இந்தியாவில் உற்பத்தியாகும் 343 கலவை மருந்துகளை தடை செய்ய மத்திய அரசின் மருந்து தொழில்நுட்ப ஆலோசனைக் குழு பரிந்துரை செய்துள்ள நிலையில் அந்த மருந்துகளின் உற்பத்தி மற்றும் விற்பனைக்கு தடை விதிக்கப்பட வாய்ப்புள்ளதாகக் தெரிவிக்கப்படுகின்றது. மருந்து தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவின் பரிந்துரையின் பேரில், கடந்த 2016-ம் ஆண்டு மொத்தம் 349 வகை கலவை மருந்துகளுக்கு மத்திய அரசு தடைவிதித்திருந்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அந்த மருந்துகளைத் தயாரிக்கும் நிறுவனங்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில் துணைக்குழு ஒன்றினை அமைத்து 349 மருந்துகளுக்கான தடையை மறுபரிசீலனை செய்யுமாறு கடந்த டிசம்பர் மாதம் உத்தரவிட்டிருந்தது.
இதன்படி, ஆய்வு மேற்கொண்ட துணைக்குழு, அவற்றில் 343 மருந்துகளை தடை செய்ய தற்போது பரிந்துரைத்துள்ளது. இதில் பல்வேறு பெருநிறுவனங்கள் தயாரிக்கும் பல பிரபல மருந்துகளும் இடம்பெற்றுள்ளன. இந்தப் மருந்துகள் தொடர்பான பரிந்துரைக்கு பல்வேறு சமூக சேவை அமைப்புகள் வரவேற்பு தெரிவித்துள்ளன.