குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…
நாட்டை சமஷ்டி நாடாக மாற்ற அரசாங்கம் கொண்டு வரும் புதிய அரசியலமைப்புச் சட்டத்தை நாடாளுமன்றத்தில் தோற்கடிக்க கூட்டு எதிர்க்கட்சி விரிவான வேலைத்திட்டத்தை உருவாக்கியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
அரசியலமைப்புச் சட்ட வாக்க குழு புதிய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியதாக அரசாங்கம் கூறினாலும் அதில் ஜயம்பதி விக்ரமரத்ன மற்றும் சுமந்திரன் ஆகியோரின் தேவைகளே உள்ளடக்கப்பட்டுள்ளன.10 பேர் அடங்கிய சட்ட நிபுணர்கள் குழுவின் கருத்துக்களை பெற்று புதிய அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டதாக அரசாங்கம் கூறியது. எனினும் புதிய அரசியலமைப்புச் சட்டம் தொடர்பான வரைவு யோசனையில் 5 பேரின் கையெழுத்துக்கள் மட்டுமே உள்ளன.
இதனடிப்படையில், குழுவில் அங்கம் வகித்த அரைவாசி பேர் கையெழுத்திடவில்லை. புதிய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கி நாட்டை பிளவுப்படுத்தும் நோக்கத்தை நிறைவேற்ற முயற்சித்து வருகின்றனர் என்பது தெரியவந்துள்ளது. நாட்டை நேசிக்கும் எதிர்க்கட்சியில் உள்ள சகல நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, புதிய அரசியலமைப்புச் சட்டத்தை தோற்கடிக்க நடவடிக்கை எடுப்போம் எனவும் மகிந்தானந்த அளுத்கமகே குறிப்பிட்டுள்ளார். (திவயின)