131
நாட்டின் எதிர்காலம் குறித்து இரண்டு முக்கியஸ்தர்கள் எச்சரிக்கை செய்துள்ளார்கள். உள்நாடு என்ற தளத்தில் இருந்தும், சர்வதேச தளத்தில் இருந்தும் இந்த எச்சரிக்கை வெளிவந்திருக்கின்றது. இது வெறுமனே அரசியல் சார்ந்ததல்ல. அரசியல் பிரசாரத்தை நோக்கமாகக் கொண்டு வெளியிடப்பட்டதுமல்ல. அரசியலுக்கு அப்பால் நாட்டின் எதிர்கால நன்மையில் உண்மையான அக்கறை என்ற தளத்தில் இருந்து இந்த எச்சரிக்கை வெளியிடப்பட்டிருக்கின்றது. அந்த வகையில் இது முக்கியத்துவம் பெறுகின்றது,
ஆனால் இது குறித்து எவரும் பெரிய அளவில் கவனம் செலுத்தியதாகத் தெரியவில்லை. தனித்தனியாக நோக்கப்பட்டிருக்கின்ற போதிலும், அரசியல் பொதுவெளியில் இந்த இரண்டு தளங்களையும் ஒன்றிணைத்த வகையில் இந்த விடயம் முக்கியத்துவம் பெற்றிருப்பதாகவும் கூற முடியவில்லை. நாட்டின் அரசியல் நிலைமைகள் குறித்தும். நாட்டின் சுபிட்சமான எதிர்காலம் குறித்தும் அவ்வப்போது, அரசியல் நலன்களின் அடிப்படையில் வெளியிடப்படுகின்ற எச்சரிக்கைகளைப் போல இந்த எச்சரிக்கையும் பத்தோடு பதினொன்றாகக் கருதப்பட்டிருப்பதையே காண முடிகின்றது.
இந்த எச்சரிக்கையை விடுத்திருப்பவர்களில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரணதுங்க ஒருவர். மற்றவர் பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான ஐநாவின் விசேட அறிக்கையாளர் பென் எமர்ஸன் என்பது குறிப்பிடத்தக்கது.
பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் தேசிய சமாதானப் பேரவை ஒழுங்கு செய்திருந்த தேசிய நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவது தொடர்பில் இடம்பெற்ற கலந்துரையாடல் நிகழ்வில் கலந்து கொண்டிருந்த முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரணதுங்க, தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வில்லையேல், வடக்கில் மீண்டும் பிரச்சினை ஏற்படலாம் என்று எச்சரித்துள்ளார்.
அதேவேளை, ஐநா மனித உரிமைகள் பேரவையின் 30 – 1 தீர்மானம் முழுமையாக நிறைவேற்றப்படுவது அவசியம். தொடர்ந்து நிலவுகின்ற தண்டனை விலக்கீட்டுச் சூழலும், பொறுப்பு கூறப்பட வேண்டிய யுத்தகால மற்றும் யுத்தத்தின் பின்னரான காலத்து, பாரதூரமான மனித உரிமை மீறல்களும் அவசரமாகத் தீர்வு காணப்பட வேண்டியவையாகும். பாதுகாப்புத் துறையில் மறுசீரமைப்பும், சர்வதேச ஒழுங்குக்கு அமைவாக பயங்கரவாதத்திற்கு எதிரான சட்டம் மாற்றியமைக்கப்பட வேண்டியதும் முக்கியம் என சுட்டிக்காட்டியுள்ள பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான ஐநாவின் விசேட அறிக்கையாளர் பென் எமர்ஸன், இந்தப் பிரச்சினைகளுக்குப் பயனுறுதிமிக்க வகையில், உடனடியாகத் தீ;ர்வு காணாவிட்டால், தற்போதைய சந்ததியினர் பிரச்சினைகளுக்கு கொடுத்துள்ள விலையிலும் பார்க்க எதிர்கால சந்ததியினர் அதிக விலையைக் கொடுக்க நேரிடும் என்று கூறியுள்ளார்.
