குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
தென்மராட்சியின் இனங்காணப்பட்ட பிரதேசங்களில் நன்னீர் மீன் வளர்ப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக சாவகச்சேரி பிரதேச சபைத் தவிசாளர் க.வாமதேவன் தெரிவித்தார். பொதுமக்கள் மட்டத்திலும் பிரதேசசபை உறுப்பினர்கள் மட்டத்திலும் தெருக்களை புனரமைத்தல், வீதி விளக்குகளை பொருத்துதல், கழிவுகளை அகற்றுதல் போன்றவையே பிரதேச சபையின் பணிகள் என்ற பொதுவான நிலைப்பாடு உள்ளது.
ஆனால் எமது பிரதேசங்களை அபிருத்தி செய்வதற்கு எமது பகுதிகளிலேயே பல்வேறுபட்ட முதலீடுகளை உருவாக்க வேண்டும். அந்த வகையில் சாவகச்சேரி பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் நன்னீர் மீன் வளர்ப்பு மேற்கொள்ளக்குடிய பிரதேசங்கள் இனங்காணப்பட்டுள்ளது.
மட்டுவில் சந்திரபுரம் பகுதியில் சுமார் 1500 ஏக்கர், கைதடியில் சுமார் 1500 ஏக்கர், தனங்கிளப்பில் சுமார் 2000 ஏக்கர் நிலப்பரப்பு என மொத்தமாக சுமார் 5000 ஏக்கர் நிலப்பரப்பு நன்னீர் மீன்வளர்ப்பு நடவடிக்கைக்காக இனங்கணப்பட்டு திட்ட வரைவு தயாரிக்கப்பட்டுள்ளதுடன் உத்தேச செலவீனங்களும் தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்ட வரைபைத் தொடர்ந்து உரிய அனுமதிகளுடன் இதற்கான நிதிமூலங்களை எவ்வாறு பெற்றுக்கொள்வது அல்லது முதலீட்டாளர்களை எவ்வாறு இனங்காண்பது என்பது தொடர்பான ஆலோசனைகள் தொடர்ந்து இடம்பெற்றுவருவதாக சாவகச்சேரி பிரதேச சபைத் தலைவர் தெரிவித்தார்.
தென்மராட்சி பிரதேசத்தில் நன்னீர் மீன்வளர்ப்பு மேற்கொள்ளப்பட்டால் வேலைவாய்ப்பு மற்றும் நீண்டகால வருமானத்தை பெற்றுக்கொள்ள முடியும் என்பதுடன் பிரதேச அபிவிருத்திகளையும் மேற்கொள்ள முடியும் எனவும் சாவகச்சேரி பிரதேச சபைத் தலைவர் க.வாமதேவன் தெரிவித்தார்.