமான சேவைகள் ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. யாழில்.நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற உயர் மட்ட குழு கூட்டத்தில், விமான நிலையம் தற்போதுள்ள நிலையிலிருந்தே இந்தச் சேவை தொடங்கப்படும் எனவும், அதன் சேவைகள் ஆரம்பிக்கப்பட்ட பின்னர், பிராந்திய விமான நிலையமாக பலாலியை தரமுயர்த்தும் கட்டுமானப் பணிகள் முன்னெடுக்கப்படும் எனவும், இந்தப் பணிகளுக்காக மேலதிக காணிகள் எவையும் சுவீகரிக்கப்படாது எனவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இந்திய அரசு, தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு இடையிலான முத்தரப்புச் சந்திப்பின் போது இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது.
பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணத்துக்கு சென்றிருந்தார். இந்திய நிதி உதவியில் ஆரம்பிக்கப்படும் நோயாளர் காவுவண்டிச் சேவையை தொடங்கி வைப்பதற்காக இலங்கைக்கான இந்தியத் தூதுவர் தரன்ஜித் சிங்கும் யாழ்ப்பாணம் சென்றிருந்தார். இரண்டு தரப்பினரையும், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினர் நேற்றுச் சந்தித்தனர். யாழில்.உள்ள தனியார் விடுதியில் நேற்று (22.07.18) இந்தச் சந்திப்பு இடம்பெற்றது. அதன் போதே அந்த முடிவு எட்டப்பட்டது.
பலாலி விமான நிலையத்தை பிராந்திய விமான நிலையமாக தரம் உயர்த்துவதற்கு முதல்கட்டமாக தற்போது இருக்கின்ற நிலையிலேயே இந்தியாவுக்கு விமான சேவைகள் ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அந்தச் சேவையைத் தொடங்குவதற்கு உடனடியாக என்ன தேவைகள் உள்ளனவோ அவை பூர்த்தி செய்யப்படும்.
பன்னாட்டு விமானங்கள்தரையிறங்குவதற்கும் இங்கிருந்து புறப்பட்டுச் செல்தற்கும் ஏதுவாக சமிஞ்ஞைக் குறியீடுகள் (navigation) அமைக்கப்படவேண்டும். குடிவரவு மற்றும் குடியகல்வு, ஆகாயத்திணைக்களம் என்பனவற்றைச் செயற்படுத்துவதற்கு இப்போதுள்ள கட்டடங்கள் போதுமா என்பதை ஆராயவேண்டும்.
இல்லாவிடின் தற்காலிக ஏற்பாடுகள் செய்யப்படவேண்டும் என சிவில் விமான போக்குவரத்துச் சபையினர் சந்திப்பில் கூறியுள்ளனர். அவற்றை உடனடியாகச் செயற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவிலிருந்து தொழில்நுட்பக் குழுவினர் உடனடியாக வருகைதந்து பலாலி வானூர்தி நிலையத்தைப் பார்வையிட்டு இந்தியாவுக்கான விமான சேவைக்கான ஏனைய அடிப்படைத் தேவைகளை மதிப்பீடு செய்வார்கள். விமான சேவை ஆரம்பிக்கப்பட்ட பின்னர் பிராந்திய விமான நிலையமாக தரமுயர்த்தி ஏனைய நாடுகளுக்கான விமான சேவைகளும் நடத்தப்படவுள்ளது.
தற்போதுள்ள விமான ஓடுதளத்துக்கு மேற்குப்புறமாக 500 ஏக்கர் காணியில் புதிய வானூர்தி நிலையத்துக்கான கட்டிடங்கள் அமைக்கப்படவுள்ளன. இந்த அபிவிருத்தி முன்னேற்ற மீளாய்வு மாதாந்தம் கொழும்பில் நடத்தப்படவுள்ளது.
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, ஈ.சரவணபவன், எம்.ஏ.சுமந்திரன் மற்றும் வலி.வடக்குப் பிரதேச சபைத் தவிசாளர் சோ.சுகிர்தன் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இராஜாங்க அமைச்சர் ஹர்ச டி சில்வா ஆகியோரும், இந்தியத்தரப்பில் இலங்கைக்கான இந்தியத் தூதுவர் தரன்ஜித் சிங், இரண்டாம் நிலைத் தூதுவர் யாழ்ப்பாணத்திலுள்ள தூதரகத்தின் கொன்சியூலர் ஜெனரல் பாலச்சந்திரன், தூதரக அதிகாரிகளும், யாழ்ப்பாண மாவட்டச் செயலர் நா. வேதநாயகன், யாழ். மாவட்ட இராணுவக் கட்டளை தளபதி, சிவில் விமான போக்குவரத்துச் சபை பணிப்பாளர் நிமல்சிறி ஆகியோரும் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டனர்.