அரசியல் தளத்தில் இருந்தும் சர்வதேச மனித உரிiமை தளத்தில் இருந்தும் கரிசனை மிக்க வகையில் இந்த எச்சரிக்கை வெளிவந்திருக்கின்றது என்பது மிகவும் முக்கியமானது.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரணதுங்க ஓர் அரசியல்வாதி. அரசியல் பாரம்பரியமுள்ள ஒரு குடும்பத்தில் உதித்தவர். அதேவேளை, நாட்டின் தலைவராகச் செயற்பட்டு, இனப்பிரச்சினையின் தாக்கத்தை உணர்ந்தவர். இனப்பிரச்சினை காரணமாக எழுந்த யுத்தத்திற்கு முகம் கொடுத்தவர். நேரடியாக யுத்தத்தின் தாக்கத்திற்கு ஆளாகியவர். தேர்தல் கூட்டம் ஒன்றில் அவருடைய உயிருக்கு இலக்கு வைத்து நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் தெய்வாதீனமாக உயிர்தப்பியவர். அந்த சம்பவத்தில் படுகாயமடைந்து தனது ஒரு கண்ணை நிரந்தரமாக இழந்தவர். அந்த வகையில் இனப்பிரச்சினையினதும், இனப்பிரச்சினை காரணமாக எழுந்த யுத்தத்தினதும் வடுவை சுமந்து வாழ்பவர்.
அரசியலில் நேரடியாகவும், தீவிரமாகவும் ஈடுபடாவிட்டாலும்கூட நாட்டின் அரசியல் போக்கிலும், நாட்டு மக்களின் எதிர்காலத்திலும் அவர் மிகுந்த அக்கறை கொண்டிருப்பதைக் காண முடிகின்றது. நாட்டில் சர்வாதிகாரம் தலைதூக்கியதையடுத்து, முன்னைய ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்து ஜனநாயகம் தழைத்தோங்கவும், நாட்டில் நல்லாட்சி உருவாகுவதற்கும் அரசியல் ரீதியான ஆபத்துக்ளுக்கு மத்தியில் துணிந்து பணியாற்றியவர். அத்துடன் யுத்தத்திற்குப் பின்னர் நாட்டில் தேசிய நல்லிணக்கத்தை உருவாக்குவதற்கான செற்திட்டங்களுக்குப் பொறுப்பேற்றுச் செயற்பட்டு வருபவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள் உறுதிப்படுத்தப்பட வேண்டும்
தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள் மாறி மாறி ஆட்சிக்கு வந்த அரசாங்கங்களினால் மறுக்கப்பட்டதுடன், அவர்கள் மீதான அடக்குமுறைகள் வளர்ச்சிப் போக்கில் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன. அது மட்டுமல்லாமல், உரிமைகளுக்காக சாத்வீக வழியிலும், ஆயுதமேந்தியும் போராடிய தமிழ் மக்கள் மீது இன ஒடுக்குமுறையும், இன அழிப்பு நடவடிக்கையும் திட்டமிட்ட வகையில் மறைமுகமான நிகழ்ச்சி நிரலின் கீழ் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நடவடிக்கைகள் நாளுக்குநாள் அதிகரித்துச் செல்கின்றனவே தவிர, குறைவடைவதற்கான அறிகுறிகளைக் காண முடியாதுள்ளது.
பிரச்சினைகளைத் தீர்த்து, நாட்டில் இன ஐக்கியத்தையும், ஒற்றுமையையும் மேலோங்கச் செய்வதற்கான நடவடிக்கைகள் அத்திபூத்தது போலவே இடம்பெறுகின்றன. வெறும் கண்துடைப்புக்காக அந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றனவே தவிர, உளப்பூர்வமாக, இதய சுத்தியுடன் பல்லினங்களையும் ஒன்றிணைத்த வகையிலான தேசிய நலன்களைக் கருத்திற் கொண்டு முன்னெடுக்கப்படவில்லை.
