பி.மாணிக்கவாசகம்…
கறுப்பு ஜுலை கலவரம் அல்லது 83 கலவரம் என சாதாரணமாகக் குறிப்பிடப்படுகின்ற 1983 ஆம் ஆண்டின் தமிழர்களுக்கு எதிரான வன்முறைகள் நடைபெற்று 35 வருடங்கள் ஆகின்றன. மூன்றரை தசாப்தங்கள் கடந்துவிட்ட போதிலும், அந்த வன்முறைகளின் கோரமான மனவடுக்கள் பாதிக்கப்பட்ட தமிழர்களின் மனங்களில் இருந்து இன்னும் மறையவில்லை.
இருப்பினும், சிங்கள மக்களின் ஆவேசத்தைக் கிளப்பியதனால் ஏற்பட்ட ஓர் இனக்கலவரமாக அதனை நோக்குகின்ற ஒரு போக்கும் நிலவுகின்றது. உண்மையிலேயே, அரசியல் ரீதியாகத் திட்டமிட்டு தமிழ் மக்களுக்கு எதிராக அரங்கேற்றப்பட்ட இன ஒடுக்குமுறையின், இன அழிப்பு நடவடிக்கையின் மிக மோசமான ஆரம்ப நிகழ்வாக அது வரலாற்றில் பதிவாகியிருக்கின்றது.
தமிழ் மக்களுக்கு எதிராக 1956, 1958, 1977, 1981 ஆகிய ஆண்டுகளில் பேரினவாதிகளினதும், பேரின ஆட்சியாளர்களினதும் ஆசிர்வாதத்துடன் வளர்ச்சிப் போக்கில் முன்னெடுக்கப்பட்ட வன்முறைச் சம்பவங்களின் போக்கில், அடுத்த கட்டமாகவே, 1983 கறுப்பு ஜுலை வன்முறைகள் அரங்கேற்றப்பட்டன என்பதை ஊன்றிக் கவனிப்பவர்களால் புரிந்து கொள்ள முடியும்.
அது மட்டுமல்லாமல், நீண்டகால இன அழிப்பு நடவடிக்கைகளை நன்கு திட்டமிட்ட வகையில் பேரினவாத அரசியல்வாதிகள் தொடர்ச்சியாக மேற்கொள்வதற்குரிய பிள்ளையார் சுழியாகவும் அது பயன்படுத்தப்பட்டிருக்கின்றது.
ஆனால், சிங்கள மக்கள் மத்தியில் அது, திடீர் ஆவேசத்தினால் ஏற்பட்ட ஒரு மன எழுச்சி சார்ந்த நிகழ்வாக மாறிப்போயுள்ளது. மறக்கப்பட்டுவிட்டது என்றுகூடச் சொல்லலாம். தமிழ் மக்களுக்கு எதிராக காலத்துக்குக் காலம் முன்னெடுக்கப்பட்ட இனவன்முறை தாக்குதல்களின் உள்நோக்கத்தை, அவற்றில் மறைந்துள்ள இனவாத ஒடுக்குமுறை அரசியலின் தாற்பரியத்தை தமிழ்த் தரப்பினரில் சிலர் இன்னும் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. அதன் காரணமாகவே, கறுப்பு ஜுலை வன்முறைச் சம்பவத்தை, திடீர் ஆவேச மன எழுச்சிக்கு உள்ளாகி செயற்படுவதை இயல்பாகக் கொண்ட சிங்கள மக்களின் உணர்ச்சி வசப்பட்ட ஓர் எதிர்வினைச் செயலாகவே அவர்கள் நோக்குகின்றார்கள்.
அந்த வகையில் 83 கறுப்பு ஜுலை வன்முறைகளை மீண்டும் மீண்டும் நினைவுகூர்வதும், அதுபற்றி சிந்திப்பதும், நாட்டின் நல்லிணக்கத்திற்கும், இன ஐக்கியத்திற்கும் பாதகமாகவே அமையும் என்றும் அவர்கள் சித்தரிக்கவும் முற்படுகின்றார்கள்.
யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் 13 சிங்கள இராணுவத்தினரை விடுதலைப்புலிகள் ஒளித்திருந்து தாக்கிக் கொலை செய்ததன் விளைவாக எழுந்த, ஓர் உணர்ச்சிகரமான திடீர் ஆவேசத்தின் எதிர் நடவடிக்கையாகவே, 83 கறுப்பு ஜுலை வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்றதாகவே, பெரும்பான்மையான சிங்கள மக்களால் பார்க்கப்படுகின்றது.
சிங்கள மக்கள் அனைவருமே தமிழர்களுக்கு எதிராக வன்முறைகளில் ஈடுபடவில்லை என்பதையும், சிங்கள மக்களில் பெருமளவானோர், தங்கள் இனத்தைச் சார்ந்த குண்டர்களினால் தாங்களும் தாக்கப்படுவோம் என்ற அச்சத்துக்கு மத்தியிலும், பாதிக்கப்பட்ட தமிழர்கள் பலருக்கு அபயமளித்து, ஆபத்துக்களில் இருந்து பாதுகாத்து அனுப்பி வைத்தார்கள் என்பதையும் இந்தப் பார்வைக்கு ஆதாரமாக அவர்கள் முன்வைக்கின்றார்கள். இது, சாதாரண சிங்கள மக்கள் மத்தியில் அரசியல் ரீpதியான ஒரு பிரசார கருத்தாகவும் முன்வைக்கப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால், ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்த ஒரு நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் வெகு நேர்த்தியாக நடத்தி முடிக்கப்பட்ட ஓர் இனப்படுகொலை நடவடிக்கையே 83 கறுப்பு ஜுலை வன்முறை என்பதே உண்மை.
என்ன நடந்தது, எப்படி நடந்தது?
தமிழர்கள் செறிந்து வாழ்கின்ற இலங்கையின் வடக்கே பலாலி இராணுவ தளத்தில் இருந்து, யாழ்ப்பாணம் நகரத்தை நோக்கிச் சென்ற இராணுவ வாகனத் தொடரணி ஒன்றை திருநெல்வேலி தபால் பெட்டிச் சந்தியில் பதுங்கியிருந்த விடுதலைப்புலிகளின் அணியொன்று தாக்கியதில் 13 இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். இலங்கையின் இலகுக் காலாட்படையைச் சேர்ந்த லெப்டினன் தர இராணுவ அதிகாரியாகிய வாஸ் குணவர்தன அவர்களில் முக்கியமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தச் சம்பவம் 1983 ஆம் ஆண்டு ஜுலை மாதம் 23 ஆம் திகதி இரவு 11.30 மணியளவில் நடைபெற்றது.
நான்கு வாகனங்களைக் கொண்டிருந்த அந்த இராணுவ வாகனத் தொடரணியின் முன்னால் சென்ற இராணுவ ஜீப் வண்டி விடுதலைப்புலிகளின் கண்ணிவெடித் தாக்குதலில் சிக்கி வெடித்துச சிதறியது. பின்னால் வந்த இராணுவ ட்ரக் உள்ளிட்ட வாகனங்களில் இருந்த இராணுவத்தினர் மீது முற்றுகைத் தாக்குதலைத் தொடுத்த விடுதலைப்புலிகளுக்கும் இராணுவத்தினருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது, சம்பவ இடத்திலேயே 13 இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். இரண்டு பேர் படுகாயமடைந்து, பின்னர் மரணமடைந்தனர். விடுதலைப்புலிகள் தரப்பிலும் உயிர்ச்சேதம் ஏற்பட்டிருந்தது.
