யாழ்ப்பாணத்தில் 14 ஆயிரம் வரையிலான இராணுவத்தினர் நிலைகொண்டுள்ளதாக யாழ் மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜென்ரல் தர்சன ஹெட்டியாராட்சி தெரிவித்துள்ளார்..
கொழும்பு ஊடகம் ஒன்றின் கேள்விக்கு பதிலளித்த போது இதனைத் தெரிவித்துள்ள அவர் யாழ்ப்பாணத்தில் தற்போது 51, 52, 55 ஆகிய படைப்பிரிவுகளே நிலைகொண்டுள்ளதாகவும், அவற்றைச் சேர்ந்த 14 ஆயிரம் வரையிலான படையினர் தனது கட்டுப்பாட்டில் செயற்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக 2017ஆம் ஆண்டு யாழ் மாவட்ட கட்டளைத் தளபதியாக தான் பதவி ஏற்றதன் பின்னர் இந்த எண்ணிக்கையில் குறைப்பு மேற்கொள்ளப்படவில்லை என்பதனையும் உறுதிப்படுத்தி உள்ளார்.
2009 ஆம் ஆண்டு யுத்தம் உச்சக் கட்டத்தில் இருந்த போது யாழ் குடாநாட்டில் 45 ஆயிரம் படையினர் நிலைகொண்டு இருந்ததாக தெரிவித்த அவர், 18 மாதங்களுக்கு பின்னர் பின்னர் படிப்படியாக படைக்குறைப்பு இடம்பெற்றதாகவும் கூறியுள்ளார்.
2014 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மேஜர் ஜென்ரல் உதய பெரேரா யாழ் கட்டளைத் தளபதியாக பொறுப்பேற்ற பொது படையினரின் எண்ணிக்கை 14600 ஆக இருந்தது எனவும் 2015 தேர்தலுக்கு முன்னதாகவே படைக்குறைப்பு இடம்பெற்று இருந்ததாகவும் கூறிய கட்டளைத் தளபதி தர்சன ஹெட்டியாராட்சி வடக்கில் இருந்து படையினரின் எண்ணிக்கை குறைக்கப்படுகிறது என வெளியாகியுள்ள தகவல் பொய்யானது எனவும் தெரிவித்தார்…