ஆட்சி அதிகாரத்தையும், அரசியல் அந்தஸ்தையும் நிரந்தரமாக நிலைநிறுத்திக் கொள்வதற்கான சுயலாப அரசியல் நோக்கத்துடன், கட்சி அரசியலை முதன்மைப்படுத்திய அரசியல் போக்கே நிலவுகின்றது. இதற்கு, எந்தவிதமான கூச்சமும் இல்லாமல், மனிதாபிமானத்தைக் கைவிட்ட நிலையில், இனவாதத்தையும் மதவாதத்தையும் உத்தியாகக் கையாள்வதும் காலம் காலமாக நிகழ்ந்து வருகின்றது.
இந்த நிலைமைகளில் மாற்றம் ஏற்பட வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரணதுங்க கூறியுள்ளார். இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னர் நாடுகளில் இனங்களுக்கிடையில் ஏற்பட்டிருந்த பிரச்சினை இப்போது இனங்கள் தங்களுடைய அடையாளங்களை உறுதிப்படுத்திக் கொள்வதற்கானதாக மாறியிருக்கின்றது என குறிப்பிட்டுள்ள அவர், அந்த வகையில்:, தமிழ் மக்கள் வடக்கிலும் கிழக்கிலும் தமது அடையாளங்களை உறுதிப்படுத்திக் கொள்வதற்காகவும், அரசியல் உரிமைகளுக்காகவும் சமாதான முறையிலும் ஆயுதமேந்தியும் போராடினார்கள் எனவும், யுத்தம் முடிவுக்கு வந்த பின்னரும் அந்த மக்களுடைய பிரச்சினைகள் தீர்த்து வைக்கப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டியிருக்கின்றார்.
தனிநபர் என்ற வகையிலும், மக்கள் என்ற வகையிலும், நாடு என்ற வகையிலும் அனைவரினதும் பன்முகத்தன்மை ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியிருக்கின்றார். அதேவேளை, அனைவரினதும் இனம், மதம். உரிமைகள் என்பவற்றுடன் நல்லிணக்கமும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்றும், இவற்றைப் புறக்கணிக்கும்போதே பிரச்சினைகள் உருவாகின்றன என்பதையும் அவர் எடுத்துக்காட்டியிருக்கின்றார்.
தமிழ் மக்கள் தமது மொழி, மத உரிமைகளை அனுபவிப்பதற்கான உரித்துடையவர்கள். என்பதை அங்கீகரித்து அவர்கள் தமது அரச அலுவல்களைத் தமது மொழியாகிய தமிழ் மொழியில் மேற்கொள்வதற்கான சூழல் ,ஏற்படுத்தப்பட வேண்டும். நாட்டில் பன்முகத்தன்மை ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். அது மட்டுமல்லாமல் அரச தொழில்வாய்ப்புக்களில் இனவிகிதாசாரம் பேணப்பட வேண்டும். குறைந்த அளவிலான தொழில்வாய்ப்புக்கள் வழங்கப்படும்போதுகூட, தமிழ் மக்களுக்கு அதிக உரிமை வழங்கப்பட்டுவிட்டது என்று கூச்சலிடுவது நிறுத்தப்பட வேண்டும் என்ற வகையில் தேசிய நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவது தொடர்பிலான தேசிய சமாதானப் பேரவையின் நிகழ்வில் உரையாற்றியபோது சந்திரிகா குமாரணதுங்க கருத்து வெளியிட்டுள்ளார்.
முக்கியமாக தமிழ் மக்களுடைய இன, மத, அரசியல் உரிமைகள் அரசியலமைப்பின் ஊடாக உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்பதையும் அவர் குறிப்பிட்டிருக்கின்றார்.
