தனது பதவிக் காலத்திற்குள் உலகளாவிய ரீதியில் ஊழலுக்கு எதிராக செயற்படும் நாடுகளின் பட்டியலில் இலங்கையை முதலாம் இடத்திற்கு கொண்டுவருவதே தனது நோக்கமாகும் என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார். இன்று (25) முற்பகல் கொழும்பில் ஆரம்பமான ஜகர்த்தா கோட்பாடுகள் தொடர்பாக ஐக்கிய நாடுகளின் விசேட குழுவினரின் கலந்துரையாடலில் பிரதம அதிதியாக கலந்துகொண்டபோதே ஜனாதிபதி ; மேற்கண்டவாறு தெரிவித்தார்.
உலகம் முழுவதும் ஊழலுக்கு எதிராக செயற்படும் நிறுவனங்களைப் பலப்படுத்தும் நோக்கில் 2012ஆம் ஆண்டு இந்தோனோசியாவின் ஜகர்த்தா நகரில் ஒன்றுகூடிய 88 நாடுகளை சேர்ந்த நிறுவனங்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட புரிந்துணர்வுகள் ஜகாரத்தா கோட்பாடுகள் என்று அழைக்கப்படுவதுடன் அங்கு வெளியிடப்பட்ட பிரகடனத்தை வலுவூட்டும் நோக்கத்துடன் கொழும்பில் இம்முறை மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டது.
அதிகாரமும் ஊழலும் ஒன்றுடன் ஒன்று பிணைந்துள்ள சங்கிலி போன்றது என தெரிவித்த ஜனாதிபதி ;, இலஞ்சம், ஊழல் குற்றங்கள், போதைப்பொருட்கள் ஆகியன உலகளாவிய ரீதியில் வளர்ச்சியடைந்த மற்றும் வளர்ச்சி அடைந்துவரும் நாடுகள் முகங்கொடுக்கும் பாரிய சவாலாகும் என தெரிவித்தார்.
2015 ஜனாதிபதி தேர்தல் வெற்றியடைந்ததன் பின்னர் தேர்தலுக்கு முன் வழங்கிய வாக்குறுதிக்கு அமைவாக ஜனாதிபதி பதவியின் வரையறையற்ற அதிகாரங்களை குறைப்பதற்கான தனது செயற்பாடுகளை நினைவுகூரிய ஜனாதிபதி அவர்கள் தான் பதவியேற்றபோது 18ஆம் திருத்தச் சட்டத்தின் கீழ் மன்னராட்சிக்கு இணையான அதிகாரங்கள் ஜனாதிபதி பதவிக்கு வழங்கப்பட்டிருந்தமையினையும் நினைவூட்டினார்.
சுயாதீன ஆணைக்குழுக்களை நிர்மாணித்து இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய சுயாதீன விசாரணை ஆணைக்குழு உள்ளிட்ட நிறுவனங்கள் நாட்டில் நிர்மாணிக்கப்பட்டமை நாட்டு மக்கள் அடைந்த வெற்றியாகும் என தெரிவித்த ஜனாதிபதி தொலைபேசியூடாக நீதிபதிகளுக்கு அரசியல்வாதிகளால் தீர்ப்புகளை முன்கூட்டியே அறிவித்த யுகம் இதனூடாக நிறைவடையச் செய்யப்பட்டதாகவும் தெரிவித்தார்.
இலங்கையில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அமைக்கப்பட்டு 25 ஆண்டுகள் கடந்துள்ள போதிலும் நாட்டில் இலஞ்சம் மற்றும் ஊழலை கட்டுப்படுத்துவதற்கு போதுமான அதிகாரங்கள் அந்நிறுவனங்களுக்கு இருக்கவில்லை என்பதை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி 19ஆம் திருத்தத்தின் ஊடாக பூரண சுயாதீனமுடைய இலஞ்ச மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுக்களை அமைக்க முடிந்துள்ளதாக தெரிவித்தார்.
ஊழலுக்கு எதிரான ஐக்கிய நாடுகளின் அமைப்பு உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளுடன் பயணித்தல் தனது அரசாங்கத்தின் நோக்கமாகும் என வலியுறுத்திய ஜனாதிபதி வெளிநாடுகளில் மறைந்திருக்கும் பாரியளவிலான ஊழல்களில் ஈடுபட்ட ஊழல்வாதிகளை சட்டத்தின் முன் கொண்டுவர சர்வதேச நிறுவனங்களின் தலையீட்டையும் ஒத்துழைப்பையும் எதிர்பார்ப்பதாகவும தெரிவித்தார்.