பாகிஸ்தானில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கானின் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி 116 இடங்களில் வெற்றி பெற்றுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.
பாகிஸ்தானில் கடந்த 25-ம் திகதி நடைபெற்று முடிவடைந்த நாடாளுமன்றத் தேர்தலில் இம்ரான் கானின் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி சுமார் 115 தொகுதிகளில் முன்னிலை பெற்றதாக தேர்தல் ஆணையகம் ஏற்கனவே உத்தியோகபூர்வமாக அறிவித்து இருந்தது.
தேர்தலில் எவ்வித முறைகேடுகளும் நடக்கவில்லை என தெரிவித்துள்ள பாகிஸ்தான் தேர்தல் ஆணையகம் 272 தொகுதிகளில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் 116 தொகுதிகளில் இம்ரான் கானின் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி வெற்றி பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளது. 66 தொகுதிகளில் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரிப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி வெற்றி பெற்றுள்ளது.
அத்துடன் மாகாண தேர்தலின் முடிவுகளை அறிவித்துள்ள தேர்தல் ஆணையம், பஞ்சாப் மாகாணத்தில் சுமார் 129 தொகுதிகளில் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி வெற்றி பெற்றுள்ளது எனவும் சிந்து மாகாணத்தில் 76 தொகுதிகளில் பாகிஸ்தான் மக்கள் கட்சியும், கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் 66 தொகுதிகளில் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சியும், பலோசிஸ்தான் மாகாணத்தில் 15 தொகுதிகளில் அவாமி கட்சி வெற்றி பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
எனினும் இந்த தேர்தல் முடிவுகளை, நவாஸ் ஷரிப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி உட்பட சில எதிர்க்கட்சிகள் வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்திருப்பதாக குற்றம் சுமத்தி ஏற்க மறுப்பு தெரிவித்து வருகின்றன.
தேர்தல் முடிவு மக்கள் தீர்ப்பின் அடிப்படையில் வெளியிடப்படவில்லை எனவும் மக்களின் தீர்ப்பு இம்ரான்கான் கட்சியினரால் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ள எதிர்க்கட்சிகள் நாடு முழுவதும் போராட்டம் நடத்த இருப்பதாகவும் அறிவித்துள்ளனர்.
அதேவேளை ஊழல் வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் நவாஸ்செரீப் தேர்தல் திருடப்பட்டு விட்டது எனவும் பாராளுமன்றத்தை தங்களது கட்சி புறக்கணிக்குமா என்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை எனத் தெரிவித்துள்ளார்.