நாட்டின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாகப் பதவி வகித்தபோது, தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளை வழங்குவதற்குத் தவறிவிட்ட சந்திரிகா குமாரணதுங்க, காலம் கடந்த பின்னர் தமிழ் மக்களுக்கான உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என்று போதனை செய்வதைப் போன்று கருத்து வெளியிட்டிருக்கினறார் என்று அவர் விமர்சிக்கப்படாமல் இல்லை. இருந்த போதிலும், இனப்பிரச்சினைக்கு ஓர் அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்ற தேவை அதிகரித்துள்ள அரசியல் சூழலில் அவருடைய கருத்துக்கள் முக்கியத்துவம் பெற்றிருக்கின்றனன. அந்தக் கருத்துக்களுக்கு ஆட்சியாளர்களும் பொறுப்பு மிக்கவர்களும் செவிசாய்க்க வேண்டியதும் அவசியமாகும்.
நிலைமைகள் குறித்த ஆழமான கண்டுபிடிப்பு
பொறுப்பு கூறும் விடயத்தில் உடனடியாக உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால் எதிர்கால சந்ததியினர் பெரும் பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க நேரிடும் என்று தெரிவித்துள்ள பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான ஐநாவின் விசேட அறிக்கையாளர் பென் எமர்ஸன் கடந்த வருடம் இலங்கைக்கு விஜயம் செய்திருந்தார்.
அந்த விஜயத்தின்போது, அவர் பல இடங்களுக்கும் சென்று, பல்வேறு தரப்பினரையும் நேரடியாகச் சந்தித்துக் கலந்துரையாடி நாட்டின் உண்மையான நிலைமைகள் என்ன என்பதைக் கண்டறிந்திருந்தார். சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளையும் சநதித்து, பயங்கரவாதத் தடைச்சட்டம், யுத்தம் முடிந்த பின்னரும் நாட்டில் எந்த அளவுக்கு செல்வாக்கு பெற்றிருக்கின்றது. சித்திரவதை நடவடிக்கைகள் எந்த அளவுக்கு மோசமடைந்திருக்கின்றன என்பதற்கான ஆதாரபூர்வமான தகவல்களைத் திரட்டியிருந்தார்.
இலங்கைக்கான விஜயத்தை முடித்துக் கொண்டு அவர் ஜெனிவா திரும்பியதும் இலங்கையின் நிலைமைகள் குறித்து கருத்து வெளியிட்டிருந்தார். இப்போது அந்த விஜயம் தொடர்பில், தனது அவதானிப்புகளையும் பரிந்துரைகளையும் உள்ளடக்கிய விரிவான அறிக்கை ஒன்றை அவர் வெளியிட்டிருக்கின்றார். பயனளிக்கத்தக்க வகையில் இப்போது உடனடியாகச் செயற்படாவிட்டால். இலங்கையின் எதிர்கால சந்ததியினர் இப்போதுள்ள நெருக்கடிகள் பிரச்சினைகளைவிட மோசமான நிலைமைகளுக்கு முகம் கொடுக்க நேரிடும் என்று அவர் எச்சரிக்கை செய்திருக்கின்றார்.
பென் எமர்ஸன், கடந்த வருடம் ஜுலை மாதம் 10 ஆம் திகதி தொடக்கம் 14 ஆம் திகதி வரையில் மேற்கொண்ட விஜயமானது, பயங்கரவாதத்திற்கு எதிரானதும், உள்நாட்டு இன முரண்பாடுமான யுத்தம் முடிவடைந்ததன் பின்னர், இலங்கை தனது கொள்கைகள், சட்டங்கள், நடைமுறைகள் என்பவற்றில் சர்வதேச மனித உரிமைகள் சட்டத்திற்கு அமைவாக எத்தகைய முன்னேற்றத்தை அடைந்துள்ளது என்பதை மதிப்பிடுவதற்காகவே அமைந்திருந்தது.
