குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…
அராலி பகுதிகளில் மரத்திற்கு மரம் தாவி திரியும் குள்ளர்கள் மக்கள் மீது தாக்குதல் நடத்துவதனால் மக்கள் பீதியில் உறைந்துள்ளனர். குறித்த குள்ளர்கள் மரத்திற்கு மரம் தாவி திரிந்து பெண்கள், குழந்தைகளை இலக்கு வைத்து தாக்குதல் நடாத்துவதுடன், வீடுகள் மீதும் கல் வீச்சிலும் ஈடுபடுவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
அராலி ஐயனார் ஆலயத்தை சூழவுள்ள பகுதிகளில் கடந்த சில வாரங்களாக இந்த குள்ளர்களின் நடமாட்டம் காணப்படுவதாகவும் , குள்ளர்கள் மக்கள் மீது தாக்குதல் நடத்துவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் இந்த குள்ளர்கள் பகுதிகளில் உள்ள வீட்டு கூரைகள் மீது தாவி திரிவதாகவும் , அதன் போது மக்கள் அவல குரல் எழுப்பும் போது கூரையில் இருந்து மதிலுக்கு பாய்ந்து மரங்களுக்கு மரங்கள் தாவி பாய்ந்து ஓடுவதாகவும் தெரிவிக்கின்றனர்.
சிலர் அவர்களை துரத்தி சென்ற போது அவர்கள் அராலித்துறை நோக்கி ஓடித்தப்பியதாகவும், அவர்கள் கைகளில் கைக் கோடரி காணப்படுவதாகவும் தெரிவித்தனர்.
அத்வேளை கடந்த சில தினங்களுக்கு முன்னர் கடல் தொழிலுக்கு சென்ற ஒருவரை வீதியில் மறித்த மிக குள்ளமான தோற்ற முடைய இருவர் அவரை விசாரித்துள்ளனர்.
குறித்த சம்பவங்கள் தொடர்பில் வட்டுக்கோட்டை காவற்துறையினருக்கு முறைப்பாடு செய்யப்பட்டு உள்ளது. கடந்த ஆட்சி காலத்தில் கிறீஸ் பூதம் , கிறீஸ் ஜெக்காவின் நடமாட்டங்கள் இலங்கை பூராகவும் உள்ள மக்களை அச்சத்தில் உறைய வைத்து இருந்தமை குறிப்பிடத்தக்கது.