நள்ளிரவு நேரத்தில் இடம்பெற்ற இந்தச் சம்பவம் பற்றிய தகவல்கள் சிங்களவர்கள் கொல்லப்பட்டதாக பெரிதுபடுத்தப்பட்ட அளவில் நாட்டின் தென்பகுதி எங்கும் சிங்கள மக்கள் மத்தியில் பரப்பப்பட்டது,
மறுநாள் காலை பத்திரிகைகளில் தலைப்புச் செய்தியாக இந்தச் சம்பவம் பிரசுரமாகியிருந்தது. கொல்லப்பட்டவர்களின் பெயர் விபரங்கள் அந்தச் செய்தியில் விபரமாக வெளியிடப்பட்டிருந்ததது. செய்தித் தணிக்கை இருந்த போதிலும், யாழ்ப்பாணத்தில் 13 சிங்களவர்கள் கொல்லப்பட்டார்கள் என்ற வகையில் எவ்வாறு செய்தி பிரசுரமாவதற்கு செய்தித் தணிக்கை அதிகாரி டக்ளஸ் லியனகே அனுமதித்தார்? வன்முறைகள் வெடிப்பதற்கு வழிசமைக்கும் வகையில் இவ்வாறு செய்தி வெளியிட அனுமதிப்பதன் மூலம் செய்தித் தணிக்கை நடைமுறைப்படுத்துவதில் என்ன பயன் இருக்கின்றது என்று ஜுலை வன்முறைகள் தொடர்பில் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பிய அப்போதைய கலவான தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சரத் முத்தெட்டுவேகம வினவியிருந்தார்.
அக்காலப்பகுதியில் தமிழ் இளைஞர்களின் ஆயுதப் போராட்டம் அங்கொன்றும் இங்கொன்றமான தாக்குதல்களே இராணுவத்தின் மீது மேற்கொள்ளப்பட்டு வந்தன. ஆனால் திருநெல்வேலிச் சந்தியில் இடம்பெற்ற தாக்குதலிலேயே 13 இராணுவத்தினர் ஒரே தடவையில் கொல்லப்பட்டிருந்தனர்.
அர்ப்பணிப்போடு மிகத் துணிகரமாக மேற்கொள்ளப்பட்ட போதிலும், ஆயுதப் போராட்டத்தை அப்போது அதிகாரத்தில் இருந்த ஜே.ஆர் ஜயவர்தன அரசு பெரிதாகவோ முக்கியத்துவம் மிக்கதாகவோ கருதவில்லை. அத்தகைய ஒரு சூழலில் நள்ளிரவு வேளையில் இராணுவ வாகனத் தொடரணி மீது கண்ணிவெடித் தாக்குதலுடன் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலில் ஓர் அதிகாரி உட்பட 13 பேர் கொல்லப்பட்டமை ஒரு வகையில் அரசாங்கத்தை அதிர்ச்சி அடையவே செய்திருந்தது. இராணுவத்தினராகிய 13 சிங்களவர்கள் விடுதலைப்புலிகளினால் கொல்லப்பட்டார்கள் என்பது சிங்கள மக்களையும் பதட்டமடையச் செய்திருந்தது.
இவ்வாறு அரசாங்கத்திற்கு ஏற்பட்டிருந்த அதிர்ச்சியும் சிங்கள மக்கள் மத்தியிலான பதட்டமும், ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்த இன அழிப்பு நடவடிக்கைக்கான வன்முறைகளைத் தூண்டிவிடுவதற்கு அப்போதைய ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்திற்கு வாய்ப்பாக அமைந்துவிட்டன. அதற்கு உறுதுணையாக இராணுவத்தினர் மீதான யாழ்ப்பாணத் தாக்குதலையடுத்து, பௌத்த பிக்குகளையும் சாதாரண சிங்கள மக்களையும் விடுதலைப்புலிகள் கொல்லப் போகின்றார்கள் என்றும், தலைநகரில் தாக்குதல் நடத்துவதற்காக விடுதலைப்புலிகள் கொழும்புக்குள் ஊடுருவிவிட்டார்கள் என்றும் பெரிய அளவில் பொய்ப்பிரசாரமும் கட்டவிழ்த்துவிடப்பட்டிருந்தது.
தாக்குதல்களில் கொல்லப்பட்ட படையினருடைய உடல்கள் அவர்களுடைய சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்படுவதே வழக்கம். ஆனால், தேசிய பாதுகாப்புச் சபையின் தீர்மானத்திற்கு அமைய அந்த நடைமுறை அப்போது கடைப்பிடிக்கப்படவில்லை. இதனையடுத்து, விடுதலைப்புலிகளின் தாக்குதலில் கொல்லப்பட்டிருந்த 13 இராணுவத்தினரது உடல்களுக்கும் வழமைக்கு மாறாக ஒரே இடமாக, பொரல்லை கணத்த மயானத்தில் இறுதிக்கிரியைகள் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஆனால் குறிப்பிட்ட நேரத்திற்கு அந்த உடல்கள் அங்கு வந்து சேரவில்லை. மிகுந்த தாமதம் ஏற்பட்டிருந்தது.