இலங்கையில் நிரந்தரமான சமாதானத்தை நிலைநிறுத்துவதற்கு, இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துதல், தண்டனை விலக்கு பெறுகின்ற ஆட்சிக்கு முடிவு காணுதல், உரிமை மீறல்களுக்குப் பொறுப்பு கூறுவதை உறுதிப்படுத்தல் என்பவற்றில் ஏற்படுகின்ற முன்னேற்றம், வழிசமைக்கவல்லவை என்ற அடிப்படையில் இந்த விஜயத்தை பென்ஸன் மேற்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
வரலாற்றில் ஒருபோதும் இல்லாத அளவில் அவர் அரச உயர் மட்டத்தில் பிரதமர், ஜனாதிபதியின் செயலாளர், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், வெளிவிவகார அமைச்சர், சட்டம் ஒழுங்கு மற்றும் தென்மாகாண அபிவிருத்திக்குப் பொறுப்பான அமைச்சர், மீள்குடியேற்றம், புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, இந்து விவகார அமைச்சர், முப்படைகளின் முக்கிய உயர் மட்டத் தளபதிகள், பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவர் பொலிஸ் மா அதிபர் புலனாய்வு பொலிஸ் பிரினின் தலைவர், பயங்கரவாதப் புலனாய்வு பிரிவின் தலைவர், நீதி அமைச்சர், பிரதம நீதியரசர், சட்டமா அதிபர், கொழும்பு, அனுராதபுரம், வவுனியா நகரங்களில் உள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழான வழக்குகளை விசாரணை செய்யும் நீதிபதிகள் மட்டுமல்லாமல், அந்த வழக்குகளில் முன்னிலையாகும் பலதரப்பட்ட சட்டத்தரணிகள், அனுராதபுரம், வெலிக்கடைசிறைச்சாலையில் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் உள்ளிட்ட பலதரரப்பினரையும் அவர் சந்தித்துக் கலந்துரையாடி நிலைமைகளைத் தெரிந்து கொண்டார்.
தமிழ் அரசியல் கைதிகளிடம் அவர் சிறைச்சாலைகளுக்குள் தனித்தனியாகச் சந்திப்புகளை சுதந்திரமாக மேற்கொண்டு அவர்களின் நிலைமைகளைக் கேட்டறிந்துள்ளார் என்பதும், அவர்களின் குடும்பங்கள் மற்றும் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் என்போரையும் அவர் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். இந்தச் சந்திப்புகளின் மூலம், ஆரம்ப நிலையில் தான் கண்டறிந்தவற்றை தனது விஜயத்தின் முடிவு தினத்தன்று அரசாங்கத்துடன் பகிர்ந்து கொள்ளவும் அவர் தவறவில்லை.
பரந்த அளவிலான இந்தச் சந்திப்புக்களின் ஊடாக பென் எமர்ஸன் வேறு எந்தவொரு இராஜதந்திரியையும், அல்லது மனித உரிமைச் செயற்பாட்டாளரையும்விட பயங்கரவாதத் தடுப்பு நடவடிக்கைகள் சம்பந்தப்பட்ட அரசாங்கத்தினதும், பாதிக்கப்பட்டவர்கள் உள்ளிட்ட வேறு வேறு வழிகளில் அவற்றுடன் நேரடியாகத் தொடர்புடையவர்களினதும் உண்மையான நிலைப்பாடுகளைக் கண்டறிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பரிந்துரைகள்
இனரீதியான பிரிவினைகள் நிலவுகின்ற சூழலில், பல்வேறு நிலைகளில் பாதுகாப்பு சம்பந்தமான பாரிய சவால்களை பலரும் எதிர்கொண்டுள்ளனர். இதனால், சிக்கலான உள்ளக ஆயுத முரண்பாட்டை நீண்ட வரலாறாக இலங்கை கொண்டிருக்கின்றது. இனப்பிரிவினைகளினாலும், இனப்பிரச்சினை காரணமாகவும், அரசியல், பொருளாதார, சமூக, கலை, கலாசார ரீதியாக பதட்ட நிலைமை காணப்படுகின்றது என்பதைத் தான் கண்டறிந்துள்ளதாக பென் எமர்ஸன் தெரிவித்துள்ளார்.
