குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
செங்குந்த இந்துக் கல்லூரி மைதானத்தில் நடுகை செய்யப்பட்ட மரக்கன்றுகள் விஷமிகளால் அழிக்கப்பட்டுள்ளன. தேசிய மர நடுகைத் திட்டத்தின் கீழ் செங்குந்த இந்துக் கல்லூரி மைதானத்தில் நடுகை செய்யப்பட்ட சுமார் 75 இற்கும் மேற்பட்ட மரக் கன்றுகளே இவ்வாறு உழுது அழிக்கப்பட்டன. கடந்த புதன்கிழமை (25) இடம்பெற்ற இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் அறிய வருவதாவது
தேசிய மர நடுகை மாதத்தை முன்னிட்டு ஆளுநர் அலுவலகத்தின் ஏற்பாட்டில் செங்குந்தா இந்துக் கல்லூரி மைதானத்தின் எல்லைப் பகுதியில் சுமார் 90 மரக் கன்றுகள் நடுகை செய்யப்பட்டன. பட்டுபோனவை தவிர எஞ்சிய மரங்களே இவ்வாறு உழுது அழிக்கப்பட்டுள்ளன.
மறுநாள் வியாழக்கிழமை (26) காலை மைதானத்துக்கு சென்ற மாணவர்கள் மரக் கன்றுகள் அழிக்கப்பட்டமை தொடர்பில் அதிபருக்கு தெரிவித்தனர். இதையடுத்து இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிலையத்திலும், பிரதேச செயலகத்திலும் பாடசாலை நிர்வாகத்தால் முறைப்பாடு செய்யப்பட்டது. மேலும் ஆளுநர் செயலகத்துக்கும் கடிதம் அனுப்பப்பட்டது.
இதேவேளை பாடசாலை மைதானத்தில் இரவு வேளைகளில் கூடும் இளைஞர் குழுக்கள் மைதானத்தில் கூடி மதுபானம் அருந்துவதுடன் வெற்றுப் போத்தல்களை அங்கேயே வீசிச் செல்கின்றனர். இதனால் மாணவர்கள் தினமும் அசௌகரியங்களை எதிர்கொள்கின்றனர் எனவும் கூறப்பட்டது.