இதனால், அந்த இறுதிக்கிரியைகளில் கலந்து கொள்வதற்காக அங்கு 24 ஆம் திகதி காலை முதல் கூடத் தொடங்கி பதட்டத்துக்கு உள்ளாகியிருந்த சிங்கள மக்கள் மத்தியிலேயே விடுதலைப்புலிகள் பற்றிய அச்சந்தரும் வகையிலான பொய்ப்பிரசாரம் செய்யப்பட்டிருந்தது. அந்த மக்களின் பதட்ட உணர்வும் விடுதலைப்புலிகள் தாக்க வந்துவிட்டார்கள் என்ற அச்ச உணர்வும் அவர்களை ஆத்திரமடையச் செய்ததுடன், தமிழ் மக்கள் மீது தாக்குதல்களை நடத்துவதற்குத் தூண்டிவிட்டிருந்தது.
கட்டுக்கடங்காமல் வெடித்த வன்முறைகள்
குண்டர்கள் தாக்குதல்களில் ஈடுபடுவதற்கும், சிங்கள மக்களின் பதட்டத்தையும், அச்சத்தையும் நீடிக்கச் செய்வதற்கும் உதவும் வகையில் விடுதலைப்புலிகள் தாக்குதல்கள் நடத்தப் போகின்றார்கள் என்ற சாரம்சத்தில் பொய்ப்பிரசாரங்கள் நாடெங்கிலும் முடுக்கிவிடப்பட்டிருந்தன.
இதனால் கொழும்பில் மட்டுமல்லாமல், கண்டி உட்பட நாட்டின் பல முக்கிய நகரங்களிலும் மலையகம் உட்பட தமிழர்கள் கலந்து வாழ்ந்த தென்பகுதி மாவட்டங்களிலும் பரவலாக வன்முறைகள் வெடித்திருந்தன. தமிழர்களுக்குச் சொந்தமான வர்த்தக நிலையங்கள், தொழிற்சாலைகள், வீடுகள், வாகனங்கள், என்பன தீயிட்டு கொளுத்தப்பட்டன. எல்லா இடங்களிலும் கொள்ளையிடப்பட்டவை போக மிஞ்சியவை பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்டன.
கத்திகள், கம்புகளுடன், பெட்ரோல் கொள்கலன்களை ஏந்திய கும்பல்கள் கூட்டம் கூட்டமாக நாட்டையும் மக்களையும் பாதுகாக்க கொஞ்ச பெட்ரோலும் எண்ணெயும் தங்கோ என்று கோஷமிட்டவாறு வன்முகைளில் ஈடுபட்டிருந்தன. கட்டிடங்கள் எதுவும் அடித்து நொறுக்கப்படவில்லை. கட்டிடங்கள் மீது குண்டுத் தாக்குதல்கள் எதுவும் நடத்தப்படவில்லை. முழுமையாக சொத்துக்களுக்கும் உடைமைகளுக்கும் சேதம் விளைவிக்கப்பட்டன. இந்த வன்முறைகளில் பெரிய அளவில் உயிர்ச்சேதங்களும் ஏற்பட்டன. பெரும் எண்ணிக்கையானவர்கள் அகதிகளாகினர்.
பல தினங்கள் தொடர்ந்த வன்முறைகளைக் கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கம் ஊரடங்கு சட்டத்தைப் பிறப்பிதிதிருந்தது, ஆனால் ஊரடங்கு வேளையிலும் குண்டர்கள் தடுப்பார் எவருமின்றி சுதந்திரமாக வன்செயல்களில் ஈடுபட்டிருந்தார்கள். ஊரடங்கை நடைமுறைப்படுத்துவதற்காக கடமைய்pல் ஆயுதந்தரித்து கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்த பொலிசாரும் படையினரும், வேடிக்கை பார்த்துக் கொண்ருந்தனரே தவிர, வன்முறையில் ஈடுபட்டிருந்தவர்களைக் கட்டுப்படுத்தவே இல்லை.
நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு, வன்முறைகளில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது பொலிசாரும் படையினரும் ஏன் துப்பாக்கிப் பிரயோகம் செய்யவில்லை என டைம்ஸ் ஒவ் இந்தியா பத்திரிகை, அப்போதைய ஜனாதிபதி ஜயவர்தனவிடம் ஆகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி நேர்காணல் ஒன்றின்போது வினவியது.
‘படையினரிடம் பெரிய அளவில் தமிழர்களுக்கு எதிரான உணர்வு ஏற்பட்டிருந்தது என நான் நினைக்கிறேன். கலகத்;தில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினால், அது சிங்களவர்களுக்கு எதிரான நடவடிக்கையாகப் போய்விடும் என்றும் அவர்கள் (படையினர்) உணர்ந்திருந்தார்கள். உண்மையிலேயே சில இடங்களில் அவர்கள், அவர்களை (கலகக்காரர்களை) ஊக்குவித்திருந்ததை நாங்கள் கண்டோம்…..’ என ஜனாதிபதி பதிலளித்திருந்தார்.
வெலிக்கடை சிறைச்சாலைப் படுகொலைகள்
கறுப்பு ஜுலை வன்முறைகளைத் தூண்டிவிட்டதாகக் கூறப்படுகின்ற இராணுவத்தின் மீதான யாழ்ப்பாணம் திருநெல்வேலி தாக்குதலையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த படையினர் அந்தச் சூழலிலும், ஏனைய இடங்களிலும் கண்மூடித்தனமாக நடத்திய தாக்குதல்களில் மாத்திரம் 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டார்கள். இராணுவத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கும், இராணுவத்தினர் உயிரிழந்தமைக்கும் அளிக்கப்பட்ட முக்கியத்துவம், பொதுமக்கள் பாதிக்கப்பட்ட சம்பவங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்;படவில்லை. அநத சம்பவங்கள் பற்றிய தகவல்கள் இருட்டடிப்பு செய்யப்பட்டிருந்தன. அதனால் ஊடகங்களின் ஊடாக உண்மை நிலைமையை உடனுக்குடன் அறிய முடியா சூழல் ஏற்பட்டிருந்தது.
அப்போது கொழும்பில் இருந்த வெளிநாட்டு செய்தியாளர்கள் கடுமையாகக் கண்காணிக்கப்பட்டார்கள். அவர்கள் தங்களுடைய ஹோட்டல் அறைகளில் இருந்து வெளியில் வருவதற்கும் சில நாட்கள் அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. கட்டுப்பாடுகளை மீறிச் செயற்பட்ட வெளிநாட்டுச் செய்தியாளர்கள் நாட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட சம்பவமும் இடம்பெற்றிருந்தது.
கொழும்பு உட்பட நாட்டின் பல இடங்களிலும் மட்டும் வன்முறைகள் தலைவிரித்தாடவில்லை. குட்டிமணி, தங்கதுரை உள்ளிட்ட முக்;கிய தமிழ் அரசியல் கைதிகள் அடைத்து வைக்கப்பட்டிருந்த வெலிக்கடைச் சிறைச்சாலையிலும், வன்முறைகள் ஊடுருவியிருந்தன. சிறைச்சாலைக்குள்ளே இருப்பவர்களுக்கு ஊடரங்கு சட்டம் இருந்தாலும் ஒன்றுதான் இல்லாவிட்டாலும் ஒன்றுதான். ஏனெனில் சிறைச்சாலை நடைமுறைகளும் சட்ட விதிகளும் கடுமையானவைதானே? குறிப்பிட்ட நேரத்தில் மாத்திரம் குறிப்பிட்ட தேவைகளக்காக மட்டுமே அவர்கள் அடைக்கப்பட்டுள்ள சிறைக்கூட அறைகளில் இருந்து வெளியில் அவர்களுக்கென அனுமதிக்கப்பட்ட பிரதேசத்திற்குள் செல்ல முடியும்.