இத்தகைய ஒரு பின்னணியில், ஐநூவின் 30 – 1 தீர்மானம் முழுமையாக நிறைவேற்றப்பட வேண்டும் என்பதை அவர் சுட்டிக்காட்டியிருக்கின்றார். குற்றங்கள் புரியப்பட்டிருந்த போதிலும் தண்டனை விலக்கீட்டு உரிமையை அனுபவிக்கின்ற போக்கிற்கு முடிவு காணப்படுவதுடன், பாரதூரமான மனித உரிமை மீறல்கள் சர்வதேச மனிதாபிமான சட்ட மீறல்கள் என்பவற்றுக்குப் பொறுப்பு கூறப்பட வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தியுள்ளார். பாதுகாப்பு என்ற விடயத்தில் எதிர்கொள்ளப்படுகின்ற சிவில் நிலையிலான சவால்கள், சிக்கல்கள் காரணமாக பாதுகாப்புத்துறை மறுசீரமைக்கப்படுவதுடன், பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கப்பட்டு, சர்வதேச நடைமுறைக்கு அமைவாகப் புதிய சட்டம் உருவாக்கப்பட வேண்டும் என்பதையும் அவர் தனது அறிக்கையில் வற்புறுத்தியிருக்கின்றார்.
யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுவிட்ட போதிலும், பல வருடங்கள் கடந்த நிலையிலும் இழுறபறி நிலையில் உள்ள பொறுப்பு கூறுகின்ற கடப்பாடு காரணமாகவும், அதனோடு இணைந்த வேறு பல நடவடிக்கைகள் உரிய முறையில் சரியான நேரத்தில் எடுக்கப்படாத காரணத்தினாலும் பல்வேறு நெருக்கடிகள் உருவாகி இருக்கின்றன என்பது பென் எமர்ஸனின் முடிவாகும்.
கடந்த 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல்கள் நாட்டின் நிலைமைகளில் ஒரு திருப்பு முனையாக அமைந்தன. மாற்றங்களைக் கொண்டு வருவதாக அநதத் தேர்தல்களில் உறுதியளிக்கப்பட்டது, மோசமான மனித உரிமை மீறல்கள, போர்க்குற்றச் சார்ந்த சர்வதேச மனிதாபிமான சட்டமீறல்களுக்குப் பொறுப்பு கூறுவதாக உறுதியளித்து, ஐநா மனித உரிமைகள் பிரேரணைக்கு புதிய அரசு இணை அனுசரணை வழங்கியது. அதன் மூலம் உண்மையைக் கண்டறிதல், நீதியை நிலைநாட்டுதல், நிhவரணம் வழங்குதல், மீள் நிகழாமையை உறுதி செய்தல் ஆகிய நான்கு அம்சங்களைக் கொண்ட நிலைமாறுகால நீதிக்கான பொறிமுறைகளை உருவாக்கி, பொறுப்பு கூறுகின்ற கடப்பாட்டை நிறைவு செய்வதாக அரசு உத்தரவாதம் அளித்திருந்தது.
ஆனால். மேலும் ஒரு பிரேரணையின் மூலம் இரண்:டு வருடங்கள் அவகாசம் அளித்தும்கூட பொறுப்பு கூறும் விடத்திலும், அதனோடு சேர்ந்த நிலைமாகால நீதியை நிலைநாட்டுவதிலும், உண்மையான முன்னேற்றங்களை உறுதிப்படுத்தும் வகையில் எந்தவொரு நடவடிக்கையும் ஆக்கபூர்வமாக மேற்கொள்ளப்படவில்லை என்பது பென் எமர்ஸனின்; கருத்தாகும்.
