குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
முற்போக்கு தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர் பதவிக்கும், அக்கட்சியின் மாநகரசபை உறுப்பினராக இருந்த விஜயகாந்தின் இடத்திற்கான மாநகர சபை உறுப்பினர் பதவிக்கும், நர்மதா விஜயகாந்தை நியமிக்க கட்சி முடிவெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கட்சி விடுத்துள்ள ஊடக அறிக்கையில்,
கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த விஜயகாந்துக்கு அண்மையில் யாழ் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினை அடுத்து அவர் யாழ் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளநிலையில் யாழ் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினை எதிர்த்து யாழ் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டிருப்பதாலும் அவரின் பிணைக்கான சீராய்வு மனுவும் அதே நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வருகின்றது.
இந்நிலையில் கட்சியின் எதிர்கால செயற்பாடுகள் சம்பந்தமாக ஆராய்வதற்காக கட்சியின் ஆட்சி மன்றக்குழு 19.07.2018ம் திகதி கட்சியின் தலைவர் மருசலீன் அன்ரனி தலைமையில் கூடி தற்போதைய கட்சியின் செயற்பாடு சம்பந்தமாகவும் எதிர்கால கட்சியின் செயற்பாடு சம்பந்தமாகவும் ஆராயப்பட்டது.
அத்துடன் கட்சியின் செயலாளர் தற்போது செயற்பட முடியாமல் இருப்பதால் மக்களின் சேவைக்கு தற்காலிகமாக பொதுச்செயலாளர் ஒருவர் நியமிக்கப்பட வேண்டும் என முடிவெடுக்கப்பட்டதன் பிரகாரம் நர்மதா விஜயகாந்தை தற்காலிக பொதுச்செயலாளராக கடமையாற்றுவதற்கும் வங்கி மற்றும் ஏனைய ஆவணங்களில் கையொப்பம் இடுவதற்கும் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக முற்போக்கு தமிழ் தேசிய கட்சியின் ஊடககுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொதுச்செயலாளராக இருந்து நடந்து முடிந்தயாழ் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட்டு யாழ் மாநகரசபை வட்டாரம் 22ல் வெற்றி பெற்ற யாழ் மாநகரசபை உறுப்பினர் பதவிக்கு நர்மதா விஜயகாந்தினை சிபார்சு செய்வதாகவும் முடிவெடுக்கபட்டதுடன் அதனை ஆட்சிமன்றக்குழு உறுப்பினர்கள் அனைவரும் ஏக மனதாக ஏற்றுக் கொண்டார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.