இந்த நிலையில், ஜுலை 23 ஆம் திகதி பிற்பகல் 2.30 மணி இருக்கும். ஊரடங்கு சட்டம் வெளியில் நடைமுறையில் இருந்தது. வெலிக்கடை சிறைச்சாலையில் பல்வேறு குற்றச் செயல்களுக்காக சிறைவாசம் அனுபவித்த சிங்களக் கைதிகள் அவர்கள் அடைக்கப்பட்டிருந்த அறைகளில் இருந்து வெளியில் கட்டவிழ்த்துவிடப்பட்டார்கள். அவர்கள் குழுக்களாகப் பிரிந்தார்கள். கத்திகள், விறகு கட்டைகள், இரும்புக்கம்பிகள் என்பன அவர்களுடைய கைகளில் இருந்தன. தமிழ் அரசியல் கைதிகள் அடைத்து வைக்கப்பட்டிருந்த பகுதிகளை நோக்கி அவர்கள் ஆக்ரோஷமாகச் சென்றார்கள்.
அப்போது அங்கு குட்டிமணி, தங்கத்துரை ஆகிய மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தவர்கள் உள்ளிட்ட 73 தமிழ் அரசியல் கைதிகள் அங்கு வைக்கப்பட்டிருந்தார்கள். பனாகொட இராணுவ முகாமில் வைக்கப்பட்டிருந்த முக்கிய தமிழ் அரசியல் கைதிகள் இரண்டு வாரங்களுக்கு முன்னர்தான் வெலிக்கடை சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டிருந்தார்கள்.
காட்டுமிராண்டித்தனம்
வெலிக்கடை சிறைச்சாலையின் மாடியில், அந்தக் கைதிகள் அடைக்கப்பட்டிருந்த மண்டபங்கள், அறைகளின் கதவுகளை அடித்து உடைத்துக் கொண்டு கும்பலாகச் சென்ற சிங்களக் கைதிகள் கூச்சலிட்டவாறு உட்பிரவேசித்தார்கள். என்ன நடக்கின்றது என்று உணர்ந்து கொள்வதற்கு முன்பே அங்கிருந்த தமிழ் அரசியல் கைதிகள் அடித்தும் முறித்தும், வெட்டியும் கொத்தியும் சரிக்கப்பட்டார்கள். நிராயுதபாணிகளான அந்த சிறைக்கைதிகள் மூர்க்கத்தனமாக தாக்கப்பட்டதுடன், குற்றுயிரும், குலை உயிருமாக அங்கிருந்து, வெளியில் இழுத்து வந்து அந்தக்கட்டிடத்திற்குள்ளே மைதானம் போன்ற வெளியில் போட்டு கூடிநின்று அவர்களை மேலும் தாக்கிக் குதறினார்கள்.
தாங்கள் இறந்த பின்னர் மலரப்போகும் ஈழத்தைக் காண வேண்டும் என்பதற்காக தங்களுடைய கண்களைத் தானம் செய்திருந்த தங்கத்துரை, குட்டிமணி ஆகியோரின் கண்கள் பிய்த்து எடுக்கப்பட்டு கால்களில் போட்டு மிதிக்கப்பட்டன. அதனைச் சுற்றி நின்று வேடிக்கை பார்த்தவர்கள் வெற்றி கோஷமிட்டு ஆரவாரம் செய்தார்கள். இந்த சம்பவத்தில் 35 தமிழ் அரசியல் கைதிகள் கோரமாகக் கொல்லப்பட்டார்கள்.
இந்த சம்பவத்தின் பின்னர் ஒரு நாள் மிகுந்த பதட்டத்துடன் கழிந்தது. இறந்தவர்கள் போக எஞ்சியிருந்த தமிழ் அரசியல் கைதிகள் தங்களுக்கு என்ன நடக்குமோ என்று அச்சத்தில் உறைந்து போயிருந்தார்கள். இருப்பினும் தங்களுக்கு உணவு உண்பதற்காக வழங்கப்பட்டிருந்த தட்டுகள், போர்த்திக் கொள்வதற்காக வழங்கப்பட்டிருந்த போர்வைகள் அங்கிருந்த மேசையின் மரக்கால்கள் என்பவற்றை ஆயுதங்களாகக் கொண்டு முடிந்த அளவில் போராடுவதற்குத் தயாராக இருந்தார்கள். அந்த நிலையில் 27 ஆம் திகதி இரண்டாவது நாளாக, தமிழ் அரசியல் கைதிகள் மீது சிங்களக் கைதிகள் தமது காடைத்தனமான தாக்குதல்களை நடத்தினார்கள்.