இந்த நிலையில் பரந்துபட்டதாக 22 பரிந்துரைகளை முன்வைத்துள்ள பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான ஐநாவின் விசேட அறிக்கையாளர் பென் எமர்ஸன், அந்தப் பரிந்துரைகள் பயனுறுதிமிக்க வகையில் உடனடியாகச் செயற்படுத்தப்பட வேண்டும் என்று இடித்துரைத்துள்ளார். அவற்றை நிறைவேற்றத் தவறும்பட்சத்தில் எதிர்கால சந்ததியினர் மிக மோசமான நிலைமைகளை எதிர்கொள்ள நேரிடும் என்றும் எச்சரித்துள்ளார்.
பயங்கரவாதத் தடைச்சட்டத்தை சட்டப்புத்தகங்களில் இருந்து அகற்றி, அதனை முழுமையாக இல்லாமல் செய்வதற்கான மாற்று நடவடிக்கைகள் எடுக்கப்படும் வரையில், புதிதாக ஆட்களைக் கைது செய்யும் நடவடிக்கைகளில் அந்தச்சட்டத்தை உடனடியாகத் தடை செய்ய வேண்டும்.
பயங்கரவாதத் தடைச்சட்டத்திற்குப் பதிலாக உருவாக்கப்படுகின்ற சட்டம் சர்வதேச நியமங்களுக்கு உட்பட்டதாக அமைந்திருக்க வேண்டும் என்பது அவருடைய பரிந்துரைகளில் முதன்மை பெற்றிருக்கின்றது.
பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்களின் விடயம் சட்டரீதியாக மீளாய்வு செய்யப்படவேண்டும். அவர்களின் தடுப்புக்காவலின் சட்டத்தன்மையும் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் பரிந்துரைத்திருக்கின்றார்.
அது மட்டுமல்லாமல், பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் அச்சாணியாகிய ஒப்புதல் வாக்குமூலம் அவர்களுக்கு எதிரான விசாரணைகளில் முக்கிய சாட்சியமாகப் பயன்படுத்தக் கூடாது என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்பதும் அவருடைய பரிந்துரைகளில் முக்கியமானது என்பது குறிப்பிடத்தக்கது.
பாதுகாப்புப் பிரிவின் நிறுவனங்கள் அனைத்தும் சிவில் மயப்படுத்தப்படும் வiயில் மறுசீரமைப்படுவதுடன், மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட அந்த நிறுவனங்களைச் சேர்ந்த அனைத்து அதிகாரிகளையும் சேவையில் இருந்து நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதுடன் பாதுகாப்புத் துறையில் இனவிகிதசாரதத்தின் அடிப்படையில் ஆளணி இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டிருக்கின்றது .
நம்பிக்கையைக் கட்டியெழுப்பவும், நல்லெண்ணத்தை உறுதி செய்வதற்குமான அடையாளமாக வடக்கிலும் கிழக்கிலும் நிலவுகின்ற இராணுவ சூழல் இல்லாமல் செய்யப்பட வேண்டும் என்றும்
பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான ஐநாவின் விசேட அறிக்கையாளர் பென் எமர்ஸன் பரிந்துரைத்திருக்கின்றார். அவருடைய பரிந்துரைகளை எந்த அளவுக்கு அரசு ஏற்றுச் செயற்படுத்தும் என்பது தெரியவில்லை.
அதேபோன்று நாட்டின் எதிர்காலம் குறித்து முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரணதுங்க மற்றும் பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான ஐநாவின் விசேட அறிக்கையாளர் பென் எமர்ஸன் ஆகியோரின் எச்சரிக்கையில் உள்ள தீவிரத்தன்மையை அரச தரப்பினர் எந்த அளவுக்கு உணர்ந்து செயற்படுவார்கள் என்பதையும் கூற முடியாதுள்ளது.
Spread the love