குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
யாழ்.செம்மணியில் மீட்கப்பட்ட எலும்புக்கூட்டு எச்சங்களை அடையாளம் காண முடியாத அளவில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. யாழ்.செம்மணி பகுதியில் நீர்த்தாங்கி அமைப்பதற்காக நிலத்தினை அகழ்ந்த போது , கடந்த வெள்ளிக்கிழமை மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் மீட்கபட்டன.
அதனை தொடர்ந்து கிராம சேவையாளர் ஊடாக யாழ். காவல்துறையினருக்கு சம்பவம் தொடர்பில் அறிவிக்கப்பட்டதை, சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து யாழ்.நீதிவான் நீதிமன்றுக்கு அறிக்கையிட்டனர்.
அதன் பிரகாரம் சனிக்கிழமை சம்பவ இடத்திற்கு சென்ற யாழ்.நீதிவான் நீதிமன்ற நீதிவான் சி. சதிஸ்தரன் விசாரணைகளை மேற்கொண்டதுடன் , அகழ்வினை மேற்கொண்டு ஆய்வுகளை முன்னெடுக்க உத்தரவிட்டார்.
அதன் அடிப்படையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ். போதனா வைத்திய சாலை சட்டவைத்திய அதிகாரி ந.மயூரதன் தலைமையிலான குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று இருந்த போது , யாழ். காவல்நிலைய பெருங்குற்ற தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி சம்பவ இடத்திற்கு சமூகம் அளிக்காததால் , அன்றைய தினம் அகழ்வு பணிகளை முன்னெடுக்காது அவர்கள் திரும்பி இருந்தனர்.
இந்நிலையில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை காலை எலும்புக்கூட்டு எச்சங்கள் மீட்கபட்ட பகுதிகளில் சட்டவைத்திய அதிகாரி, வைத்திய அதிகாரியின் குழுவினர்கள், தடயவியல் காவல்துறையினர் ஆகியோர் இணைந்து காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரையில் அகழ்வு பணிகளில் ஈடுபட்டனர்.
எலும்புக்கூட்டு எச்சங்கள் இருந்ததாக அடையாளப்படுத்தப்பட்ட பகுதியின் மேற்பரப்பை இயத்திரத்தின் (பெக்கோ) உதவியுடன் அகழ்ந்து எலும்புக்கூட்டு எச்சங்கள் காணப்பட்ட பகுதிகளை சுற்றி மண் வெட்டி மற்றும் சிறு உபகரணங்களால் மண் அகழப்பட்டது.
அதன் போது நில மட்டத்தில் இருந்து 75 சென்ரி மீற்றர் (இரண்டரை அடி ) ஆழத்தில் எலும்புக்கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்டன. மண்டையோட்டின் பின் பகுதி , கால் மூட்டின் சில பகுதிகள் என சொற்ப அளவிலான எலும்புக்கூட்டு எச்சங்களே மீட்கப்பட்டன. இடுப்பு பகுதி , தாடை பகுதி. முள்ளந்தண்டு பகுதிகள் , உள்ளிட்ட பெருமளவான பகுதிகள் மீட்கப்படவில்லை.
இதனால் மீட்கபட்ட எலும்பு கூட்டு எச்சங்கள் ஆணினதா ? பெண்ணினதா ? என்பதனை கூட உடனடியாக அறிய முடியாத நிலை காணப்படுகின்றது. ஏனைய எலும்புகூட்டு எச்சங்கள் முன்னதாக அகழ்ந்து செல்லப்பட்ட மண்ணுடன் சென்று இருக்கலாம். அல்லது உக்கி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.
இதேவேளை எலும்புக்கூட்டு எச்சங்கள் மீட்கபட்ட பகுதியில் மேலும் அகழ்வுகள் நடத்தப்பட்டன. 150 சென்ரி மீற்றர் (ஐந்தடி) வரையில் மண் அகழ்ந்து பரிசோதிக்கப்பட்டது. அதன் போது வேறு எச்சங்கள் மீட்கப்படவில்லை.மீட்கபட்ட எலும்பு கூட்டு எச்சங்கள் பாதுகாக்கப்பட்ட நிலையில் அங்கிருந்து எடுத்து செல்லப்பட்டன. அவை மருத்துவ ஆய்வுகளுக்கு உட்படுத்திய பின்னரே மேலதிக தகவல்களை தெரிவிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டது.
எலும்புக்கூட்டு எச்சங்கள் மீட்கபட்ட பகுதி 1987 ஃ 89 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இந்திய இராணுவத்தின் பிரச்சனம் உள்ள இடமாக இருந்ததாகவும் , அதன் பின்னரான கால பகுதிகளில் விடுதலைப்புலிகளின் கட்டுபாட்டில் இருந்து பின்னர் 1995ஆம் ஆண்டு யாழ்.குடாநாட்டை இராணுவத்தினர் கைப்பற்றிய பின்னர் இராணுவ கட்டுப்பாட்டு பகுதியாக காணப்பட்டதாகவும், இராணுவ கட்டுபாட்டில் இருந்த கால பகுதியில் எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதி ஊடாக இராணுவத்தினரின் முன்னரங்க பாரிய மண் அரண் காணப்பட்டதாகவும் அயலவர்கள் தெரிவித்துள்ளனர்.