இந்தத் தாக்குதலின்போது, இலகுவில் தமிழ்க் கைதிகளை அவர்களால் முதல் நாளைப் போன்று வெளியில் இழுத்துச் செல்ல முடியவில்லை. போராட்டத்தின் பின்னர் இழுத்துச் செல்லப்பட்;ட, காந்தியத்தைச் சேர்ந்த டாக்டர் ராஜசுந்தரம் உள்ளிட்;ட 18 பேர் காடடுமிராண்டித்தனமாக அடித்துக் கொல்லப்பட்டார்கள்.
சிறைச்சாலைக்குள்ளே நடைபெற்ற இந்த மிருகத்தனமான தாக்குதல்கள் குறித்தும், தண்டனைக் கைதிகள் உள்ளிட்ட தமிழ் அரசியல் கைதிகள் படுகொலை செய்யப்பட்டமை குறித்தும், அரசாங்கம் எந்தவிதமான சட்ட நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. நீதித்துறையின் பொறுப்பில் சிறைச்சாலை அதிகாரிகளின் நேரடி கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்த 53 தமிழ் அரசியல் கைதிகள் படுகொலை செய்யப்பட்டமை மிக மோசமான மனித உரிமை மீறலாக வரலாற்றில் பதிவாகியிருக்கின்றதே தவிர, அத்தகைய சம்பவங்கள் மீண்டும் இடம்பெறாத வகையில் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படவே இல்லை.
கறுப்பு ஜுலை வன்முறைகளின்போது இடம்பெற்ற கொள்ளை, படுகொலைகள், தீவைப்பு போன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்கள் அடையாளம் காணப்படவி;ல்லை. இந்த வன்முறைகளின் பின்னர், ஆகஸ்ட் மாதம் 4 ஆம் திகதி, வெலிக்கடை சிறைச்சாலை சம்பவங்கள் குறித்து எதிர்க்கட்சியினர் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினர். அந்த மோசமான சம்பவங்களைத் தடுத்து நிறுத்தவதற்கு ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அவர்கள் வினவினர்.
அதற்கு, ‘ஒரு சிங்களக் கைதியும் கூட அந்த சம்பவத்தில் கொல்லப்பட்டாரே…..’ என்பதே அப்போதைய பிரதமர் பிரேமதாசவின் பதிலாக இருந்தது என்று நாடாளுமன்ற கூட்டப்பதிவில் – ஹேன்சார்டில் பதிவாகியுள்ளது.
கறுப்பு ஜுலை வன்முறைகள் அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்காக மூன்று அரசியல் கட்சிகள் சர்வதேச சதித்திட்டத்தின் ஊடாக அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்காக சதி செய்திருக்கின்றன என்று அரசாங்கம் அறிக்கை வெளியிட்டிருந்தது.
ஆகஸ்ட் மாதம் 22 ஆம் திகதி ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தன நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில், நாட்டின் ஜனாதிபதிக்கும், அரசாங்கத்திற்கும் எதிராக வன்முறையான மனங்கொண்டவர்களாகத் தூண்டிவிடுவதற்கான நடவடிக்கைகளை நக்ஸலைட்டுகள் என்றழைக்கப்படுகின்ற குழுவினர் மேற்கொண்டிருந்தனர் என்பதற்கான சான்றுகள் கிடைத்துள்ளன என்று தெரிவி;த்திருந்தார்.
அப்போதைய ஜனாதிபதியும், பிரதமரும், அரசாங்கமும், கறுப்பு ஜுலை சம்பவங்களின் உண்மையான நிலைமைகளை மறைத்து திசைதிருப்புகின்ற நடவடிக்கைகளில் பகிரங்கமாகவே ஈடுபட்டிருந்தார்கள் என்பதை அவர்கள் அப்போது தெரிவித்திருந்த கருத்துக்கள் பட்டவர்த்தனமாக வெளிப்படுத்தியிருந்தன.
கறுப்பு ஜுலையின் பின்னரான நிலைமைகள்
கறுப்பு ஜுலை வன்முறைகள் பற்றிய உண்மையைக் கண்டறிவதற்கான விசாரணைகள் காலம் தாழ்த்தியே நடத்தப்பட்டன. இருப்பினும் அந்த விசாரணைகளில் கண்டறியப்பட்ட உண்மைகளும், கற்றறிந்த பாடங்களும் அத்தகைய வன்முறைகள் மீண்டும் இடம்பெறாத வகையில் தடுப்பதற்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயமும், நியாயமான இழப்பீடும் வழங்கப்படுவதற்கு வழிவகுக்கவில்லை. மாறாக சிறுபான்மையினராகிய தமிழ் மக்கள் மீது நடத்தப்பட்ட 83 ஜுலை மாத இனவெறித் தாக்குதலைப் போன்றே மூன்று தசாப்தங்களுக்குப் பின்னர் நாட்டின் இன்னுமொரு சிறுபான்மையினராகிய முஸ்லிம்கள் மீது மத ரீதியான தாக்குதல்கள் நடத்தப்பட்டிருக்கின்றன. ஒன்றுக்கும் மேற்பட்ட முறைகளில் பல்வேறு காரணங்களை முன்வைத்து இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டிருக்கின்றன.
நாட்டையும் சிங்கள மக்களையும் சர்வதேச ரீதியில் தலைகுனியச் செய்த 83 கறுப்பு ஜுலை வன்முறைகளைப் போன்ற சம்பவங்களின் ஊடாக சிறுபான்மையினராகிய தமிழ் மக்களை இனரீதியாக ஒடுக்கி ஓர் இனச்சுத்திகரிப்பை மேற்கொள்வதை பேரினவாத அரசியல்வாதிகளும் அரசியல் தலைவர்களும் தவிர்த்துள்ளார்கள். மாறாக, அரசியல் ரீதியாக நுணுக்கமான மாற்று வழிகளின் ஊடாக இனசசுத்திகரிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதை மரபு ரீதியான வழிமுறையாகக் கொண்டிருக்கின்றார்கள்.
இந்த வகையிலேயே தமிழ் மக்களின் அரசியல் உரிமைக்கான போராட்டம் பயங்கரவாதமாகச் சித்தரிக்கப்பட்டு அண்டை நாடாகிய இந்தியா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகளையும் சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகளையும் உதவிக்கு நாடி, அவர்களின் இராணுவ, பொருளாதார உதவிகளின் மூலம் விடுதலைப்புலிகளை மகிந்த ராஜபக்ச அரசாங்கம் இராணுவ ரீதியாக அழித்து ஒழித்தது.
யுத்தம் முடிவடைந்த பின்னரும், இனப்பிரச்சினைக்கும் ஏனைய எரியும் பிரச்சினைகளுக்கும் தீர்வுகளைக் காணாமல் சாக்கு போக்குகளைக் கூறியும் நொண்டிச்சாட்டுக்களை முன்வைத்தும் அரசுகள் காலம் கடத்தி வருகின்றன. அத்துடன் தமிழ் மக்களின் தாயக மண்ணை அபகரித்தும், புத்தர் சிலைகளையும் பௌத்த விகாரைகளையும் தமிழ் மக்கள் செறிந்து வாழும் இடங்களில் நிர்மாணித்தும், சிங்களக் குடியேற்றங்களை அமைத்தும் இனப்பரம்பலை தலைகீழாக்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது.
இந்த நடவடிக்கைகள் 83 கறுப்பு ஜுலையின் திட்டமிட்ட வன்முறை சார்ந்த இனஅழிப்பு நடவடிக்கைகளாக அல்லாமல், இராஜதந்திர நகர்வுகளாகவும், அரசியல் தந்திரோபாயச் செயற்பாடுகளாகவும் முன்னெடுக்கப்படுகின்றன. இவற்றுக்கு கறுப்பு ஜுலையே ஆரம்ப சுழியிட்டிருந்தது என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.